'இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை; மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்; மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்' என்பதை காலவரிசைப்படி அறியலாம். ஓதுபவருக்கும் கேட்பவருக்கும் நன்மைகளை அளிக்கும் திருவாசகமானது உலகில் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகிறது. சிறப்புடைய இந்தத் திருவாசக முற்றோதலை அடியார்கள் பல குழுக்களாகச் செய்து வருகின்றனர்.
இவ்வாறாக, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு உள்பட்ட அம்மாபேட்டையில் 'மணிவாசகர் சிவநெறி அறக்கட்டளை'யினர் இருபது ஆண்டுகளாக முற்றோதலை நடத்திவருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட முற்றோதல்களை நடத்தியுள்ள நிலையில், இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர் செளரிராஜனிடம் பேசியபோது:
'சைவக்குரவர் நால்வரில் நான்காமவர் மாணிக்கவாசகர். பழவடியார்களில் ஒருவரான மாணிக்கவாசகர், மறுபிறப்பில் அரிமர்த்தன பாண்டியனின் அவையில் முதல்வராகப் பதவி வகித்தவர். குதிரை வாங்கச் சென்றபோது குருந்த மரத்தடியில் இறைவனருள் உபதேசம் பெற்ற திருப்பெருந்துறை (தற்போது ஆவுடையார் கோயில்) வரலாறு குறித்தும், நரிகள் குதிரையானதும், வைகையாற்றில் வெள்ளம் வர, பின்பு இறைவனே பிட்டுக்கு மண்சுமந்த நிகழ்வும் யாவரும் அறிவோம்.
அத்தகைய மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் சைவத்தில் எட்டாம் திருமுறையாக வகைப்படுத்திப் போற்றப்படுகிறது. சிவபுராணத்தை உணர்ந்து சொல்பவர் பலரும் போற்றும்படியாக சிவபதம் அடைந்து பணிந்து பிறவிக்கடல் நீந்துவர் என அவரே உறுதியளிக்கிறார்.
பாடுதற்கென்று திருமுறைகளில் திருக்கடைக்காப்பு, தேவாரம், திருப்பாட்டு ஆகியன முதல் ஏழு திருமுறைகளில் உண்டு. அவற்றுக்கு பண், இசை, தாளம் அழகூட்டும். ஆனால், பாமரரும் படித்து ஓதி பரகதி அடைவதற்கான எளிய, அக்கால நடைமுறை புழக்கச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டவை திருவாசகம்.
திருவாசகம் ஓதும் இடத்தில் இறைவன், இறைவியுடன் எழுந்தருளியிருப்பார் என்பது ஐதீகம். மனித வாழ்வின் முக்திக்காகவும், உலக நன்மைக்காகவும், சுபிட்சம், சுபவிருத்தி, வியாபாரச் செழிப்பு வேண்டியும் பலர் கோயில்களிலும், வீடுகளிலும், சுபநிகழ்வுகளிலும் முற்றோதல் செய்கின்றனர். திருவாசகம் ஓதும் இடங்களில் நல்லதொரு சூழல், நல்லெண்ணம், நற்சிந்தனை, துக்க நிவர்த்தி உருவாகும். கோயில்களில் நல்ல முறையில் நிறைவுற்று குடமுழுக்குக் காண்பதற்கு இறைவன் அருள் வேண்டியும் முற்றோதல் நடைபெறுகிறது.
சென்னை, சிதம்பரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், கரூர், திருச்சி, திருமலைராயன் பட்டினம், தஞ்சாவூர், திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள திருப்பெருந்துறை, ஓரியூர், திருவேட்டக்குடி, திருத்தலச்சேரி, திருவிடைக்கழி, பொறையாறு, தரங்கம்பாடி உள்ளிட்ட பல ஊர்களில் இதுவரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முற்றோதல்களை நிகழ்த்தியிருக்கிறோம். காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை சுமார் 7 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். மதிய உணவுக்காக அரை மணிநேரம் இடைவெளியை மட்டும் எடுத்துக்கொள்கிறோம். அரசு, தனியார் பணியாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் என 200 பேர் எங்கள் குழுவில் உள்ளனர்.
முற்றோதல் நடைபெறும் ஊருக்கு அருகில் உள்ளவர்கள் ஆங்காங்கே கலந்துகொள்வதால் சுமார் 50 பேர் வரை ஒவ்வொரு முற்றோதல்களிலும் பங்குபெறுவர். இவர்கள் அனைவரும் தன்னார்வலர்களாக இறைநாட்டத்தில் இருப்பதால் இதற்கான கட்டணம், சன்மானம் என இதுவரை எங்கும், முற்றோதல் நடத்துபவர்களிடம் பெற்றதில்லை.
உள்ளூர்வாசிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் எங்கள் குழுவினரோடு இணைந்து முற்றோதலில் கலந்துகொள்வர். முற்றோதல் நிகழ்ச்சியை பெரும்பாலும் வாரவிடுமுறை நாள்களிலும், அரசு விடுமுறை நாட்களிலும் நடத்துகிறோம்.
நெக்கு நெக்கு ஏங்கி, அன்பு எனும் ஆறு கரையது புரள, இதயம் மலர இறைவனை வணங்குவோரின் சிந்தையில் சிறை பெறாத நீர்போல் பாய்ந்து தாயாகிக் காக்கும் கருணை கொண்டவர் சிவன். மன அழுக்கை நீக்கி ஆன்மாவின் அவலத்தைப் போக்கி பசுவாகிய உயிர் பரிபூரண நிலையை எய்தி பதியாகிய இறைவனை அடைவதற்கு உரிய வழியை திருவாசகம் ஏற்படுத்துவது. இதன் மூலம் ஆன்மா லயப்பட்டு இறைவன் அருளால் இறைவனை முயன்று அடைய முயற்சிக்கிறது. உயிர் பிரிந்த உடலால் இவற்றை ஓதவும் முடியாது. உணரவும் முடியாது. சிவசிந்தனைச் சூழலை உருவாக்குவதற்காக சிலர் இவ்விடங்களில் திருவாசகம் படிக்கின்றனர். இருப்பினும், உயிர்ப்புடன் இருக்கும்போதே இறைப்பாடல்களை பாடியும், இறைச் சிந்தனைகளை நினைந்தும் இருப்பதே பலன் தரும்.
திருவாவடுதுறை ஆதீனத்தில் 'சித்தாந்த வித்யாநிதி, 'சித்தாந்தச் செல்வர்', 'சிவத்தமிழ்ச்செல்வர்' உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ளேன். இருப்பினும், சிவத்தொண்டே மனமகிழ்ச்சி' என்கிறார் சௌரிராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!

ஓடிடியில் மனிதன் தெய்வமாகலாம், தி கேரளா ஸ்டோரி - 2!

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

வேந்தன்பட்டி நெய்நந்தீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
