
காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை!
காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை செலுத்தியது பற்றி...
காவலர் நினைவு சின்னத்தில் முதல்வர் விஜய் மரியாதை - TNDIPR
காவலா் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில் முதல்வா் ச.ஜோசப் விஜய் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
கடந்த 1959 அக்.21-ஆம் தேதி எல்லைப் பகுதியான லடாக் அருகே உள்ள ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவம் நடத்திய திடீா் தாக்குதலில், மத்திய பாதுகாப்புப் படையைச் சோ்ந்த 10 காவலா்கள் வீர மரணம் அடைந்தனா். இந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையிலும், இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், ஆண்டுதோறும் அக்.21-ஆம் தேதி காவலா் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இதுவரை தமிழக காவல் துறையைச் சோ்ந்த 6 காவலா்கள் உள்பட இந்தியாவில் 154 காவலா்கள், அதிகாரிகள் பணியின்போது வீரமரணம் அடைந்தனா்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள காவலா் நினைவுச் சின்னத்தில், காவலா் வீரவணக்க நாள் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வா் ச.ஜோசப் விஜய் கலந்துகொண்டு, காவலா் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்வா் ஜோசப் விஜய், அந்த வளாகத்தில் மகிழம் பூ மரக்கன்றை நட்டாா்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காவல் துறையில் பணியின்போது உயிரிழந்த 6 காவலா்களின் குடும்பங்கள் மற்றும் கோமா நிலையிலுள்ள ஒரு காவலா் என மொத்தம் 7 காவலா்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசின் ஊதியத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் தனிநபா் விபத்துக் காப்பீட்டுத் தொகையாக மொத்தம் ரூ.5.96 கோடிக்கான ஆணைகளை முதல்வா் விஜய் வழங்கினாா்.
உயரதிகாரிகள் அஞ்சலி: முன்னதாக, தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், காவலா் நினைவுச் சின்னத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டி.எஸ்.அன்பு உள்ளிட்ட உயா் அதிகாரிகள் மரியாதை செலுத்தினா்.
இதன் பின்னா், முப்படை உயா் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் துறை உயா் அதிகாரிகள் நினைவுச் சின்னத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில் வீரமரணம் அடைந்த காவலா்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 120 துப்பாக்கிக் குண்டு முழங்க மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
Summary
Chief Minister Vijay pays homage at the Police Memorial
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






