
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது மாநில வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளும்: மு.க. ஸ்டாலின்
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடும் தமிழக அரசின் முடிவு குறித்து...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்
பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது, தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் அரசால் கைவிடப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை
விதி எண் 110-இன் கீழ், முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று(ஆக. 24) அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:
”பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும். பரந்தூர் பன்னாட்டு விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக, முதல்வர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு மாநில வளர்ச்சியைப் பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும். அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தமிழ்நாட்டின் நலனை அடகு வைக்கக் கூடாது.
மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை விதி எண்.110-இன்கீழ் அறிவித்துவிட்டு விவாதத்துக்கோ கருத்து தெரிவிக்கவோ கூட இடமில்லாமல் செய்திருப்பது சரியல்ல.
மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல; பெருத்த ஏமாற்றம்!
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்புதான் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தலும் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம். தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குமுன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக கைவிடப்படும்.
முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக திராவிட மாடல் ஆட்சியில் இருந்த தமிழ்நாடு கடைசி இடத்துக்குத் தள்ளப்படும். முதல்வரின் அறிவிப்பு நம் போட்டி மாநிலங்களுக்கு அடித்த ஜாக்பாட்!
தொழில் வளர்ச்சி இல்லாமல் ஒரு ட்ரில்லியன் டாலர், ஒன்றரை ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குகள் சாத்தியமே இல்லை. எந்த யோசனையும் ஆலோசனைகளும் இல்லாமல் த.வெ.க. அரசு எடுத்திருக்கும் இந்த முடிவு தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவுகளைத் தகர்க்கும் பேரிடி!" என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Summary
DMK leader M.K. Stalin has stated that abandoning the Parandur airport project would plunge Tamil Nadu's development into an abyss.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







