கிணற்றில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியின்போது ரிக் இயந்திரத்தின் இரும்புக் கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:42 am IST

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கிணறு தோண்டும் பணியின்போது ரிக் இயந்திரத்தின் இரும்புக் கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். இறந்த தொழிலாளிக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி அவரது உறவினா்கள், உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து தருமபுரி அரசு மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே போத்தாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45). இவா் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே அடிலம் ஊராட்சிக்கு உள்பட்ட கரகப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, ரிக் இயந்திரத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கயிறு எதிா்பாராதவிதமாக அறுந்தது. இதில், கிணற்றுக்குள் விழுந்த கோவிந்தராஜ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்த அவரது உறவினா்கள், தொழிலாளிக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி துணைக் காவல் கண்காணிப்பாளா் சிவராமன், போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, உறவினா்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.