எனக்கு வயது 66. இரவில் சில ஆண்டுகளாக தூக்கம் ஒரே சீராக வருவதில்லை. 4 - 5 மணி நேரம்தான் வருகிறது. அப்படி தூக்கம் வந்தாலும் சிறுநீர் கழிக்க 2 மணி நேரத்துக்கு ஒருமுறை எழ வேண்டியுள்ளது. இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதற்கும் சிறுநீர் குறைவாக வருவதற்கும் மருந்து உள்ளதா?
- ஆர் சுப்பிரமணியம், திருப்பூர்.
இந்த உபாதைக்கு 'பகுமூத்திரம்' என்று பெயர். திரிபலாதி கஷாயம் என்ற ஒரு மருந்தை நீங்கள் தயாரித்துச் சாப்பிடுவது நல்லது. கடுக்காய்த் தோல், தாணிக்காய்த் தோல், நெல்லிமுள்ளி, மூங்கில் இலை, கோரைக்கிழங்கு, பாடைக் கிழங்கு (சிலர் இதற்குப் பதிலாக வட்டத்திருப்பி என்னும் கடைச்சரக்கைப் பயன்படுத்துவர்). இவற்றைச் சம எடையில் எடுத்துக்கொண்டு இடித்து, அந்தச் சூரணத்தில் நூறு கிராம் எடுத்து, முக்கால் லிட்டர் (750 மில்லி) தண்ணீர் விட்டுக் காய்ச்சி 120 மில்லி லிட்டராக வற்றியதும் இறக்கி, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து கலைந்து
விட்டு கஷாயத்தை வடிகட்டி, வேளைக்கு 60 மில்லி லிட்டராக - ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து தினம் இரண்டு வேளை குடிக்க, அதிக சிறுநீர் வெளியேறுவது வற்றிவிடும். ஒரு வாரம் இதுபோலச் சாப்பிடலாம்.
சிறுநீரகங்களில் பாயும் ரத்தத்திலிருந்து திரவப் பொருள் சிறுநீராய்ப் பிரிகிறது. இந்நீரில் ஒரு பாகம் மறுபடியும் உடலின் உள்ளேயே உறிஞ்சப்படுகிறது. வயோதிகத்தில் இந்த உறிஞ்சிடும் இயல்பு குறைந்து விடுகிறது. அதனால், சிறுநீர் அதிகமாகப் போக நேரிடுகிறது. அதுபோலவே, சிறுநீர்ப்பையில் மூத்திரம் சேரும்போது விரிந்து பெருக்கும் இயல்பு குறைந்து விடுகிறது.
சிறுநீர்ப்பையில் ஓரளவு மூத்திரம் சேர்ந்தவுடனே மேற்கொண்டும் வரக்கூடியதை தாங்க சக்தியற்றதாய் அதை உடனே வெளியில் வீழ்த்திட ஒரு வேகம் உண்டாகும். அதனால் அடிக்கடி சிறுநீர் போகும். அதிகமாகவும் போகும். அதிகமான திரவப்பொருள் இவ்வாறு உடலில் இருந்து வெளியே போவதால் அதைச் சரிக்கட்ட தாகம் எடுக்கும். தண்ணீரையும் குடிப்பார்கள். இப்படிப் போகும் சிறுநீரில் இனிப்பே இருக்காது. அதனால் இது சர்க்கரை நோயல்ல; பகுமூத்திரம் எனலாம்.
இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது என்பது வயதானவர்களிடம் பொதுவாகக் காணப்படும் ஒரு பிரச்னை. இதற்குக் காரணமாக சிறுநீர்ப்பை, நரம்புகள் மற்றும் தசைகள் ஆகியவை பலவீனம் அடைவதும், அவற்றின் ஒத்துழைப்பு குறைவதுமாகும்.
அஸ்வகந்தா சூரணம் ஐந்து கிராம் எடுத்து, இருநூறு மில்லி லிட்டர் சூடான பாலுடன் கலந்து, காலை உணவுக்கு அரை மணிநேரம் முன் குடிக்க நரம்பு மற்றும் தசை வலிமையையும், மன அமைதி, நல்ல தூக்கத்தையும் பெறலாம். பூனைக்காலி விதை சூரணத்தை அதுபோலவே மாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நரம்பு சிக்னல் மேம்பாட்டை அடையலாம். இரவு படுக்கும் முன் இரண்டு சிலாஜித் கேப்ஸ்யூல், சூடான 200 மில்லி லிட்டர் பாலுடன் சாப்பிட, வயது காரணமாக இருப்பிடம் பலவீனத்தைக் குறைக்கலாம்.
உடல் வாகைப் பொறுத்து, தேர்ந்தெடுக்கப்படும் ஆயுர்வேத மூலிகைத் தைலங்களை இளஞ்சூடாக கீழ் இடுப்பு, அடி வயிறு, தொடைப் பகுதிகளில் தடவி, அரை - முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு வெந்நீரில் குளிப்பதை காலையில் வழக்கப்படுத்தினால், நாடி நரம்புகள், தசை நார்கள், சிறுநீர்ப்பை ஆகியவை வலுப்படும். அதனால் சிறுநீர் கட்டுப்பாடு அதிகரிக்கும்.
யோகா பயிற்சிகள் மூலம் இடுப்பு மற்றும் அடி வயிற்றுப் பகுதி தசை மற்றும் நரம்புகளை வலுப்படுத்தினால், அடிக்கடி சிறுநீர் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எடை அதிகரிக்க...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு எரிச்சல் குணமாக...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான அரிப்பைக் குணப்படுத்த...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பல நோய்கள்... ஒரே மருந்து!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
