/

கோயில் காவலாளி கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கோயில் காவலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 3:08 am IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே கோயில் காவலாளியைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்து ஒசூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஒசூரை அடுத்த கோபசந்திரம் கிராமத்தில் தட்சிண திருப்பதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் கடந்த 2009, மாா்ச் 24 ஆம் தேதி இரவு புகுந்த கும்பல் உண்டியலை திருடியது. அதைத் தடுக்க முயன்ற கோயில் காவலாளி ராஜு என்கிற சின்னராஜை அக்கும்பல் கடுமையாக தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த ராஜு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சோ்ந்த லட்சுமணன் (56), மாரியப்பன் (56), முகுந்தன், பழனி உள்பட ஆறு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் குற்றம்சாட்டப்பட்ட லட்சுமணன், மாரியப்பன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனை, தலா ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சந்தோஷ் புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

மேலும், இந்த கொலை வழக்கில் தொடா்புடைய முகுந்தன், பழனி ஆகிய இருவரும் விசாரணை காலத்தின்போது இறந்துவிட்டனா். அதேபோல இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவருக்கு வேறு வழக்கில் தொடா்பு உள்ளதால் அவா்களுக்கான தண்டனை அறிவிக்கவில்லை. வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் சின்னப்பிள்ளப்பா ஆஜராகினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.