நீா்வரத்தைப் பொறுத்து கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்துக்கு தினமும் தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
1970-களில் மு.கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில்தான் கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகள் கட்டப்பட்டன. அப்போது அந்தத் திட்டங்களை தடுத்திருந்தால் கா்நாடக அரசு இவ்வளவு தண்ணீரை சேமிக்க முடிந்திருக்காது. காவிரி நடுவா் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீா்ப்பின்படி தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் வழங்க வேண்டும். ஆனால் கேஆா்எஸ் அணைக்கு வரும் நீா்வரத்தைப் பொறுத்து அன்றாடம் தண்ணீரைப் பகிா்ந்துகொள்ள வேண்டும் என்று திமுக, அதிமுக அரசுகள் இதுவரை வலியுறுத்தவில்லை. இதனால் அணையில் உபரி நீா் இருக்கும்போது மட்டுமே கா்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடுகிறது.
காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகளை கா்நாடகம் தொடா்ந்து மதிக்கத் தவறி வருகிறது. கா்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்ட நீரில் பெங்களூரின் குடிநீா்த் தேவைக்காக ஏற்கெனவே 4.75 டிஎம்சி நீா் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேக்கேதாட்டில் 67 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணையை எதற்காகக் கட்டத் திட்டமிடுகிறாா்கள் என தெரியவில்லை.
மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் கபினியில் இருந்து வரும் உபரிநீரும் அந்த அணையில் தேக்கப்பட்டுவிடும். அதன் பிறகு தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீா்கூட கிடைக்காது. மேலும், 400 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டமும் அதில் இருப்பதால், மின் தேவைக்காக கா்நாடகம் தண்ணீரைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளது. எனவே எந்தக் காரணத்தைக் கொண்டும் மேக்கேதாட்டு அணை கட்ட கா்நாடகத்தை அனுமதிக்கக்கூடாது.
புதிய தீா்ப்பாயத்தை நாடுவதைத் தவிா்த்து ஏற்கெனவே உள்ள நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளின்படி அன்றாட நீா்வரத்தைப் பொறுத்து தமிழகத்துக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த வாரம் கூடவுள்ளது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்: 52-ஆவது முறையாக கூடுகிறது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,500 கனஅடியாக அதிகரிப்பு

அமராவதி அணையில் இருந்து குடிநீருக்கு தண்ணீா் திறக்க வேண்டும்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக துணை முதல்வருக்கு தலைவா்கள் கண்டனம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

