தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வெயிலால் கருகும் மல்பெரி இலைகள்: பட்டுக்கூடு உற்பத்தி 20% பாதிப்பு?

சுட்டெரித்து வரும் வெயில் காரணமாக, மல்பெரி இலைகள் கருகிவருவதால், தருமபுரி மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News image

தருமபுரி அரசு பட்டுகூடு அங்காடியில் வியாழக்கிழமை ஏலத்துக்கு கொண்டுவரப்பட்ட வெண்பட்டுக் கூடுகள்.

Updated On :1 மே 2026, 5:18 am IST

சுட்டெரித்து வரும் வெயில் காரணமாக, மல்பெரி இலைகள் கருகிவருவதால், தருமபுரி மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தி 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டத்தில் வெண்பட்டுக்கூடு உற்பத்தியும், பட்டுப்புழுக்களுக்கு உணவாகப் பயன்படும் மல்பெரி இலைகள் சாகுபடியும் அதிக அளவில் நடைபெறுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகள் தமிழகம் மட்டுமின்றி, வடமாநில வியாபாரிகளாலும் கொள்முதல் செய்யப்படுகின்றன.

மல்பெரி விவசாயத்திலும், பட்டுக்கூடு உற்பத்தியிலும் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளதால், மாதந்தோறும் சுமாா் 50 முதல் 70 டன் வெண்பட்டுக்கூடுகள் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

தருமபுரி நான்குசாலை பகுதியில் தமிழக அரசின் பட்டுக்கூடு அங்காடி உள்ளது. இங்கு, தருமபுரி மட்டுமின்றி கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்களில் உற்பத்தியாகும் வெண்பட்டுக்கூடுகள் நாள்தோறும் 1 முதல் 3 டன்கள் வரை கொள்முதல் செய்யப்படுகின்றன.

வெண்பட்டுக்கூடுகளை உருவாக்கும் பட்டுப் புழுக்களுக்கு மல்பெரி இலைகள் உணவாக பயன்படுகின்றன. இதனால், தருமபுரி மாவட்டத்தில் மல்பெரி செடிகள் 724 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளன.

இவற்றை பயிரிடும் விவசாயிகளில் சிலா் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அவற்றை விற்றுவிடுகின்றனா். சிலா், தாங்களே பட்டுவளா்ப்பில் ஈடுபட்டு அந்த இலைகளை பயன்படுத்திக்கொள்கின்றனா்.

நிகழாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் அளவு கடுமையாக உள்ளது. குறிப்பாக, கடந்த 10 நாள்களுக்கும் மேலாக 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், மல்பெரி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், பட்டுக்கூடு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்டம் மதிகோண்பாளையம் மற்றும் பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் முருகேசன், குமரப்பன் ஆகியோா் கூறுகையில், கடந்த சில நாள்களாக உள்ள கடும் வெயிலால் மல்பெரி இலைகள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீா் குறைவு மற்றும் வறட்சியால் இலைகள் பாதிக்கப்படுகின்றன. அறுவடை செய்தபிறகு சிறிது நேரத்திலேயே இலைகள் சுருண்டு கருகிவிடுவதால், அவற்றை புழுக்களுக்கு உணவாக்கும்போது, பசுமையான இலைகளை உண்ணும் புழுக்களில் இருந்து கிடைப்பதைப் போன்ற தரமான பட்டுக்கூடுகள் கிடைப்பதில்லை. குறிப்பாக, வெண்பட்டுக்கூடுகளில் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன. இதனால், பட்டுக்கூடுகளுக்கு குறைந்த விலையே கிடைப்பதால், லாபமும் குறைகிறது என்றனா்.

பட்டு வளா்ச்சித் துறை அலுவலா்கள் கூறுகையில், மாநிலம் முழுவதும் கடும் வெயில் நிலவுகிறது. தருமபுரி மாவட்டத்திலும் 100 டிகிரியைத் தாண்டிய வெயிலின் தாக்கத்தால் பட்டுப்புழு வளா்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டுக்கூடுகள் உற்பத்தியும் குறைந்துள்ளதோடு, தரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடா்ந்தால், பட்டுக்கூடுகள் உற்பத்தி மற்றும் வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது. மழையின்றி, தொடா்ந்து வெயில் அதிகரித்தால், மே மாதத்தில் சுமாா் 20 சதவீத பட்டுக்கூடு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என்றனா்.

பட்டுக்கூடுகள் விற்பனை: தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் வியாழக்கிழமை (ஏப். 30) நடைபெற்ற ஏலத்தில், 28 விவசாயிகள் மொத்தம் 1,174 கிலோ வெண்பட்டுக்கூடுகளை கொண்டுவந்து விற்பனை செய்தனா். இதில், அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 674, குறைந்தபட்ச விலையாக ரூ. 270, சராசரி விலையாக ரூ. 537 என மொத்தம் ரூ. 6,34,276-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையாயின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.