நடிகர் விஜய் முதல்வர் விஜய்யாக மாறியதில் அவரது திரைப்படங்கள் வழி அவர் பேசிய அரசியலே முக்கிய காரணம். விஜய்யின் சினிமா - அரசியல் பயணத்தைத் தலைவா படத்திற்கு முன்பு பின்பு எனப் பிரிக்கலாம். அதற்கு முன் வரை அவர் படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வைக்கப்பட்ட அரசியல் வசனங்கள் அதன் பின்னரே படத்துக்குப் படம் தீவிரமாகின.
ஆனால், தலைவா படத்திற்கு முன்னரே விஜய் செய்திகளில் பேசுபொருளானது, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தின் மூலமே. விஜய்யின் பட வெளியீட்டு சர்ச்சைகளுக்கு ஆரம்பப் புள்ளியாக அமைந்தது முருகதாஸ் என்று சொல்லுமளவுக்கு இந்தக் கூட்டணி வெற்றிகளையும், சர்ச்சைகளையும் கொடுத்தது.
ஏ. ஆர். முருகதாஸ் - விஜய் - துப்பாக்கி
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் வித்தியாசமான கதைகளை ரசிக்கும்படியான திரைக்கதையால் மெருகேற்றுவதில் வல்லவர். அவர் இயக்கிய அனைத்துப் படங்களும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை. 2011 தீபாவளிக்கு அவர் இயக்கிய ஏழாம் அறிவு படத்தை விஜய்யின் வேலாயுதம் படத்துடன் மோதவிட்டவர் அடுத்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கியுடன் களமிறங்கினார்.
கெட்-அப் மாற்றுவதில் பெரிதும் ஆர்வம் காட்டாத விஜய்யைப் பேரழகனாகக் காட்டியது துப்பாக்கி படம். அப்போது வரை பெரிதும் வித்தியாசம் இல்லாத ஹேர்ஸ்டைல், வளராத தாடி என்றிருந்த விஜய், இப்படத்தில் ஆர்மி கட், ஃபிரெஞ்ச் குறுந்தாடி என மொத்தமாக ஆளே மாறி ஒரு பக்கா ராணுவ வீரனாகக் களமிறங்கினார்.
துப்பாக்கி கதை: மும்பையிலுள்ள தனது வீட்டிற்கு விடுமுறையில் வரும் ராணுவ வீரர் ஜெகதீஷ் (விஜய்) அங்கு நடைபெறும் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றை நேரில் காண்கிறார். அப்போது பிடிபடும் ஒரு பயங்கரவாதியின் மூலம் மும்பையில் ரகசியமாக இயங்கும் ‘ஸ்லீப்பர் செல்’ உலகம் அவருக்குத் தெரிய வருகிறது. ஸ்லீப்பர் செல்களாக இயங்கும் பயங்கரவாதிகளை நாயகன் கண்டுபிடித்தாரா? அவர்களது தலைவனைப் பிடித்தாரா? என்று நகத்தைக் கடிக்க வைக்கும் ஆக்ஷன் த்ரில்லராக படம் பட்டாசாக வெடிக்கும்.

துப்பாக்கி விஜய் - காஜல் அகர்வால்
விஜய் நடித்ததில் ரூ. 100 கோடியைத் தாண்டி வசூலித்த முதல் படம் துப்பாக்கி. இதன் மூலமே விஜய் தனது மார்க்கெட்டை மேலும் விரிவுபடுத்தினார்.
ஆனால், துப்பாக்கியில் இருந்தே அவருக்கு பட வெளியீடு தொடர்பான பிரச்னைகள் ஆரம்பமானது. இப்படம் வெளியாகும் முன்னர் கள்ளத் துப்பாக்கி என்கிற படத்தை எடுத்த தயாரிப்பாளர் தனது படத்தின் பாதி பெயரைக் கொண்ட இப்படத்தின் பெயரை மாற்றுமாறு நீதிமன்றத்தை நாடினார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அந்த வழக்கை வாபஸ் வாங்கினார். அதுமட்டுமின்றி, படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சுருட்டுடன் விஜய் இருப்பது போன்று வெளியானது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதும் அந்தக் காட்சி படத்திற்காக எடுக்கப்படவில்லை என முருகதாஸ் தெரிவித்தார்.
படம் வெளியான பின்னர் இந்திய இஸ்லாமியர்கள் குறித்து தவறாக சித்திரித்ததாகக் கூறி படத்தின் மீது வழக்குத் தொடரப்பட்டு படத்தைத் தடை செய்ய போராட்டங்கள் நடைபெற்றது. பின்னர் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என முருகதாஸ் உறுதியளித்தார்.
துப்பாக்கியின் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடி முடித்த முருகதாஸ் அடுத்து விஜய்யுடன் சேர்ந்து எடுத்தது கத்தி!
கத்தி என்கிற கதிரேசன்!
துப்பாக்கிக்கு அடுத்து தலைவா படத்தின் அரசியல் சர்ச்சையின் மூலம் அதிமுக அரசால் பந்தாடப்பட்ட விஜய் படத்தை வெளியிட வைப்பதற்குள் நொந்து போனார். அதிலிருந்தே தனது அரசியல் ஆட்டங்களை ஆரம்பித்தார் அவர். அடுத்து நடித்த ஜில்லா படத்தில் போலீஸாக அரசியல்வாதி, ரௌடிகளை ஓடவிட்டவர் மீண்டும் முருகதாஸுடன் 2014 தீபாவளி வெடியாக, ‘கத்தி’யைக் கொண்டு வந்தார்.
கத்தி படத்திற்கு முன் முருகதாஸ் இயக்கிய அரசியல் கதைக்களம் கொண்ட ஒரே படம் ரமணா. அதில், அரசு அதிகாரிகளின் ஊழலைப் பற்றி வலுவாகப் பேசியவர், கத்தியின் மூலம் விவசாயத்தைப் பற்றியும், கார்ப்பரேட் தொழிலதிபர்களின் பேராசைக்கு பலியாகும் விவசாயிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உதவும் அரசியல்வாதிகளையும் தோலுரித்தார்.
கத்தி கதை: திருநெல்வேலியில் உள்ள தன்னூத்து எனும் கிராமத்தில் விவசாயிகளை ஏமாற்றி அவர்களின் நிலங்களைப் பிடுங்கும் கார்ப்பரேட் தொழிலதிபரை எதிர்த்துப் போராடுவார் கம்யூனிஸ்டான ஜீவானந்தம் (விஜய்). அவருக்கு நியாயம் கிடைக்காமல் போக அவரைப் போலவே இருக்கும் சிறையில் இருந்து தப்பிய திருடரான கதிரேசன் (விஜய்) சந்தர்ப்ப சூழ்நிலையால் இந்த விவகாரத்துக்குள் வருவார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஜீவானந்தம் செய்த விஷயங்களைக் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ ஜீவானந்தமாக மாறுவார் கதிரேசன். கடைசியில் விவசாயிகளுக்கு நியாயம் பெற்றுத் தருவதுடன் படம் முடியும். கதிரேசன் தனது அடையாளங்களை வெளிக்காட்டாமல் மீண்டும் சிறைக்கே செல்வார்.

கத்தி படத்தில் விஜய்
இப்படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்களுக்கென தனியே ரசிகர் பட்டாளம் உண்டு. ”பசி தீர்ந்தபின் நாம் சாப்பிடும் அடுத்த இட்லி வேறொருவருடையது” என எளிமையாக கம்யூனிஸ பாடமும் எடுத்திருப்பார். அதேபோல, “காத்துல (2ஜி) ஊழல் பண்ணி கோடி கோடியாக சம்பாதிச்ச ஊர் இது” என அப்போதே காத்திரமாக திமுகவை விமர்சித்து வசனமும் பேசியிருப்பார். தாமிரபரணியில் கோடிக்கணக்கான லிட்டர் நீர் எடுக்கும் பெப்ஸி நிறுவனத்தையும் விமர்சித்திருப்பார்.
இப்படம் வெளியாகும் முன்னர் படத்தின் கதை திருடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இயக்குநர் கோபி நயினார் எழுதிய கதையை திருடி படம் எடுக்கப்பட்டதாக வழக்குத் தொரப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் கதை திருட்டு தொடர்பாக தகுந்த ஆதாரங்கள் இல்லை என தீர்ப்பானது. அதேபோல, குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் என்பவர் தனது குறும்படத்தின் கதையைத் திருடி இப்படம் எடுக்கப்பட்டதாகக் வழக்குப் பதிந்தார். அந்த வழக்கும் 5 ஆண்டுகள் கழித்து முருகதாஸ் மீது குற்றமில்லை என தீர்ப்பானது.
அதுமட்டுமின்றி, படத்தின் தயாரிப்பாளரான லைகா நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் உறவினர் என்று படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் ஆதரவு இயக்கங்கள் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்தப் படமும் விஜய் - முருகதாஸ் கூட்டணிக்கு ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலைக் கொடுத்தது.
சர்காரைப் பிடிக்கும் முன் திரையில் ஒரு ‘சர்கார்’!
சர்கார் படம் விஜய் - முருகதாஸ் கூட்டணியின் 3-வது படம். இருமுறை தீபாவளிப் பட்டாசு கொளுத்திய இருவரும் மூன்றாவது முறையும் 2018 தீபாவளிக்குக் களமிறங்கினர்.
சர்கார் கதை: இந்தியரான சுந்தர் ராமசாமி (விஜய்) அமெரிக்காவில் மிகப்பெரிய கார்ப்பரேட் தொழிலதிபர். தேர்தலில் தனது வாக்கினைப் பதிவுசெய்ய தமிழகம் வரும் அவருக்கு ஒரு அதிர்ச்சி தரும்படி அவரது வாக்கை வேறு ஒருவர் செலுத்தியிருப்பார். 49 பி என்ற பிரிவின் மூலம் தனது வாக்கைத் திரும்ப செலுத்த தேர்தல் ஆணையத்தை நாடுவார் சுந்தர். வாக்கைத் திரும்ப செலுத்த ஒப்புதல் வழங்கப்படும். பின்னர் அவரைப் போன்றே வாக்கு செலுத்த முடியாமல் போனவர்களுக்கு சுந்தர் விழிப்புணர்வை ஏற்படுத்துவார். பலரும் 49 பி பிரிவு மூலம் தங்களது வாக்கைப் பதிவு செய்ய முன்வர தேர்தல் ரத்தாகி மறுதேர்தல் நடத்த முடிவெடுக்கப்படும். இதனால், ஆளுங்கட்சியுடன் மோதல் உண்டாகும் நிலையில் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதை.

விஜய்யின் ’சர்கார்’
கத்தியில் திமுக-வை நேரடியாக வசனம் மூலம் தாக்கிய விஜய், இந்த முறை 4 ஆண்டுகளுக்குப் பின் திமுக - அதிமுக என இரு பெரும் கட்சிகளை நேரடியான வசனங்கள் மூலம் கடுமையாகத் தாக்கியிருப்பார். (தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்) (வசனம்: இயக்குநர் முருகதாஸ், எழுத்தாளர் ஜெயமோகன்)
இப்படத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயர், ஊழல் செய்யும் அரசியல்வாதியான வரலட்சுமிக்கு வைக்கப்பட்டிருக்கும். அதேபோல, முதல்வராக பழ. கருப்பையா மற்றும் அவருக்கு அடுத்ததாக கட்சிப் பதவியில் காலகாலமாக இருக்கும் ராதாரவி என திமுகவை விமர்சித்திருப்பார்கள். மேலும், இரு கட்சிகளும் இலவசங்கள் வழங்கியதையும் அதனை மக்கள் தெருக்களில் வீசுவதாகவும் காட்சியமைத்து சர்ச்சையைக் கிளப்பினார் முருகதாஸ்.
இதனால், விஜய்க்கு எதிராக தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். பல இடங்களில் விஜய்யின் பேனர்களைக் கிழித்து தீயிட்டுக் கொளுத்தினர். படத்தை திரையிடக்கூடாதென்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
இதனைத் தொடர்ந்து, இப்படத்தின் கதையும் வேறு ஒருவரின் கதை என வழக்குப் பதியப்பட்டது. வருண் ராஜேந்திரன் என்பவர் தனது ‘செங்கோல்’ என்ற கதையைத் திருடி முருகதாஸ் படமாக எடுத்திருப்பதாக வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் முடிவில், படம் தொடங்குகையில் வருண் ராஜேந்திரனுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும் என்றும், ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.
சர்கார் திரைப்படம் கலவையான விமர்சனங்கள், ஆளுங்கட்சி எதிர்ப்புகள் போன்றவற்றையும் மீறி ரூ. 250 கோடி வசூலைக் குவித்து பெரிய வெற்றி பெற்றது.
விஜய்யின் தற்போதைய அரசியல் வெற்றியை சர்கார் படத்துடன் ஒப்பிடலாம். சர்கார் படத்தில் தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் இளைஞனான அவர், தற்போது நிஜ வாழ்விலும் அதனை நிகழ்த்தியிருக்கிறார்.
நிஜத்தில் புனைவை விட மிகப்பெரிய வெற்றியை தமிழக மக்கள் அவருக்குப் பரிசளித்திருக்கிறார்கள். விஜய் தனது அரசியல் அதிகாரக் கோட்டையை கட்டுவதற்கு அஸ்திவாரமிட உதவிய இயக்குநர் முருகதாஸ் விஜய் ரசிகர்கள், தொண்டர்களால் என்றும் கொண்டாடப்படுவார்.
முற்போக்கு இயக்கங்களுடன் கைகோர்த்து ஆட்சியமைத்துள்ள முதல்வர் விஜய்யின் அரசியல் சர்கார், முருகதாஸ் இயக்கிய சர்காரைப் போன்று மக்களுக்கானதாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் ஆசை!
Summary
Vijay - A.R. Murugadoss! The successful duo that sparked controversies!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்களை நோக்கி விஜய்... தலைவாவிலிருந்து ஜன நாயகன் வரை!
திரையில் விஜய்யின் அரசியல் - இயல்பானதா? திட்டமிடப்பட்டதா?
டாக்டர் பட்டம் பெற்ற நற்பணி நாயகன் விஜய்!

அரசியலுக்கு வருவது எப்போது? 2013-ல் நடிகர் விஜய்யின் பதில்!
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

