கமர்ஷியல் நாயகர்களுக்கு ஆக்ஷனைத் தவிர்த்து பொதுவாக எதிர்பார்க்கப்படும் திறமைகளில் ஒன்று நடனமும், நகைச்சுவையும். ரஜினி முதல் சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் வரை கதாநாயகர்கள் திரையில் நகைச்சுவையைக் கையாளும் விதம், அவர்களை அனைத்து செண்டர் மக்களிடமும் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில், எல்லாமும் பொருந்தி வந்தவர் விஜய். விஜய்யின் நடனம் பற்றி சொல்லவே வேண்டாம். இந்தியாவில் நன்றாக நடனமாடும் கதாநாயகர்களில் முக்கியமானவர் விஜய்.
அதேபோல, நகைச்சுவை நடிகர்களை விடவும் திரையில் சிறப்பாக நகைச்சுவைக் காட்சிகளைக் கொண்டு வருவதில் விஜய்க்கு நிகர் அவரேதான். அவர் நடித்த ’வசீகரா’ திரைப்படம் அதில் முக்கியமான படமாக இருக்கும்.
விஜய் நடிப்பில் நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் கே. செல்வபாரதி இயக்கிய படம் வசீகரா.
2001-ம் ஆண்டில் வெளியான மின்னலே படத்தில் இடம்பெற்ற கவிஞர் தாமரை எழுதிய ‘வசீகரா’ பாடல் மூலம் இந்தத் தலைப்பைப் படத்திற்கு வைத்தனர். தெலுங்கில் 2001-ம் ஆண்டு வெங்கடேஷ் நடிப்பில் வெளியான ‘நுவ்வு நாக்கு நாச்சாவ்’ படத்தின் தமிழ் ரீமேக்கே இந்தப் படம்.
2003-ம் ஆண்டு பொங்கலன்று வெளியான வசீகரா, பெரிதாக வெற்றி பெறாவிட்டாலும் இன்றளவும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவே இருக்கிறது.
வசீகரா!
பொள்ளாச்சியில் படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் தன் மகன் பூபதியை (விஜய்), வேலை தேடவும் ஒழுக்கமாக இருக்கவும் சென்னையிலுள்ள தன் நண்பன் விஸ்வநாதனின் (நாசர்) வீட்டிற்கு அனுப்பி வைப்பார் மணி (மணிவண்ணன்). அங்கு, வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் விஸ்வநாதனின் மகள் பிரியாவுக்கு (சிநேகா) திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கும்.
பூபதிக்கும் பிரியாவுக்கும் இடையே மோதலும், கேலியுமாக நாள்கள் செல்ல அது காதலாக மாறும். திருமணம் நிச்சயமானப் பெண்ணைக் காதலிக்கும் உறுத்தலில், அப்பாவின் பெயரைக் கெடுக்க வேண்டாம் என எண்ணி பூபதி ஊருக்குத் திரும்ப முற்படுவார். விஸ்வநாதன் அவரை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர, பிரியா தனது காதலை ஏற்றுக்கொள்ள பூபதியை வற்புறுத்துவார். இறுதியில் பிரியாவின் திருமணம் நின்று, பூபதியுடன் அவருக்குத் திருமணமாவதுடன் படத்தில் சுபம் போடப்படும்.

வசீகரா படத்தில் விஜய்
பூபதியாக விஜய் - பிரியாவாக சிநேகா!
பூபதியாக துறுதுறு இளைஞனாக விஜய் வாழ்ந்திருப்பார் என்றே சொல்லவேண்டும். பெரிதும் நடிப்புக்குத் தீனிபோடும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் விஜய்யின் நக்கலான உடல்மொழி மற்றும் வசனங்களால், படத்தில் விஜய்யாக அன்றி பூபதியாகவே அவர் வெளிப்படுவார். அம்மா இல்லாமல் அப்பா மணிவண்ணனால் வளர்க்கப்படும் விஜய், அவருடன் ஒரு நண்பனைப் போன்ற நையாண்டித்தனமும் மரியாதையும் கலந்த உறவைக் கொண்டிருப்பார். காதல், காமெடி, சென்டிமெண்ட் என மற்ற படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானவராகவே விஜய் இப்படத்தில் மிளிர்வார்.
பிரியாவாக சிநேகா. விஜய்யுடன் தொடர்ந்து எலியும் பூனையுமாக இருக்கும் சிநேகா, அவர்மீதான காதலைச் சொன்ன பின்னர் வேறு பெண்ணை சைட் அடிக்கும் விஜய்யை கடிந்து கொள்வதாகட்டும், விலகிச்செல்லும் அவரைவிட்டு விலக முடியாமல் தவிப்பதாகட்டும், தனது வழக்கமான யதார்த்த நடிப்பால் பிரியா கதாபாத்திரத்தை அழகுற மேம்படுத்தியிருப்பார்.

வசீகரா படத்தில் விஜய் - சினேகா
விஜய்யின் தந்தை மணியாக மணிவண்ணன். தன் மகனுக்கு பரீட்சையில் பிட் தூக்கி வீசுவதும், சிகரெட் பற்றவைப்பதுமான ஜாலியான தந்தையாகவும், தனது நண்பனின் மகளை மகன் காதலிப்பது தெரிந்து, அவர்களின் குடும்பத்தின் மரியாதையைக் காப்பாற்ற நினைப்பவராகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
விஜய் - வடிவேலு கூட்டணி
பிரண்ட்ஸ், பகவதி படத்திற்குப் பிறகு 3-வது முறையாக வடிவேலுவுடன் விஜய் இப்படத்தில் இணைந்து நடித்தார். நாயகி சிநேகாவை விட இதில் விஜய்க்கு கெமிஸ்ட்ரி அதிகம் ஒத்துப்போனது வடிவேலுவுடனே. கட்டபொம்மனாக பென்சில் மீசையுடன் அவரைப் பார்த்தாலே சிரிப்பு கேரண்டி. அதுவும் விஜய்யுடன் என்றால் சொல்லவா வேண்டும்? இருவரும் இணைந்து காமெடி திருவிழாவே நடத்தியிருப்பார்கள். ஆனால், படம் முழுவதும் தனது நக்கல் தொனியால் வடிவேலுவை விட சற்றே அதிகமாக விஜய் ஸ்கோர் செய்திருப்பார் என்பதை மறுக்க முடியாது.
வசீகராவுக்கு முந்தைய படங்களில் விஜய்க்கு நகைச்சுவைக் காட்சிகள் இருந்தாலும்கூட இப்படத்தில் அவருடைய நக்கலான உடல்மொழியும், கிண்டலான வசனங்களும் அவருக்கு நகைச்சுவை சிறப்பாகக் கூடி வந்ததைக் காட்டியிருக்கும். சாதாரண ரொமாண்டிக் - காமெடி வகையிலான கதையை விஜய் மிகவும் ரசிக்கத்தக்கதாக மாற்றியிருப்பார்.
இவர்கள் தவிர நாசர், சுஹாசினி, காயத்ரி ஜெயராமன், ஸ்ரீமன் என அனைவரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்கள். விஜய் படத்தில் வழக்கமாக பாடல்கள் நன்றாக இருக்கும். அதேபோல, இந்தப் படத்திலும் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் அனைத்துப் பாடல்களும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.
சச்சின் லுக்கில் விஜய்
வசீகரா படத்திற்கு முன் விஜய் நடித்த பெரும்பாலான படங்களில் அவரது ’ஹேர்ஸ்டைல்’ ஒரே விதத்தில் இருக்கும். பெரிதாக கெட் அப் மாற்றம் செய்திருக்கமாட்டார். அதனை, கொஞ்சம் மாற்றிப் பார்க்கும் யோசனையை வழங்கியவர் இப்படத்தின் இயக்குநர் செல்வபாரதி. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் புகைப்படம் ஒன்றைப் பார்த்த அவர், விஜய்க்கு அதேபோல ஹேர்ஸ்டைல் வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் என யோசித்து விஜய்யிடம் அதைப் பற்றி கூறியுள்ளார். அதுவரை பெரிதாக கெட்டப் மாற்றம் செய்யாத விஜய் முதலில் மறுத்தாலும் பின்னர் சம்மதித்துள்ளார். இயக்குநர் கூறியதைப் போல படத்தில் விஜய்க்கு அந்த ஹேர்ஸ்டைல் மிகப் பொருத்தமாக இருக்கும்.
எம்ஜிஆரின் ஆசியுடன்....
வசீகரா படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு திரையரங்கில் எம்ஜிஆரின் ‘இதயக்கனி’ படத்தின் ரீல் பெட்டிக்கு தளபதி வந்து சூடம் காட்டியபின்தான் அதனை உள்ளே எடுத்துச் செல்லவேண்டும் என ஒருவர் சொல்வார். அப்போது, ‘நான் ஆணையிட்டால்’ பாடலின் இசை ஒலிக்க விஜய் சைக்கிளில் வந்து கையில் சூடம் ஏற்றி எம்ஜிஆர் கட்-அவுட்டுக்கு காட்டுவார். அப்போது, எம்ஜிஆர் நேரில் தோன்றி, “நீ என் ரசிகனாக இருக்கறது, எனக்கு உண்மையிலேயே பெருமையா இருக்கு. உன்னால முடிஞ்ச வரைக்கும் ஏழைகளுக்கு உதவி செய். இப்படிப்பட்ட ஏழைகளின் சிரிப்பில்தான், நாம இறைவனையே காண முடியும்” எனக் கூறுவார்.
அதுமட்டுமின்றி, இப்படத்தில் வரும் ‘நெஞ்சம் ஒருமுறை’ பாடல் முழுவதும் எம்ஜிஆர் போன்ற உடையணிந்து, அவரைப் போன்றே ஆடியிருப்பார் விஜய். விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனிலும் விஜய்க்கு எம்ஜிஆர் ஆசி வழங்குவது போன்ற காட்சி அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
எம்ஜிஆரை தனது ஆதர்ச நாயகனாகக் கொண்ட விஜய் 23 ஆண்டுகளுக்கு முன்னரே அவரிடம் ஆசி வாங்குவது போல காட்சி வைத்து, தற்போது அவரைப் போன்றே தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
On the occasion of Vijay's birthday... A look at Vaseegara, the romantic-comedy film starring Vijay.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரசிகர்களை நோக்கி விஜய்... நாளைய தீர்ப்பிலிருந்து தலைவா வரை!

துள்ளாத மனமும் துள்ளும்! விஜய் - சிம்ரன் ஜோடியின் வெற்றிப் படங்கள்!

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!
டாக்டர் பட்டம் பெற்ற நற்பணி நாயகன் விஜய்!
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை


