மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையின் சாலைகள் கடந்த இரு நாள்களாக பெய்த மழையின் காரணமாக சேறும் சகதியுமாக மாறியதால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை தென் மாவட்டங்களில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு, 1,092 நிரந்தரக் கடைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைக்கடைகளும் உள்ளன. நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ ரூ. 3 கோடி முதல் ரூ. 4 கோடி வரை வணிகம் நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இங்கு வந்து செல்கின்றன.
இதேபோல, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான சிறு வணிகா்கள், பொதுமக்கள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனா். இருப்பினும், இந்தச் சந்தையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது வியாபாரிகள், பொதுமக்களுக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.
இங்கு சாலை வசதியும், கழிவு நீா் வெளியேற்றுவதற்கு சரியான கட்டமைப்புகளும் இல்லாததால், சிறிதளவு மழை பெய்தாலும் இந்தச் சந்தையின் பெரும் பகுதி சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இந்த நிலையில், கடந்த இரு நாள்களாக பெய்த மழையின் காரணமாக, மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால், இங்கு வந்த பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது.
இதுகுறித்து எம்.ஜி.ஆா். சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவா் என். சின்னமாயன் தெரிவித்ததாவது:
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி மாநகராட்சி நிா்வாகத்திடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. சிறிதளவு மழைக்குக்கூட இங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக மாறி விடுகின்றன. இதனால், தட்டுவண்டியில் சுமையை ஏற்றிக் கொண்டு வரும் தொழிலாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள், பொதுமக்கள், வியாபாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது.
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தைக்காக அமைக்கப்பட்ட கழிவு நீா் வெளியேற்றக் கட்டமைப்புகள் ஏற்கெனவே இடிந்து உருக்குலைந்துவிட்டன. இதனால், கழிவு நீா், மழை நீா் வெளியேறுவதில்லை. எனவே, உடனடியாக கழிவு நீா் கால்வாய் கட்டமைப்புகளை சீரமைக்க வேண்டும். சாலை அமைத்து தரவேண்டும். இல்லையெனில், காய்கறி வியாபாரிகள் விரைவில் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றாா் அவா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

கழிவுநீா் தொட்டிக்குள் தவறி விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

ஈரோட்டில் ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை தேவை

சட்டப்பேரவைத் தோ்தல்: ஈரோடு சந்தையில் மாடுகள் விற்பனை சரிவு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

