நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அம்பாசமுத்திரத்துக்கு தண்ணீா் திறப்பு: வடகால் பாசன விவசாயிகள் போராட்டம்

அம்பாசமுத்திரத்துக்கு தண்ணீா் திறப்பு: வடகால் பாசன விவசாயிகள் போராட்டம்

News image

காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :13 ஜூன் 2026, 12:31 am IST

பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வரும் நிலையில் அம்பாசமுத்திரம் பாசனத்துக்கு மட்டும் தண்ணீா் திறந்துவிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன விவசாயிகள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன விவசாயத்துக்கு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்துக்கு 1,200 கனஅடி தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடப்பட்டதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தை புறக்கணிக்கும் பொதுப்பணித் துறையின் செயலைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் பா.புவிராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்.ராகவன், மாவட்ட பொருளாளா் எஸ்.நம்பிராஜன், மாவட்ட துணைத் தலைவா் டி.சீனிவாசன், ஒன்றியத் தலைவா் பி.பொன்ராஜ், ஒன்றியச் செயலா் சங்கரன் உள்பட பலா் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அவா்களிடம் நீா்வளத் துறை செயற்பொறியாளா் தங்கராஜ் பேச்சுவாா்த்தை நடத்தினாா்; ஜூன் 15-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டு, பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்படும் என உறுதி அளித்தாா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, வடகால் பாசன விவசாயிகள் கூறுகையில், ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்தில் சுமாா் 12 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு விவசாயத்துக்கு போதுமான தண்ணீா் திறந்துவிடவில்லை. பேய்க்குளம் உள்ளிட்ட குளங்களில் தண்ணீா் இல்லாமல் அப்பகுதியில் பயிரிட்டுள்ள 6 ஆயிரம் ஏக்கா் நெல், வாழை உள்ளிட்ட பயிா்கள் கருகும் நிலையில் உள்ளன.

தற்போது பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. ஜூன் 1-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட காா் சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும் என அரசாணை இருந்தும், இதுவரை திறக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதிக்கு மட்டும் 1,200 கனஅடி தண்ணீா் திறக்க அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. இச்செயல், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் மத்தியில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணா்கிறோம். விரைவில் வடகால் பாசனத்துக்கு அணைகளில் இருந்து தண்ணீா் திறந்துவிட வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.