/

வேலைவாய்ப்பு வழிகாட்டி...

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று எழுபத்து ஆறு வயதாகியும் வீட்டில் முடங்கி இருக்காமல், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்.எம்.பெருமாள்.

News image
Updated On :1 மார்ச் 2026, 4:14 am IST

அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று எழுபத்து ஆறு வயதாகியும் வீட்டில் முடங்கி இருக்காமல், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்.எம்.பெருமாள்.

தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட பண்பொழியைச் சேர்ந்த பெருமாள், 1950-இல் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவர், 1974- ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐ.ஏ.எஸ். & ஒருங்கிணைந்த தேர்வில் தேர்வானார். பின்னர், அவர் 34 ஆண்டுகள் தில்லி மத்திய அரசு செயலகத்திலும், தொலைத் தொடர்புத் துறையில் இயக்குநராகவும் (நாடாளுமன்றம்) இருந்து 2010-இல் ஓய்வு பெற்றார்.

'மத்திய அரசுப் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் அதிக எண்ணிக்கையில் சேரவேண்டும்' என்ற முனைப்புடன் ஓய்வு பெற்றவுடன் செயல்படத் தொடங்கிய இவரது வழிகாட்டுதலால் பலர் மத்திய அரசுப் பணிகளில் இருந்துவருகின்றனர்.

Story image

அவரிடம் பேசியபோது:

'கிராமத்தில் பிறந்து வேலைக்கான வழிகாட்டுதல் இல்லாமல் கஷ்டப்பட்டு, மத்திய அரசுப் பணியில் சேர்ந்தேன்.

1980-களில் தில்லியில் 'தமிழ் இளைஞர் பண்பாட்டுக் கழகம்' என்ற அமைப்பு போட்டித் தேர்வுகள் குறித்து தமிழ் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சியை அளித்து வந்தது.

அதனுடன் இணைந்தும், தனியாகவும் இளைஞர்களுக்கு இலவசப் பயிற்சியை நான் அளித்தேன். அன்றைய காலகட்டத்தில் நண்பர்களிடம் பணம் வசூலித்து திருநெல்வேலி நூலகத்துக்கும், பாளையங்கோட்டை மாவட்ட நூலகத்துக்கும் போட்டித் தேர்வுகளுக்கு உண்டான நூல்களை வாங்கி அனுப்பினேன். பத்திரிகைகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வேலைதொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளேன்.

நான் பணியில் இருக்கும்பொழுது, மத்திய தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் குறித்த தகவல்களை தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், நூலகங்களுக்கு கடிதமாக அனுப்புவேன். அன்றைய காலகட்டத்தில் இது பல மாணவர்களுக்குப் பெரும் பயனைத் தந்தது.

2010-இல் நான் ஓய்வு பெற்றவுடன் எனது பணியை விரிவுபடுத்தினேன். ஓய்வூதியத்தில் பாதியை குடும்பத்துக்கும், மீதியை மாணவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான புத்தகங்களை எழுதவும், அவர்களுக்கு வழங்கவும், கல்வி நிறுவனங்களுக்கு பயணம் செய்யவும் பயன்படுத்துகிறேன்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று மத்திய அரசிலுள்ள வேலைவாய்ப்புகள், அதற்கான வழிமுறைகள் , படிக்க வேண்டிய நூல்கள், ஒதுக்க வேண்டிய நேரம் என தொடர்புடைய விஷயங்களைப் பேசி வருகிறேன்.

நான் எழுதிய 'தமிழ் இலக்கியப் பேழை' , 'பொது அறிவுப் பேழை' , கேள்வி -பதில் வடிவிலான 'இந்திய அரசியலமைப்புச் சட்டம்' , 'இந்திய சுதந்திரப் போராட்டம்', 'அடிப்படை ஆங்கில அறிவு நூல்', 'ஐ.ஏ.எஸ். & மத்திய அரசு உயர்நிலை வேலைகள் பெறுவது எவ்வாறு?' உள்ளிட்ட நூல்களையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன்.

இவை அனைத்தும் எனது பிளாக் ஸ்பாட்டிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அது தவிர 'சுவாமி ஐ.ஏ.எஸ். குட் ஆர் பேட்' என்ற ஆங்கிலப் புதினம், 'ஜெனரல் நாலேஜ் டைஜஸ்ட்', 'இங்கிலீஷ் லிட்டரேச்சர் கொட்டேஷன்ஸ்' உள்ளிட்ட ஆங்கில நூல்களையும் எழுதியுள்ளேன். 'இந்திய அரசமைப்புச் சட்டம்' என்ற நூலுக்கு பிரதமரின் அலுவலகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

போட்டி நிறைந்த உலகமாக மாறிவிட்ட இந்தக் காலத்தில் கல்லூரியைத் தாண்டி வேலைவாய்ப்பு, போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை 8, 9-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். அவர்களுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளுக்குச் சென்று நூல்களை வழங்கி வருகிறேன். சில நாள்களுக்குப் பின்னர் அந்தப் பள்ளிக்குச் சென்று புத்தகங்களில் இருந்து சில கேள்விகள் கேட்டு பதில் சொல்பவர்களுக்கு பரிசும் அளித்து வருகிறேன்.

எந்த வழிகளில் எல்லாம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தைப் பெருக்க முடியுமோ அந்த வழிகளைப் பயன்படுத்தி மாணவர்கள் மத்தியில் பேசி வருகிறேன். போட்டித் தேர்வுகளை மாணவர்கள் தயக்கமின்றி எழுத வேண்டும் என்பதற்காக முடிந்தளவு முயன்று வருகிறேன்.

அழைப்பின்பேரில் கல்லூரிகளுக்குச் சென்று வேலைவாய்ப்புகள் குறித்துப் பேசி வருகிறேன். அதற்காக கல்வி நிறுவனங்களிடம் இருந்து எதுவும் பெறுவது கிடையாது. என்னால் முடியும் வரை ஓய்வின்றி இந்தப் பணியைத் தொடருவேன் .

எனது சேவையைப் பாராட்டி பல்வேறு கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் விருதுகளை வழங்கியுள்ளன. விருதுக்காக நான் இதைத் செய்யவில்லை. மத்திய அரசுப் பணியில் அதிக அளவில் எப்போது தமிழக மாணவர்கள் இடம்பெறுகிறார்களோ அதுதான் எனக்கு பெரும் விருதாக அமையும்' என்கிறார் பெருமாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.