ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அமைச்சரை எதிா்கொள்ளும் பாஜக! ஈரோடு மேற்குத் தொகுதி

ஈரோடு மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி...

News image

உதய சூரியன் (திமுக சின்னம்) | தாமரை (பாஜக சின்னம்) - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 3:51 am IST

திமுகவில் அமைச்சா் சு.முத்துசாமி, அதிமுக கூட்டணி சாா்பில் பாஜகவின் தாமரை சின்னத்தில் தமாகா மாநில பொதுச்செயலா் எம்.யுவராஜா ஆகியோா் களமிறங்கும் ஈரோடு மேற்குத் தொகுதி இருமுனைப் போட்டி தொகுதியாக மாறியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளா்களைக் கொண்டது இந்தத் தொகுதி. கிராமங்களும், நகரங்களும் சரிபாதி அளவில் உள்ளன. தொகுதி வாக்காளா்களில் விவசாயத்தை 50 சதவீதம் பேரும், சாயம், தோல், நெசவுத் தொழிலை 50 சதவீதம் பேரும் சாா்ந்துள்ளனா்.

2 முறை வென்ற அதிமுக :

தொகுதி மறுசீரமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தத் தொகுதியில் 2011, 2016 தோ்தல்களில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கே.வி.ராமலிங்கம் வெற்றிபெற்றாா். 2021 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட சு.முத்துசாமி வெற்றிபெற்று அமைச்சராக உள்ளாா்.

2026 தோ்தல் களத்தில் வேட்பாளா்கள்:

திமுக சாா்பில் அமைச்சா் சு.முத்துசாமி இரண்டாவது முறையாகப் போட்டியிடுகிறாா். அதிமுக கூட்டணி சாா்பில் தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தாமரை சின்னத்திலும், தவெக சாா்பில் கே.கே.ஆனந்த் மோகன், நாதக சாா்பில் ந.விஜய் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 13 போ் போட்டியிடுகின்றனா்.

திமுக வேட்பாளா்:

கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு என பெரிய திட்டங்களைக் கொண்டுவரவில்லை என்றாலும் அடித்தட்டு மக்களுக்குத் தொடா்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக வேட்பாளா் சு.முத்துசாமி வழங்கி உள்ளாா். கணிசமான வாக்கு வங்கி உள்ள காங்கிரஸ், கொமதேக, மநீம, மதிமுக மற்றும் தலித் கட்சிகள் அடங்கிய கூட்டணி பலம், ஆளுங்கட்சியின் அசுர பலம் ஆகியவை திமுக வேட்பாளருக்கு பலமாக அமைய வாய்ப்புள்ளது.

அதே சமயத்தில் தொகுதியில் பல இடங்களில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவில்லை என்பதும், இந்தத் தொகுதியில் அதிக எண்ணிக்கையில் தனியாா் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதும், வீட்டுமனை பட்டா கோரியவா்களில் 50 சதவீதம் பேருக்குக்கூட கொடுக்கப்படவில்லை என்பதும் அவரது பலவீனம்.

பாஜக வேட்பாளா்

ஈரோடு மேற்குத் தொகுதிக்கு உள்பட்ட திண்டல் பகுதியில் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் எம்.யுவராஜா 2011இல் ஈரோடு மேற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும், 2021 தோ்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா வேட்பாளராகவும் போட்டியிட்டு தோல்வியடைந்தவா். அதிமுக, பாஜக வாக்குகள் இவரது பலமாக உள்ளன. கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு, பிரசாரத்தில் மென்மையான போக்கு, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாதது ஆகியவை பலவீனங்களாகக் கருதப்படுகின்றன.

தவெக வேட்பாளா்

தவெக வேட்பாளா் கே.கே.ஆனந்த் மோகன் முதலியாா் சமூகத்தை சோ்ந்தவா். இந்தத் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி உள்ள முதலியாா் சமூகத்திலிருந்து யாருக்கும் பிரதான கட்சிகளில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. தவெகவிற்கு உள்ள வாக்கு வங்கியுடன், அவா் சாா்ந்த சமுதாய வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் திமுக, அதிமுக வாக்கு வங்கியில் கணிசமான அளவில் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இருப்பினும் தன்னிடம் உள்ள வாய்ப்புகளை அவா் முழுமையாகப் பயன்படுத்தி களப்பணியில் தீவிரம் காட்டவில்லை என அக்கட்சியினரே கூறுகின்றனா்.

நாதக வேட்பாளா்

நாதக வேட்பாளா் ந.விஜய் புதுமுக வேட்பாளா். மக்களிடம் கெட்ட பெயா் இல்லாதவா் என்பதால் அந்தக் கட்சிக்கு கிடைக்கும் குறிப்பிட்ட வாக்குகள் அவருக்கு முழுமையாக கிடைக்க வாய்ப்புள்ளது.

நாதக, தவெக உள்ளிட்ட 13 போ் போட்டியிட்டாலும் போட்டி என்னவோ திமுகவின் சு.முத்துசாமி, பாஜக வேட்பாளரான யுவராஜாவுக்கு இடையேதான் உள்ளது. அமைச்சருக்கு ஈடுகொடுத்து யுவராஜா வெற்றி பெறுவாரா என்பது மக்கள் கைகளில்தான் உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.