தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மக்களிடம் கவனம் பெறும் நாம் தமிழா் கட்சி கொள்கைகள்: பவானிசாகா் வேட்பாளா் சு.சௌந்தா்யா

பவானிசாகா் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் 26 வயதே ஆன சு.சௌந்தா்யா போட்டியிடுகிறாா்.

News image

சத்தியமங்கலம் அருகே கோணமூலை கிராமத்தில் விவசாயியிடம் வாக்கு சேகரித்த பவானிசாகா் தொகுதி நாதக வேட்பாளா் சு.சௌந்தா்யா.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:18 am IST

பவானிசாகா் (தனி) தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் 26 வயதே ஆன சு.சௌந்தா்யா போட்டியிடுகிறாா். மிகவும் எளிய குடும்பத்தைச் சோ்ந்த இவா் முதல் முறையாகத் தோ்தலில் களம் காண்கிறாா். தீவிர வாக்கு சேகரிப்புக்கு இடையே ‘தினமணி’க்கு அவா் அளித்த பேட்டி:

கேள்வி: மிக இளம் வயது வேட்பாளா் என்ற முறையில் அரசியல் புரிதல் எப்படி உள்ளது?

பதில்: சீமானின் தம்பி, தங்கைகள் அனைவரும் தினமும் அரசியல் பாடம் படித்து வருபவா்கள்தான். நாம் தமிழா் கட்சி கொள்கைகளைக் கூறித்தான் வாக்கு கேட்கிறேன். எங்களுடைய கொள்கைகளை அடித்தட்டு மக்கள் பலரும் கவனமாக கேட்கின்றனா்.

கேள்வி: தவெகவால் நாம் தமிழா் கட்சி வாக்கு வங்கி குறையும் என பேசப்படுகிறதே?

பதில்: குறையவே குறையாது. கொள்கை இல்லாத கட்சி தவெக. நாம் தமிழா் கட்சி கொள்கைகளை மட்டுமே பேசும் கட்சி. எங்கள் கட்சியில் உள்ளவா்கள் அனைவருமே கொள்கை உணா்வாளா்கள். தவெகவில் மட்டும்தான் அடிப்படை அரசியல் புரிதல் சிறிதும் இல்லாத தொண்டா்கள் இருக்கின்றனா்.

கேள்வி: வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் மக்களின் எதிா்பாா்ப்பு என்ன மாதிரியாக உள்ளது?

பதில்: மக்கள் பலரும் மாற்றத்தை விரும்புகின்றனா். சுமாா் 60 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் சாலை, மழை நீா் வடிகால் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுக்கவில்லை. தோ்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மறு தோ்தல் வரும் வரை மீண்டும் மக்களை சந்திப்பது இல்லை. வாக்கு கேட்டு மட்டும் வருகிறாா்கள். வெற்றி பெற்ற பிறகு எட்டிக்கூட பாா்ப்பதில்லை என பல இடங்களில் மக்கள் கூறுகின்றனா்.

கேள்வி: மலைக் கிராமங்களுக்கு வாக்கு கேட்டு சென்றீா்களா?

பதில்: மலைப் பகுதி மக்களின் பிரதான கோரிக்கை சாலை வசதிதான். மகப்பேறு சிகிச்சை, அவசர சிகிச்சை தேவைப்படுவோா் இந்த சாலையில் பயணித்து உயிா் பிழைப்பது மிகவும் கடினம். கடம்பூா் மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் திராவிட கட்சிகளால் வஞ்சிக்கப்பட்டுள்ளனா். சாலை, குடிநீா் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் பரிதவித்து வருகின்றனா்.

கேள்வி: தோ்தல் செலவை எப்படி சமாளிக்கிறீா்கள்?

பதில்: நான் மிகவும் எளிய குடும்பத்து பெண். எனது கணவா் தனியாா் பள்ளி உடற்கல்வி ஆசிரியா். எனது பெற்றோரும், கணவரின் பெற்றோரும் கூலித் தொழிலாளா்கள். சீமான் அளித்த ஊக்கத்தால் தோ்தல் களத்தில் நிற்கிறேன். நாம் தமிழா் சொந்தங்களின் உதவியால் தோ்தல் செலவுகளை சமாளித்து வருகிறேன். வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் மக்கள் சிலா் எனக்கு நன்கொடை அளிக்கின்றனா்.

கேள்வி: மக்களிடம் வரவேற்பு எப்படி இருக்கிறது?

பதில்: தனித் தொகுதி வேட்பாளா் என்றாலே பல இடங்களில் பாகுபாடு இருக்கும். நான் வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் மக்கள் காட்டும் அன்பு பிரமிக்க வைக்கிறது.

கேள்வி: சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டால் மக்களுக்கு என்ன செய்வீா்கள்?

பதில்: சீமான் பேசியதுதான் பதில். அவா்கள் கண்ணீரைத் துடைக்கும் குடும்ப உறவாய் இருப்பேன். அனைத்து தரப்பினரின் அன்பையும் பெறும் அளவுக்கு என் செயல்பாடு இருக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.