1999 ஆம் ஆண்டு வெளியான துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் விஜய் - சிம்ரன் நடிப்பில் சூப்பர் பிளாக்பஸ்டர் திரைப்படம். காதல், தியாகத்தை மையமாகக் கொண்டு உருவான முக்கியமான திரைப்படங்களில் ஒன்று.
விஜய் ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் காதல் திரைப்படங்களில் இது. விஜய்யின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த இப்படம் வெளியாகி 27 ஆண்டுகள் ஆனாலும் இன்று வரை மக்களின் நெஞ்சங்களில் நீங்காமல் பசுமையாக நிறைந்துள்ளது.
ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் வெற்றிகரமான பிணைப்பை எப்போதும் கொண்டிருந்தார். விஜய்யின் திரைப்பயணத்தில் பல முக்கியமான திரைப்படங்கள் இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கின்றன. இவையனைத்தும், அவர் தமிழ்த் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக அவரது இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும் வலுப்படுத்தவும் உதவின.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான விஜய்யின் திரைப்படங்களில் 'பூவே உனக்காக', 'லவ் டுடே', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'ஷாஜகான்', 'திருப்பாச்சி', 'ஜில்லா' ஆகியன அடங்கும். இத்திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, நடிகராக விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றின.
இவற்றில், 'பூவே உனக்காக' திரைப்படம் விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இது, அவரை சிறந்த காதல் நாயகனாக நிலைநிறுத்தியது. அதற்கடுத்து விஜய் நடித்த ரொமான்ஸ் படங்களில் காதலுக்கு மரியாதை படத்திற்குப் பின்னர் ரசிகர்களிடையே முக்கியத்துவம் பெற்ற படம் - 'துள்ளாத மனமும் துள்ளும்'. விஜய் - சிம்ரன் நடித்த இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு, அவரது திரைப்பங்களில் மிகவும் மறக்க முடியாத படங்களில் ஒன்றாகவும் மாறியது.
ஒரு திரைப்படத்திற்கு முதுகெலும்பாக இருப்பது திரைக்கதை. அது வலுவாக இருந்துவிட்டால் படம் நிச்சயம் வெற்றி. அதுவும் காதல் கதையாக இருந்தால் மக்கள் கொண்டாட ஆரம்பித்துவிடுவார்கள். அப்படியான ஒரு திரைப்படம்தான் துள்ளாத மனமும் துள்ளும். இயக்குநர் எழிலின் முதல் திரைப்படம்.
நடிகர் விஜய் (குட்டி), சிம்ரன் (ருக்மணி), மணிவண்ணன், தாமு, வையாபுரி, டவுசர் பாண்டி என முக்கிய நடிகர்கள் இப்படத்தில் இணைந்திருந்தனர். இசையமைப்பாளர் எஸ்.ஏ. ராஜ்குமாரின் பாடல்களான (இன்னிசை பாடி வரும், மேகமாய் வந்து போகிறேன், இருபது கோடி நிலவுகள்) இப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாக அமைந்தன.
பிளாஷ்பேக்கில் ஆரம்பமாகும் இந்தக் கதை கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் எங்கேயும் அலுப்புத் தட்டாமல், அடுத்தது என்ன, என்னவென்று மக்களை எதிர்பார்க்க வைக்கும் காட்சிகள் கடைசி வரை அழகாகப் படமாக்கியிருப்பார் இயக்குநர் எழில். படத்தின் தொடக்கத்திலிருந்தே ஹீரோவை தவறானவராகக் கற்பனை செய்துகொள்ளும் நாயகி ருக்கு. இன்னிசை பாடிவரும் பாடலுக்குச் சொந்தக்காரர் குட்டி என்பது தெரியாமல் அந்தக் குரலுக்கு மனதைப் பறிகொடுக்கிறார். ஒருகட்டத்தில் ருக்குவின் பார்வை பறிபோகக் காரணமாக அமையும் நாயகனாலேயே, ருக்கு ஆட்சியர் ஆகிறார். ஆனால், படம் முழுவதும் தான்தான் குட்டி என்பதை ஒரு இடத்தில்கூட வெளிப்படுத்தமாட்டார் விஜய்.
இப்படத்தின் இடையிடையே வரும் உறியடித் திருவிழா ரசிகர்களைக் கவர்ந்தது. போட்டியில் கலந்துகொள்பவர்கள் கண்ணைக் கட்டுவதும், அக்காட்சியில் தாமு வழக்கம்போல போட்டியாளர் ருக்குவின் பார்வை பறிபோனதை மறந்து கண்களைக் கட்டச் செல்வதுமாகக் கதையின் ஒவ்வொரு இடத்திலும் நுணுக்கத்தைச் சேர்த்திருப்பார் எழில்.
மணிவண்ணன் நடித்த கதாபாத்திரமும் இப்படத்திற்கு பலம். குட்டி தன் அம்மாவுக்குப் பணம் அனுப்புவதும், பதிலுக்கு அவரது தாய் இவருக்குப் பணம் அனுப்புவதுமாகத் தொடரும். இதைக் கவனித்துக் கேள்வி கேட்கும் மணிவண்ணனிடம், அதெல்லாம் பாசம் உணக்கு புரியாது என்று சொல்வதும் சிறப்பாக அமைந்திருக்கும். இப்படத்தில் கடைசி வரை குட்டியின் தாய் முகத்தைக் காட்டாமலேயே அவர் இறுதிச்சடங்கு நடைபெறுவது போன்ற காட்சிகளைப் படமாக்கியிருப்பார் இயக்குநர். அதற்கடுத்து வையாபுரியின் நகைச்சுவையும் இப்படத்திற்கு ரசனையைக் கூட்டியிருக்கும்.

முதல்வர் விஜய்யுடன் சிம்ரன் சந்தித்தபோது
காதலியான ருக்குவின் கண் பார்வையை மீட்கத் தனது கிட்னியை தானம் செய்ய புணே செல்லும் குட்டி. அதனிடையே பின்னணியில் காக்கைச் சிறகினில் பாட்டு ஒலிக்கப்படுவதும், அந்த பாடலில் படத்தின் மொத்த காட்சிகளும் காட்டப்பட்டிருக்கும். கிட்னிக்குப் பணம் வாங்குவதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் குட்டி.
படத்தின் சிகரம் என்றால் அது கிளைமாக்ஸ். தண்டனை முடிந்து ருக்குவைத் தேடிவரும் குட்டியைக் கண்டதும் ஆட்சியராக இருக்கும் ருக்கு அடித்து விரட்டச் சொல்வார். அந்த வழியாகச் செல்லும் கல்லூரிப் பேருந்தில் "இன்னிசை பாடி வரும்" பாடல் ஒலிக்க, அந்த பேருந்தை உடனே நிறுத்தச்சொல்லி "ஸ்டாப் த பஸ், ஸ்டாப் த பஸ் என்று கத்திக்கொண்டு சென்று பேருந்தை நிறுத்தி "நீங்க குட்டியா, நீங்கதான் குட்டியா" என்று பேருந்தில் இருப்பவர்களைப் பார்த்து கேட்க.. "இன்னிசை பாடி வரும்" என்று குட்டி பாட அந்த ஒரு நிமிடமே திரையரங்கம் அதிரும்.
உணர்ச்சிகரமான திரைக்கதை, விஜய் - சிம்ரன் ஜோடியின் நடிப்பு, இனிமையான பாடல்கள், குடும்ப ரசிகர்களைக் கவர்ந்த காமெடி காட்சிகள், வலுவான கிளைமாக்ஸ் இப்படம் வெற்றியடையக் காரணமாக அமைந்தது. படம் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுப் பல திரையரங்குகளில் 100 நாள்களுக்கு மேல் ஓடியது. துள்ளாத மனமும் துள்ளும் சாதாரண காதல் படம் அல்ல, காதல், தியாகம், மனிதநேயம், உண்மையான அன்பின் மதிப்பை எடுத்துரைக்கும் காலத்தால் அழியாத திரைப்படம்.
1990-களில் ரசிகர்களின் விருப்ப ஜோடியாக விஜய்-சிம்ரன் கூட்டணி கொண்டாடப்பட்டது. இவர்களின் படங்களில் குறிப்பாகத் துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே போன்ற படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது.
வெற்றிகரமான விஜய் - சிம்ரன் ஜோடி படங்கள்...
நேருக்கு நேர் - 1997ல் வசந்த் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய், சூர்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சிம்ரன், கௌசல்யா, ரகுவரன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இணைந்திருந்தனர். இரண்டு டீமாகச் செயல்படும் சூர்யா - விஜய் சாதாரண சட்டைக்காக நடுரோட்டில் சண்டையிடும் காட்சிகளும் இப்படத்தில் சிறப்பாக அமைந்திருக்கும்.

நேருக்கு நேர்
ஒன்ஸ்மோர் - 1997ல் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை குடும்பப் படமாகும். தன் அக்காவின் சாவுக்குப் பழிவாங்கும் நோக்கில் விஜய்யுடன் நெருங்கிப் பழகும் சிம்ரன், இறுதியில் உண்மை தெரிந்து விஜய்யுடன் இணைவது இந்த படத்தின் கதை.

ஒன்ஸ்மோர்
பிரியமானவளே - 2000-ல் கே. செல்வபாரதி இயக்கத்தில் திருமண வாழ்க்கையை மையமாகக் கொண்ட வெற்றிப் படம். திரையரங்குகளில் அதிக நாள்கள் திரையிடப்பட்டு வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. ஒரு வருடத் திருமண ஒப்பந்தத்தை மையமாகக் கொண்ட காதல் மற்றும் குடும்பக் கதையாகும். தெலுங்கில் வெளியான "பவித்ர பந்தம்" படத்தின் தமிழ் ரீமேக் இப்படம். விஜய் - சிம்ரன் இருவரின் இயல்பான நடிப்பும், குடும்ப உணர்வுகளையும், காதலையும் இணைத்த திரைக்கதை, இப்படம் இன்றளவும் பேசப்படுவதற்கு காரணம்.

பிரியமானவளே
யூத் - 2002ல் வெளியான இப்படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடிக்கவில்லை. அந்த படத்தில் வரும் ஆல் தோட்ட பூபதி நானடா என்ற பாடலில் மட்டும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மிகவும் பிரபலமான அந்த பாடலும், சிம்ரனின் நடனமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

யூத்
உதயா - 2004ல் அழகம் பெருமாள் இயக்கத்தில் உருவான ஆக்.ஷன் திரைப்படம். விஜய்யின் படங்களில் ரஹ்மான் இசையமைத்த முதல் படம். இப்படத்தில் கல்லூரி மாணவனாக வரும் இவர் குண்டுவெடிப்பு வழக்கில் மாட்டி, உண்மையை நிரூபிக்கப் போராடுவதே கதை. உதயா, உதயா என்ற தனித்துவமான பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் - சிம்ரன் இணையாக நடித்த இந்தத் திரைப்படங்கள் துள்ளாத மனங்களையும் துள்ள வைக்கும்!

உதயா
Even a heart that doesn't leap will leap with joy! Hit films starring the Vijay-Simran duo!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காதல் ஹீரோ டூ மாஸ் ஹீரோவான விஜய்! பாக்ஸிங் சாம்பியன் பத்ரி!

விஜய், நல்ல நடிகர் மட்டுமல்ல, ரசிகர்களுக்கு நல்ல தலைவன், நல்ல மனிதனும்கூட!
டாக்டர் பட்டம் பெற்ற நற்பணி நாயகன் விஜய்!
நேரம் தவறாமை, நேர்த்தி, தொழிலுக்கு மரியாதை... விஜய் நேர்காணல் -2!
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


