மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுப் பாதிப்புகள் நீங்க...

நான் முகநூல் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன்.

News image
Updated On :15 மார்ச் 2026, 3:54 pm IST

நான் முகநூல் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவன். அதில் வரும் பல உணவக விளம்பரங்களில் காணும் வகைகளைப் பார்த்து ஆசைப்பட்டு பல இடங்களுக்கும் சென்று ஆர்வமாகச் சாப்பிடுகிறேன். இதனால் வயிற்றுப் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனாலும் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வயிறு நன்றாக ஒத்துழைக்க என்ன செய்வது?

-சம்பத், கொரட்டூர்.

ஸூச்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் கூறும் கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும். அவர் கூறுவதாவது: உணவும் பானமும் உடலில் உள்ள வாயு, பித்தம், கபம், ரத்தம் இவற்றைத் தனித்தும் சேர்த்தும் கெடுத்து உடல் நோய்களை ஏற்படுத்துகின்றன. விருப்பும் வெறுப்பும் பல்வேறு உருப்பெற்று கோபம், சோகம், பயம், மகிழ்ச்சி, துயரம், பொறாமை, அசூயை, ஏக்கம், அழுக்காறு, வேட்கை, பேராசை முதலிய மனக்கிளர்ச்சிகளை உண்டாக்கி, மன நோய்களை ஏற்படுத்துகின்றன.

மனித உடலின் நிலையானது சூழ்நிலை, பருவம், உழைப்பின் தராதரம், மனநிலை முதலியவற்றால் அடிக்கடி மாறக்கூடியது. இத்தகைய மாறிய சூழ்நிலைக்கேற்ப உடலுக்கு உணவை அமைத்துக் கொடுக்க வேண்டும். அது கெட்டியாகவோ நீர்த்ததாகவோ தேவைப்படலாம். முகநூல் வழியாக உணவகப் பண்டங்களை ருசித்துச் சாப்பிட்டு வயிறு பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு வயிற்றில் உள்ள சூடு - வாயு (காற்று ஸஞ்சாரம்), திரவக்கசிவு - நெய்ப்பு - காலம் (நேரம்) மற்றும் ஸமயோகம் (உணவின் சீரிய அமைப்பு) எனும் ஆறு செயல்பாடுகளின் சீரற்ற நிலையே காரணமாகின்றன.

உங்களுடைய முகநூல் உணவு எதுவாக இருந்தாலும், அதை உடல் ஏற்க வேண்டுமானால், அதற்கு ஒரு ரசாயன சாலை தேவைப்படுகிறது. அந்த ரசாயன சாலையில் அநேக இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றின் உதவியால்தான் நாம் உண்ணும் உணவுகள் பிரிக்கப்பட்டு, மாற்றப்பட்டு, உடலின் தேவைக்குத் தகுந்த மாதிரி அங்கீகரிக்கப்படுகின்றன. அதில் மிக முக்கிய அங்கமாக கல்லீரல் பல வேலைகளைச் செய்கிறது.

உணவுப் பொருள்களில் இருக்கும் கொழுப்பு வஸ்துகளை ஜீரணம் செய்ய பித்தம் தேவைப்படுகிறது. அது கல்லீரலில் இருந்துதான் உண்டாகிறது. விஷத்தன்மை உள்ளவற்றை வடிகட்டி வைத்துக் கொள்கிறது. இப்படி பல நல்ல வேலைகளைச் செய்யும் கல்லீரலை நீங்கள் நாக்கு சபலத்தால் கெடுத்துக் கொள்ளலாமா?

நீங்கள் எங்குச் சென்று எதைச் சாப்பிட்டாலும் இறுதியில் மோர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளவும். உங்களால் ஆசையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வயிறு நன்றாக ஒத்துழைக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேட்பதால், முகநூல் வழி உணவு விளம்பரங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது.

மோர் ஒரு பூரணமான உணவுப் பொருள். மோரின் மூலப்பொருளான தயிர் மூளையில் சுறுசுறுப்பைக் குறைக்கும். ஆகவே மூளை வளர்ச்சிக்குப் பெரிதும் பயன்படாது. ஆனால், அதிலிருந்து கடைந்தெடுத்த மோர் மூளைக்கு நல்லது. உடல், புலன்கள், மனம், ஆத்மா இவை ஒவ்வொன்றின் வளர்ச்சியிலும் உதவக்கூடியது. யோகியும், போகியும், உழைப்பாளியும், சோம்பேறியும், நோயாளியும், நோயற்றவனும், சிறுவனும், கிழவனும் உன்னத்தக்க உணவு மோரும் மோர் சாதமும்.

செரிமானக் கேந்திரம் விரைவில் கெட்டு விடுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் ஏற்படுத்தி வருவதால் இரவில் சுக்கு, மல்லி, சீரகம், ஓமம் போட்டுக் காய்ச்சிய வெந்நீரை பருகிய பிறகு படுத்து உறங்குவது நல்லது. வயிறும் கல்லீரலும் சுறுசுறுப்புடன் வேலை செய்ய இந்த வெந்நீர் மருந்து உதவும்.

அஷ்ட சூரணம், ஹிங்குவசாதி சூரணம் போன்ற மருந்துகளை ஒன்றிரண்டு சிட்டிகை வாயினுள் போட்டு கரைத்துச் சாப்பிடுவதையும் வழக்கமாக்கிக் கொள்ளவும். இதனால் பின்னாளில் ஏற்பட வாய்ப்புள்ள குடல் அலர்ஜி உபாதை, கிருமித் தொற்று, பேதி போன்ற உபாதைகளை நீங்கள் பெருமளவில் தவிர்த்துவிடலாம். கிராணி உபாதை, அஜீரணக் கோளாறுகள், மப்பு நிலை போன்றவற்றை மருந்துகளின் மூலம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.