மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான அரிப்பைக் குணப்படுத்த...

எனக்கு வயது 60. அண்மையில் ஒரு தனியார் மருத்துவமனையில் மூன்று நாள்கள் அனுமதிக்கப்பட்டு (ஐசியூவில் ஒருநாள் உள்பட) சிகிச்சை பெற்றேன்.

News image
Updated On :12 ஏப்ரல் 2026, 4:06 am IST

எனக்கு வயது 60. அண்மையில் ஒரு தனியார் மருத்துவமனையில் மூன்று நாள்கள் அனுமதிக்கப்பட்டு (ஐசியூவில் ஒருநாள் உள்பட) சிகிச்சை பெற்றேன். சிகிச்சைக்கு முன் கை, மார்பு, வயிறு, தொடைப்பகுதிகளில் உள்ள முடிகளை நீக்கிவிட்டிருந்தனர்.

தற்போது உடல் முழுவதும் இரவு நேரங்களில் கடுமையான அரிப்பு ஏற்படுகிறது. தோல் சிவந்து பட்டை பட்டையாக கோடுகள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் என்ன? இதைக் குணப்படுத்த ஆயுர்வேத மருந்து உள்ளதா?

- மார்ட்டின், சென்னை.

மருத்துவமனையில் அனுமதி, குறிப்பாக ஐசியூ அனுபவம், உடலுக்கும் மனதுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். அந்த அனுபவத்துக்குப் பிறகு தோன்றும் உடல் அரிப்பு என்பது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டால் அது நீண்டகாலப் பிரச்னையாக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இந்த அரிப்புக்கு சாத்தியமான காரணங்களாக - மருந்துகளின் பக்க விளைவுகள், உள்புற ஆடைகள் எதுவும் இல்லாமல் அவர்கள் வழங்கக் கூடிய பருத்தி ஆடையை மட்டுமே அணிந்திருக்க வேண்டிய கட்டாயம், படுக்கையிலேயே அமர்ந்து சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலை, முடி நீக்கிய பகுதிகளில் இருந்து புதிய முடிகள் வளருதல், மனதில் ஏற்பட்ட சஞ்சலம், வருத்தம், கேன்டீன் உணவு, காலில் செருப்பின்றி மருத்துவமனையில் நடக்க நேருதல், பரிசோதனைகளுக்காக லிப்ட் மற்றும் பொதுமக்கள் கூடக் கூடிய இடங்கள் வழியாக வீல்சேரில் உட்கார வைத்து பல இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், மேலும் பல காரணங்களால் தொற்று ஏற்படுதல் ஆகிவற்றைக் குறிப்பிடலாம்.

ஐசியூ அல்லது குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருந்ததால் - தோல் உலர்ந்து விடும். இதனால் உடலில் வாதம் எனும் தோஷம் அதிகரித்து இரவில் அதிக அரிப்பை ஏற்படுத்தும். தொற்றுகளின் பாதிப்பு ரத்தத்தில் கலப்பதால், அது உடலெங்கும் சுழலும் தன்மையால் பல இடங்களிலும் அரிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் மருந்துகளின் அதிக வரவால், கல்லீரல் சோர்வு ஏற்பட்டு, அதுவும் உடல் அரிப்பைத் தூண்டும். பில் என்ன வரும், இன்சூரன்ஸ் கம்பெனி எவ்வளவு கொடுப்பார்கள், தான் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே உறவினர்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயச் சூழல் போன்றவற்றால் ஏற்படும் பயம், பதட்டம், கவலை ஆகிய மன அழுத்தத்தாலும் அரிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

உடலில் சேர்ந்த நச்சுகளை அகற்றுதல், ரத்தத்தைச் சுத்தப்படுத்துதல், தோலில் ஈரப்பதம் தக்க வைத்தல், மனவருத்தமின்றி இருத்தல் போன்றவை தங்களுக்கு உதவக்கூடும். உங்களுடைய உடல் தன்மையை ஆயுர்வேத மருந்துகளின் மூலம் நன்கறிந்து, மூலிகைத் தைலங்களாகிய ஏலாதி, தூர்வாதி, தினேசவல்யாதி, நால்பாமராதி ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இளஞ்சூடாக உடலெங்கும் தேய்த்து அரை - முக்கால் மணி நேரம் ஊறிய பிறகு, வேப்பம்பட்டை, சரக்கொன்றைப் பட்டை, ஏழிலைப்பாலைப் பட்டை, புங்கப்பட்டை, அரசம்பட்டை, ஆலம்பட்டை போன்றவற்றைக் கொண்டு காய்ச்சப்பட்ட மூலிகைத் தண்ணீரில் குளித்து, பயத்தம்மாவைத் தண்ணீரில் கரைத்து, எண்ணெய்ப் பிசுக்கை அகற்றி, அதன் பிறகு காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

வாரம் மூன்று முறையாவது இப்படி இரு வாரங்களுக்குச் செய்து வந்தாலே ரத்தம் சுத்தப்படும். இரண்டு- மூன்று மாதங்களுக்கு நீங்கள் புலால் உணவு, தயிர், கத்தரிக்காய், நல்லெண்ணெய், கடுகு, பகல் தூக்கம் தவிர்க்க வேண்டும். கருங்காலிக் கட்டை போட்டு வேகவைத்த நீரை குடிநீராகப் பயன்படுத்தலாம்.

தோலில் ஈரப்பதத்தைத் திரும்பப்பெற - உணவில் பச்சைக் கீரைகள், முருங்கைக்கீரை, பனீர், மோர், நெல்லிக்காய் ஆகியவற்றை அதிகம் சேர்க்கவும். காரம், புளிப்பு, எண்ணெய்யில் பொரித்தவை, பாக்கெட் உணவுகள் தவிர்க்கவும்.

ஆரக்வதாதி கஷாயம், மஞ்சிஷ்டாதி கஷாயம், வில்வாதி குளிகை, திக்தக க்ருதம், கந்தக ரஸôயனம், ஹரித்ரா கண்டம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் அரிப்பைப் போக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மையுடையவை.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.