சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட்டு வருகிறார். அண்மையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கிவிட்டதால், வீரர்கள் அனைவரும் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவின் சர்வதேச டி20 போட்டிகளுக்கான எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய அணி வருகிற 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியிலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் விளையாடவுள்ளது. ஒலிம்பிக் போட்டியின்போது, சூர்யகுமார் யாதவுக்கு 38 வயதாகியிருக்கும். அதனால், அவர் ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி வருகிற ஜூன் - ஜூலை மாதங்களில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடரிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் சோதனைக்கு உள்ளாக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த தொடர்களில் அவர் செயல்படும் விதத்தைப் பொருத்தே, சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தொடர்வாரா என்பது தெரியவரும்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும், கௌதம் கம்பீரின் பயிற்சியாளர் பதவிக்காலம் வருகிற 2028 டி20 உலகக் கோப்பை தொடர் வரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவே கௌதம் கம்பீரின் முதல் தெரிவாக இருப்பார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணித் தேர்வுக் குழு என்ன நினைக்கிறது என்பது தெரியவில்லை.
சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் தற்போது கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆனால், அவர் ஒரு பேட்டராகவும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாட வேண்டும். இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியை அவர் கேப்டனாக வழிநடத்தவுள்ளார். அதன் பின், அவரது செயல்பாடுகளைப் பொருத்தே 2028 ஆம் ஆண்டு வரை அவர் அணியின் கேப்டனாக தொடர்வாரா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அவர் ஒரெயொரு அரைசதம் மட்டுமே எடுத்தார். இந்த ஆண்டு அவர் ஓரளவுக்கு நன்றாக ரன்கள் குவித்தார். இந்த ஆண்டில் அவர் இதுவரை நான்கு அரைசதங்கள் விளாசியுள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட்டும் 160-க்கும் அதிகமாக உள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நன்றாக விளையாடியபோதிலும், அதன் பின் பெரிய அணிகளுக்கு எதிராக ரன்கள் குவிக்கத் தவறினார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 18 ரன்கள், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 18 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் 11 ரன்கள், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப்போட்டியில் 0 ரன் எடுத்தார்.
வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி வருவதால், அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பேட்டிங்கில் தடுமாறும் சூர்யகுமார் யாதவ், அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Summary
Expectations have arisen among fans regarding what the future holds for Indian team captain Suryakumar Yadav in international T20 matches.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சூர்யகுமார் யாதவின் ஆதிக்கம் தொடருமா?

ஐபிஎல் திருவிழா!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


