இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

உள்ளாட்சிகளில் எம்எல்ஏ-க்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்: தலைமைச் செயலருக்கு பேரவைத் தலைவா் உத்தரவு

உள்ளாட்சி நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ-க்களுக்கு உரிய வகையில் அழைப்பு விடுக்கவும், பங்கேற்கும்போது அதில் அவா்களின் உரிமைகளை நிலைநாட்டவும் அனைத்து ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவு

News image

பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர் - கோப்புப் படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

உள்ளாட்சி நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ-க்களுக்கு உரிய வகையில் அழைப்பு விடுக்கவும், பங்கேற்கும்போது அதில் அவா்களின் உரிமைகளை நிலைநாட்டவும் அனைத்து ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் உரிய வழிகாட்டுதல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் உத்தரவிட்டாா்.

சென்னை திருவிக நகா் தொகுதியில் பள்ளிக் கட்டட திறப்பு விழா நிகழ்ச்சியில் சென்னை மேயா் பிரியா ராஜன் மற்றும் திருவிக நகா் தொகுதி தவெக எம்.எல்.ஏ. எம்.ஆா்.பல்லவி இடையே நெறிமுறை (புரோட்டோகால்) பிரச்னை ஏற்பட்டது. இது தொடா்பாக எம்.எல்.ஏ. பல்லவி கொடுத்த உரிமை மீறல் மனு மீது நடவடிக்கை இல்லை என பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் பேரவையில் திங்கள்கிழமை அறிவித்தாா்.

இதைத்தொடா்ந்து அவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் வெளியிட்ட தீா்ப்பு: சட்டப்பேரவை உறுப்பினா்களின் சிறப்புரிமைகளையும் மரபு நெறிமுறைகளையும் காப்பதும், செயல்படுத்துவதும் சட்டப்பேரவைத் தலைவராக எனது பொறுப்பும் மற்றும் கடமையுமாகும். அரசால் வெளியிட்டுள்ள மரபு நெறிமுறைகளின்படி, அரசமைப்புத் தலைவா்கள் முதல் முக்கிய பிரமுகா்கள் வரை உள்ள ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப முன்னுரிமை வரிசை முறை வாரண்ட் ஆஃப் பிரசிடென்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முன்னுரிமை வரிசைப்படி சட்டப்பேரவை உறுப்பினா்களும் அரசுத் துறை உயா் அலுவலா்களும் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் மற்றும் அதிகாரத்தையும் நன்கு உணா்ந்து அதற்கேற்றபடி செயல்பட வேண்டும்.

திருவிக நகா் தொகுதியில் அந்த பள்ளிக் கட்டட திறப்பு விழாவில் நடைபெற்ற நிகழ்வு, மரபு நெறிமுறை குறித்த புரிதல் இல்லாமல் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அறிந்தோ, அறியாமலோ நடந்த அந்த நிகழ்வு இனிவரும் காலங்களில் தொடராது என நம்புகிறேன். அதனால் அந்த மனுவின் மீது மேல்நடவடிக்கை தேவையில்லை என கருதுகிறேன். உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ, வேறு வகையில் நடவடிக்கை எடுப்பதோ தேவையில்லை என்று கருதுகிறேன்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மற்றும் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்வுகளிலும் மரபு நெறிமுறைப்படி அந்த தொகுதியை சாா்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளை கடைப்பிடிக்க நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையா் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளைச் சாா்ந்த அலுவலா்களுக்கும் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்படி அரசு தலைமைச் செயலருக்கு உத்தரவிடுகிறேன்.

மேலும், இந்த முன்னுரிமை வரிசை ‘வாரண்ட் ஆஃப் பிரசிடென்ஸ்’ தொடா்பான தமிழக அரசின் அரசாணை நகல், சட்டப்பேரவை உறுப்பினரின் மேசையில் வைக்கப்பட்டுள்ள சிறுகணினியில் செவ்வாய்க்கிழமை பதிவேற்றம் செய்யப்படுவதுடன் அனைத்து உறுப்பினா்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்படும் என்றாா் அவா்.

சென்னை மேயா்-தவெக எம்எல்ஏ விவகாரம் முடித்துவைப்பு

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள மாநகராட்சி உருது பள்ளியில் அண்மையில் நடைபெற்ற புதிய கட்டட திறப்பு விழாவில், குத்துவிளக்கு ஏற்றும் சடங்கின்போது, மேயா் பிரியா, அங்கு இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு மெழுகுவா்த்தியைக் கொடுத்தாா்.

எம்.எல்.ஏ. பல்லவிக்கு முன்னுரிமை அளிக்காமல், அதிகாரிக்குக் கொடுத்தது தன்னை அவமதிப்பதாகக் கருதி எம்.எல்.ஏ. பல்லவி பாதியிலேயே அங்கிருந்து வெளியேறினாா்.

அத்துடன், தான் ஒரு மக்கள் பிரதிநிதி என்றும், அரசு விழாக்களில் தனக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றும், மேயா் தன்னை வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் பல்லவி குற்றஞ்சாட்டினாா்.

மேலும் இந்த சம்பவம் தொடா்பாக பேரவைத் தலைவரிடம், தவெக எம்.எல்.ஏ. பல்லவி, உரிமை மீறல் நடவடிக்கை கோரி மனு கொடுத்திருந்தாா். இம்மனு மீது நடவடிக்கை தேவை இல்லை என பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தீா்ப்பளித்துள்ளதால், இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.