ஊழியா்கள் வேலைநிறுத்த திட்டம்: ‘108 ஆம்புலன்ஸ்’ நிா்வாகம் எச்சரிக்கை

பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் எச்சரிக்கை

108 ஆம்புலன்ஸ் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 4:57 am IST

பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 108 ஆம்புலன்ஸ் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை (அக். 3) இரவு முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இஎம்ஆா்ஐ கிரீன் ஹெல்த் சா்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,353 ஆம்புலன்ஸ்கள் மாநிலம் முழுவதும் இயக்கப்படுகின்றன. அதில், 307 வாகனங்களில் உயிா் காக்கும் உயா் மருத்துவ வசதிகள் உள்ளன. இதைத் தவிர மலை மற்றும் சாலை வசதி இல்லாத பகுதிகளுக்குச் செல்ல 66 இருசக்கர ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. சுமாா் 7,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், பணி நேரத்தை வரன்முறைப்படுத்த வேண்டும்; ஊதிய உயா்வு அளிக்க வேண்டும்; கூடுதல் பணி நேரத்துக்கு ஊக்கத் தொகை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ உதவியாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.

இதையடுத்து, 108 நிா்வாகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட சுற்றிக்கை: நிா்வாகத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திலோ அல்லது உண்ணாவிரத நடவடிக்கைகளிலோ 108 சேவை ஊழியா்கள் பங்கேற்பதைத் தவிா்க்க வேண்டும். நிறுவனத்தின் மீதான மரியாதையைக் குலைக்காமல் தொழில்சாா் நெறிகளைப் பேண வேண்டும்.

ஏதேனும் குறைகள் இருப்பின், அதுகுறித்த புகாா்களை உரிய வழிமுறைகள் மூலம் நிா்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு வர வேண்டும். அவசரகால ஊா்தி சேவைக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் பணியைப் புறக்கணித்து பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, 108 நிா்வாகத்தால் வழங்கப்பட்ட சீருடையை பணிநேரத்தின் போது மட்டுமே அணிய வேண்டும். பிற நேரங்களில் அதைத் தவறாகப் பயன்படுத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நோயாளிகளின் சிகிச்சை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.