அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ரசிகர்களை நோக்கி விஜய்... நாளைய தீர்ப்பிலிருந்து தலைவா வரை!

முதல்வர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி... நாளைய தீர்ப்பிலிருந்து தலைவா வரை...

News image

விஜய் - நாளைய தீர்ப்பு, தலைவா.

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

நாளைய தீர்ப்பிலிருந்து தலைவா வரை விஜய்க்கு அமைந்த, அமைக்கப்பட்ட கதைகள் குறித்து...

எஸ். ஏ. சந்திரசேகர் முதல்வர் விஜய்யை அறிமுகப்படுத்திய நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் என்ன நினைத்து டைட்டில் கார்டில், “என் மகன் விஜய்யின் எதிர்காலத்தை உங்களிடம் ஒப்படைக்கிறேன்” எனப் போட்டாரோ, அன்றிலிருந்து இன்றுவரை தமிழக மக்களிடம் விஜய்யின் அலை ஓயவே இல்லை. நாளைய தீர்ப்பிலிருந்துதான் எல்லாம் ஆரம்பித்திருக்கிறது. ஓரிரு காட்சிகள் முடிந்ததும் விஜய் கல்லூரிக்குச் சென்று அநீதியைக் கண்டு கொதிக்கும் இளைஞனாக, “நாட்டோட எதிர்காலம் நம்மைப் போன்ற இளையர்களிடம்தான் இருக்கிறது எனப் பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், அதைக் கொடுக்க மாட்டார்கள். நாம்தான் எடுத்தகணும்” என்பார். படம் முழுக்க வசனங்கள் தெறிக்கும். இருந்தும், முதல் படமே தோல்விப்படம். அதைவிட, வந்த எதிர்மறை விமர்சனங்கள் கொடுத்த மன உளைச்சலே விஜய்க்கு அதிகமாக இருந்திருக்கும். அவரே சொன்னது போல், “முகம் சரியில்லை, ஆள் சரியில்லை” என ஏகப்பட்ட தாக்குதல்கள் நிகழ்ந்தன.

அதேநேரம், எஸ். ஏ. சந்திரசேகர் விஜய்யை மிக கவனமாக வடிவமைத்தார். அடுத்தடுத்த படங்களான செந்தூரப்பாண்டி, ரசிகன் படங்களில் விஜய்யின் கதாபாத்திர பெயரை விஜய் என்றே வைத்தார். சினிமாவில் முகம் பதிவாகிற அளவிற்குப் பெயரும் பதிவாக வேண்டுமே? அவர் எடுத்த முயற்சிகள் கைகொடுக்கின்றன. அப்படங்களின் காதல் காட்சிகளும், உணர்வுப்பூர்வமான விஜய் வசனங்களும் ஏற்றுக்கொள்ளப்பட, இனி ஒரே மாதிரி கதைகளில் நடிக்காமல் வித்தியாசமான கதைகளிலும் குடும்பங்களைக் கவரும் நாயகனாகவும் இருக்க வேண்டுமென எஸ். ஏ. சியே கதைகளைக் கேட்க ஆரம்பித்தார். விஜய்க்கு என்ன வரும்? என்ன செய்தால் அடுத்தகட்டத்திற்குச் செல்வார் என இயக்குநருக்கே உண்டான புரிதலுடன் விஜய்க்கான கதைகளை ஒப்பந்தம் செய்ய தொடங்கினார். பெரும்பாலும் தன்னுடைய இயக்கத்திலேயே நடித்துக்கொண்டிருந்த விஜய்க்கு கோயமுத்தூர் மாப்ளே ஹிட் அடித்ததும் இயக்குநர் விக்ரமன் பூவே உனக்காக கதையைக் கொண்டு வருகிறார். அந்தப் படம்தான் விஜய்யை பெருவாரியான ரசிகர்களிடம் கொண்டு சென்றது. அதற்கு முன் வரை குடும்பத்திற்குள், சமூகத்திற்குள் நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக கொந்தளிக்கும் விஜய் பூவே உனக்காக திரைப்படத்தில் முழுமையான காதல் நாயகனானார்.

விஜய்யின் இந்த உருவாக்கம் திட்டமிட்டே இருந்தது. யோசித்துப் பாருங்கள், நம்மை அடக்கும் அதிகாரங்களுக்கு எதிராக, நம்மைச் சுரண்டும் அதிகாரமிக்கவர்களுக்கு எதிராக குரலை உயர்த்தும் யாரையாவது நாம் எதிர்ப்போமா? இல்லை, வெறுக்கத்தான் செய்வோமா? எஸ். ஏ. சி. அப்படி யாராலும் வெறுக்க முடியாத விஜய்யை உருவாக்குவதில்தான் ஆரம்ப காலங்களில் தீவிரமாக இருந்திருக்கிறார். முதல் சில படங்களில் விஜய் படமென்றாலே பார்க்கும்படி இருக்கும் என்கிற பிம்பம் ஒருபக்கம் இணைய, அடுத்தடுத்து 1996-களிலிருந்து வெளியான பூவே உனக்காக, காலமெல்லாம் காத்திருப்பேன், காதலுக்கு மரியாதை, ஒன்ஸ் மோர், லவ் டுடே என அன்றைய காலத்திற்கு ஏற்ற காதல் கதைகள் வரிசையாக வெளியாக வயது வித்தியாசம் இல்லாமல் பல லட்ச ரசிகர்களைச் சென்றடைந்திருக்கிறார்.

விஜய்

விஜய்

காதலால் இரு குடும்பங்களுக்குள் நிகழும் பிரச்னைகளை மையமாக வைத்து எழுதப்படும் கதையில் கமர்சியல் அம்சங்களுடன் காட்சிகளுக்கு விஜய் மிகச்சரியாக ஒன்ற ஆரம்பித்திருந்தார். விஜய்க்கென ஃபார்முலா தீவிரமடைவது 1990-களின் இறுதி ஆண்டுகளில்தான்.

2000-க்கும் பின்பும் தன்னை மிக ஸ்டைலாக காட்டுவதற்காக அதிகமும் கல்லூரியில் பயிலும் மாணவனாக, படித்து முடித்துவிட்டு காதலிக்கும் இளைஞனாக என பத்ரி, ஷாஜகான் படங்களில் துள்ளலான விஜய்யைப் பார்த்தவர்கள் 2000-களின் ரசனைக்கான கதாநாயகனாகவும் அவரை ஏற்றுக்கொண்டனர். புதிய நூற்றாண்டு, அதற்கான ரசனை, ஆடை மாற்றங்கள், பெண்கள் அதிகம் கல்வியை நோக்கி நகர்ந்தது, சமூக ரீதியாக சில முன்னேற்ற பார்வைகள் என 2000-த்தில் சினிமா புது வடிவம் பெற்றது. அங்கும், விஜய்க்கு வெற்றிகள் குவிய ஆரம்பிக்க, 2004-ல் வெளியான கில்லி, விஜய்யின் வணிகத்தையும் செல்வாக்கையும் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. தமிழகம் முழுவதும் விஜய்க்கென மிக அதிகமான ரசிகர்கள் உருவாகின்றனர்.

அடுத்தடுத்து திருப்பாச்சி, சிவகாசி என அண்ணன் - தங்கை பாசக் கதைகளில் நடித்து பல தென் தமிழக மக்களின் அண்ணனாகவும் மாறுகிறார். அண்ணன் - தங்கைப் பாச கதைகளில்கூட அநியாயத்திற்கு எதிரான நாயகனாக நடித்தது கவனிக்க வேண்டியது. 2005-க்குப் பிறகு சினிமா மேக்கிங்கிலும் சில முன்னேற்றங்கள் நடந்ததால் போக்கிரி போன்ற பக்கா கமர்சியல் படம் விஜய்க்கு மிகச்சரியாகக் கைகொடுக்க, ரஜினிக்குப் பின் விஜய்தான் என்கிற வலுவான இடத்தைப் பிடிக்கிறார். விஜய்யின் படங்கள் எம்ஜிஆர், ரஜினி பாணி கலவையாக இருந்தன. ஒருபக்கம் காதல் - குடும்ப கதைகளில் இருப்பார்; இன்னொரு பக்கம் அதிகாரத்திற்கு எதிரான சாமானியனாக. இரண்டும் விஜய்யைக் கைவிடவில்லை.

சாதாரண ஆள் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்கும் தலைவன் ஆகிர கதைகளாகத் தேர்ந்தெடுத்தார். குருவி, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து அப்படியான படங்கள் விஜய்யின் எதிர்கால ஆசைக்கு விதையாக அமைந்தன. (2000-களுக்குப் பின் விஜய் மக்கள் இயக்கம் தொடர்ச்சியாக சமூக நலத்திட்டங்கள், உதவிகளைத் தீவிரமாக முன்னெடுத்து வந்ததையும் கருத்தில் கொள்ள வேண்டும்). அதற்கு இணையாக காவலன், நண்பன் போன்ற ஜாலியான படங்களிலும் நடித்தார்.

விஜய் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். அவருக்கு எல்லாத் தரப்பு ரசிகர்களும் எல்லா வித கேள்விகளுக்கும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அரசியல் உள்பட!

அதனை உறுதியாக்கும் விதமாக, கடந்த 2009-ல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விஜய் தில்லியில் சந்தித்தது பேசுபொருளானாது. இருவரும் இணைகிறார்களா? இல்லை, காங்கிரஸில் விஜய் சேர்கிறாரா? எனக் கேள்விகள் தமிழகத்திற்கும் தில்லிக்கும் பறந்துகொண்டிருந்தன.

தொடர்ந்து, விஜய்யே இதுகுறித்து பேசிய போது, “இப்போதைக்கு நான் அரசியலில் ஈடுபடுவதாக இல்லை. என் தற்போதைய இலக்கு சினிமாதான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரியாது. தமிழக மக்களுக்கும் தமிழகத்துக்கும் உலகத் தமிழர்களுக்கும் எந்த அரசு நன்மை செய்கிறதோ அந்த அரசுடன், நான் எனது ரசிகர்களுடன் எதிர்காலத்தில் கைகோத்துச் செயல்படுவேன். அது எப்போது என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.” என்றார்.

தொடர்ந்து, தலைவா திரைப்படத்திற்கு முன்பே வேலாயுதம் திரைப்படத்தில் நீரோட்டம் போல சில அரசியல் கருத்துக்களைச் சொல்லிப் பார்த்தார். ”ஒரு சாதாரண மனிதன் மக்களின் தலைவராக மாறுவது" இதுதான் இப்படத்தின் ஒன்லைன் என்கிற போதே சத்தமில்லாமல் படத்தின் மீது அரசியல்வாதிகள் கண் வைக்கத் தொடங்கினர். படம் நேரடியாக அரசியலைப் பேசாததால் தப்பித்தது இல்லையென்றால் தலைவாவுக்கு முன்பே தடை பஞ்சாயத்தில் சிக்கியிருக்க வேண்டிய படமாக மாறியிருக்கும் என இப்போதும் பேச்சுகள் உண்டு.

தலைவாவுக்கு வந்த பிரச்னையைத் தமிழ் சினிமா எப்போதும் மறக்காது. டீசர், டிரைலரிலேயே படம் விஜய்யின் வழக்கமான படம் கிடையாது ஏதோ ஒரு செய்தி இருக்கிறது என பரபரப்பு பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஏற்ப, “Time to lead” என்கிற வாசகத்துடன் தமிழகத்தைத் தவிர உலகம் முழுவதும் தலைவா வெளியானது. கூட்டம், கூட்டமாக விஜய்யைத் திரையில் காண அண்டை மாநிலங்களுக்கு ரசிகர்கள் விரைந்தனர்.

பல பேச்சுவார்த்தைகள், மறைமுக அழுத்தங்களுக்குப் பின், “time to lead" வாசகத்தை நீக்கிய பின்பு, தமிழகத்தில் 11 நாட்கள் தாமதமாக தலைவா வெளியானது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன் எஸ். ஏ. சந்திரசேகர் உடன், அருகே கைகட்டியபடி விஜய் இருந்த புகைப்படம் இன்றும் சமூக வலைதளத்தில் சுற்றலில் இருக்கிறது. விஜய்யின் அரசியல் வருகைக்கான முட்டுக்கட்டையாக தலைவாவை எடுத்துக்கொள்ளாமல் இதுதான் ஆரம்பம் என விஜய் உள்ளூர நினைத்திருக்க வேண்டும். நாளைய தீர்ப்பிலிருந்து இதுவரை ரசிகர்களை நோக்கிச் சென்ற விஜய், தலைவாவுக்குப் பின் மக்களை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்!

Reflecting on the stories whether chosen or crafted that Vijay has worked on, spanning from Naalaiya Theerpu to Thalaivaa

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.