தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேதனையாகும் சோதனைகள்!

வங்கி ஏடிஎம் மையங்களுக்கான பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக அந்தப் பணம் முறைகேடான வழியில் பெறப்பட்ட பணம் என்றாகிவிடுமா?

News image

தோ்தல் பறக்கும் படை சோதனை - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 3:04 am IST

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த 15-ஆம் தேதிமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, தேர்தல் செலவினக் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் பறக்கும் படை என அழைக்கப்படும் இந்தக் குழுக்களின் உண்மையான நோக்கம் நிறைவேறுகிறதா என்றால், அதைவிட பொதுமக்கள் அதிகமாக பாதிப்புக்குள்ளாவதுதான் அதிகமாக நடப்பதாகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து இதுவரை தமிழகத்தில் ரூ. 151.93 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதில், ரொக்கம் ரூ. 30.53 கோடி, ரூ. 22.19 கோடி மதிப்பிலான இலவசப் பொருள்கள், ரூ. 72 லட்சம் அளவுக்கு மதுபானம், ரூ. 6.47 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ. 92.02 கோடி தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்கள், இதர பொருள்கள் அடங்கும்.

இதில் மதுபானங்கள், போதைப் பொருள்கள், இலவசப் பொருள்கள் பறிமுதலில் தவறு காணவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 30.53 கோடி ரொக்கம், ரூ. 92.02 கோடி மதிப்பிலான நகை, பணம் ஆகியவை வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டனவா என்றால் இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறையின்படி ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் சென்றாலோ, அதே மதிப்புக்கு அதிகமாக பொருள்களை எடுத்துச் சென்றாலோ, அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டவைதான் அத்தனையும்.

விதிமுறையை மீறி எடுத்துச் செல்லப்படும்போது பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதை பறக்கும் படையினர் விடியோ எடுக்கின்றனர். பின்னர், உரிய ஆவணத்தைச் சமர்ப்பித்தால் பணமும், பொருள்களும் உரியவர்களிடம் திரும்ப வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஆனால், அவசர செலவுக்காக உறவினர்களிடமோ, நண்பர்களிடமோ கடனாகவோ, உதவியாகவோ பெற்றுக் கொண்டு செல்லும் ரூ. 50,000-க்கு அதிகமான தொகைக்கு எந்த ஆவணத்தை வைத்திருக்க முடியும்?

ஈரோட்டைச் சேர்ந்த ஒரு பெண், உடல்நலம் குன்றிய தன் தாயை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு காரில் அழைத்துச் சென்றார். சிகிச்சைக்காக அவர் வைத்திருந்த ரூ. 2 லட்சத்துக்கான ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுபோன்று சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது பணம் பறிமுதல் செய்யப்படும் பல நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. சிகிச்சை செலவுக்காக பல இடங்களில் திரட்டப்படும் பணத்துக்கு ஆவணங்களை எவ்வாறு தயார் செய்ய முடியும் என்பது தேர்தல் ஆணையத்துக்கு ஏன் தெரிவதில்லை?

வணிகர்களும் இதேபோன்ற சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, சந்தைகளுக்கு ஆடு, மாடுகள் வாங்க ரூ. 50,000-க்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துவிடுகின்றனர். எல்லாவற்றுக்கும் எண்ம ரீதியிலான பணப் பரிவர்த்தனை நடைமுறையைப் பயன்படுத்த முடியாது. மேலும், சிறுக, சிறுக சேமித்த பணத்துக்கு ஆவணங்களையும் தயார் செய்ய முடியாது எனும்போது, நடத்தை விதிமுறை என்கிற பெயரில் அந்தப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்வது எந்த வகையில் நியாயம்?

ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட திருவேற்காடு பகுதியில் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக தனியார் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 76 லட்சத்தை, அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வங்கி ஏடிஎம் மையங்களுக்கான பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பதற்காக அந்தப் பணம் முறைகேடான வழியில் பெறப்பட்ட பணம் என்றாகிவிடுமா?

பல ஆண்டு காலமாக இந்த 50,000 ரூபாய் ரொக்கம் என்கிற வரைமுறை தேர்தல் காலங்களில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், உள்ள நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்து சில சீர்திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏன் செய்யாமல் இருக்கிறது என்பது கேள்விக்குறி.

விலைவாசி அதிகரித்துள்ள இந்தக் காலகட்டத்தில், எப்போதோ வரையறுத்த விதிமுறையையே தொடர்வதில் நியாயம் இல்லை. ஒரு பவுன் தங்கம் வாங்க வேண்டுமென்றால்கூட இன்று ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. வீட்டில் ஆளுக்கொருவராக சேமித்த பணத்தை சேர்த்து நகை வாங்க சென்றால்கூட அந்தப் பணமும் பறிமுதல் செய்யப்படும் அபாயத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணத்துக்கான வரம்பை தேர்தல் ஆணையம் அதிகரித்திருக்க வேண்டும். அந்தப் பணம் சொந்தச் செலவுக்கு கொண்டு செல்லப்படுகிறதா அல்லது வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்படுகிறதா என்பதை விசாரித்து, உண்மையை அறிந்ததும் உடனடியாகப் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்திருக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் எப்போதுமே கூறுவதில்லை. இன்னொரு விஷயம் - வாக்காளர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் அந்தப் பணத்தை இப்படி வாகனங்களில் அரசியல் கட்சியினர் வெளிப்படையாகக் கொண்டு செல்ல மாட்டார்கள் என்பது கூடவா தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாது...?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.