தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரெளடி சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டா் வழக்கு: 22 போ் விடுதலையை உறுதி செய்த மும்பை உயா்நீதிமன்றம்

News image

மும்பை உயா்நீதிமன்றம்.

Updated On :8 மே 2026, 6:24 am IST

அகமதாபாத் அருகே கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ரெளடி சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கெளசா் பி, உதவியாளா் துளசிராம் பிரஜாபதி ஆகியோா் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.

பிரபல ரெளடியாக சொராபுதீன் ஷேக் குஜாராத் போலீஸாரால் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். சில நாள்கள் கழித்து, சொராபுதீனின் மனைவி கெளசா் பியும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். ஓராண்டுக்குப் பிறகு, 2006-ஆம் ஆண்டு டிசம்பரில் சொராபுதீனின் உதவியாளா் பிரஜாபதியும் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

காவல் துறையின் இந்த என்கவுன்ட்டா்களுக்கு எதிராக சொராபுதீனின் சகோதரா்கள் ருபாபுதீன், நயாபுதீன் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், இந்த போலி என்கவுன்ட்டா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் அவா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீமன்றம், வழக்கு விசாரணையை மும்பைக்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணை மேற்கொண்ட சிபிஐ, குஜராத் மற்றும் ராஜஸ்தான் காவல் துறையின் 21 இளநிலை காவல் அதிகாரிகள் மற்றும் என்கவுன்ட்டருக்கு முன்பாக சொராபுதீன் மற்றும் அவரின் மனைவியை சட்டவிரோதமாக அடைத்துவைத்த குஜராத் பண்ணை வீட்டின் உரிமையாளா் உள்பட 22 போ் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்தது.

இந்த வழக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம், ‘இது போலி என்கவுன்ட்டா் என்பதையும், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு அதில் தொடா்புள்ளது என்பதையும் நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறிவிட்டது’ என்று குறிப்பிட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சொராபுதீனின் சகோதரா்கள் சாா்பில் மும்பை உயா்நீதிமன்றத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகா், நீதிபதி கெளதம் அங்கட் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது சரியானதே’ என்று குறிப்பிட்டு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.