தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மலச்சிக்கல், பசியின்மை குணமாக...

என் அலுவலகப் பணியானது இரவு முழுவதும் கண்விழித்து, பகலில் படுத்துறங்க வேண்டிய பணியாகும்.

News image
Updated On :8 பிப்ரவரி 2026, 4:09 am IST

என் அலுவலகப் பணியானது இரவு முழுவதும் கண்விழித்து, பகலில் படுத்துறங்க வேண்டிய பணியாகும். இயற்கைக்கு மாறான இந்தச் செயலால், எனக்கு மலச்சிக்கல், பசியின்மை, உடல் பருமன் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. இதை எப்படிக் குணப்படுத்துவது?

-சுபாஷினி, பெங்களூரு.

இரவில் கண் விழித்து வேலை செய்பவர்களுக்கு உடலின் உட்புற உறுப்புகளில் வறட்சியானது கூடிவிடும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது (ராத்ரௌ ஜாகரணம் ரூக்ஷம்). இந்த உட்புற வறட்சியானது, வாத தோஷத்தின் குணங்களாகிய வறட்சி - லேசான தன்மை - குளிர்ச்சி- சொரசொரப்பு போன்றவற்றை அதிகப்படுத்துவதால், தங்களுக்கு எதிர்காலத்தில் நரம்பு இயக்க மண்டலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

அதன் ஆரம்ப அறிகுறியாக, வயிற்றில் உள்ள நரம்புகளின் செயல் திறன் குறைபாட்டால், குடல் அசைவுகள் வறட்சியினால் தாமதப்படுவதால், பசித் திரவங்களின் சீரற்ற செயல்பாடு, குடலில் மலங்களின் கீழ்நோக்கிச் செல்லும் அசைவுகளில் மந்தம் போன்றவை ஏற்படுகின்றன.

இதைச் சீராக்க, சின்ன வெங்காயத்தை 8 முதல் 10 என்ற அளவில் எடுத்து, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, காலையில் படுத்துறங்குவதற்கு முன் சாப்பிட்டு, சிறிது சூடான தண்ணீர் அருந்தி, பின் படுத்துறங்கவும். இதனால் மலச்சிக்கல், பசியின்மை போன்ற உபாதைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

பகலில் படுத்துறங்குவதால், குடல் மற்றும் உட்புறக் குழாய்களில், உட்புறச் சுவர்களில் நெய்ப்பின் படிவம் ஏற்படுவதால், கப தோஷத்தின் சில குணங்களாகிய நெய்ப்பு - குளிர்ச்சி - கனம் - மந்தம் - வழுவழுப்பு போன்றவை கூடுவதாலும், இவ்வகைக் குணங்கள் அனைத்தும் கொழுப்புக்குச் சமமானவையாகவும் இருப்பதால், உடல் பருமனுக்குக் காரணமாகின்றன.

பருமனைக் குறைக்க பகலில் உறங்கி எழுந்த பிறகு, உணவை உண்ட பிறகு, சுமார் நூற்று ஐம்பது மில்லி லிட்டர் தண்ணீரில் ஐந்து மில்லி லிட்டர் தூய தேனைக் கரைத்து உட்கொள்ளவும். வேண்டாத உடற்பூச்சிகளை உட்புறக் குழாய்களின் சுவரிலிருந்து கரைத்து வெளியேற்றிவிடும்.

பார்லியையும் நெல்லிமுள்ளியையும் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். சுமார் ஐந்து - பத்து கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் கரைத்து, இஞ்சி பதத்துக்குக் காய்ச்சி, சிறிது இந்துப்பு சேர்த்து, இளம் சூடாகப் பருகினால், பின்னாளில் ஏற்படக்கூடிய கல்லீரல் அடைப்பு, கொழுப்பு போன்ற உபாதைகளைத் தவிர்த்து விடலாம். உடல் நலனைக் கெடுப்பதில் தவறான நேரத்தில் உறங்குவதும், அதிகமாக உறங்குவதும் முதன்மையான செயல்களாகும். ஆனாலும், உத்தியோகம் காரணமாக நீங்கள் இச்செயலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதால், வேறு வழி இல்லாமல் துன்புறுவதை உணரமுடிகிறது.

கடும் கோடையில் இரவு குறைந்து பகல் நீள்வதால், வாத தோஷத்தின் சீற்றம் இயற்கையாகவே ஏற்படுவதால், நீங்கள் பகலில் உறங்குவதால் கெடுதிகள் ஏற்படுவதில்லை. மற்ற பருவ காலங்களில் அப்படி அல்ல. பகல் தூக்கத்தினால் உடல் உபாதைகள் ஏற்படத்தான் செய்யும். அதிகமாகப் பேசுபவர்கள், அதிகப் பயணம் மேற்கொள்வோர், அதிகம் நடப்பவர்கள், மதுபானம் அருந்துபவர்கள், அதிக தாம்பத்யம் கொள்பவர்கள், தலையில் பாரம் சுமப்பவர்கள், அதிக கோபம், வருத்தம், பயம் கொள்பவர்கள் மூச்சுத் திணறல், ஏப்பம், பேதியால் துன்புறுபவர்கள், வயதானவர்கள், குழந்தைகள், வலுவற்றவர்கள், சோர்வுற்றவர்கள், மார்பகத்தில் அடியேற்றவர்கள், தண்ணீர் வேட்கை, கடும் உடல் வலி, அஜீரணம், விபத்தில் அடிபட்டவர்கள், மனம் பேதலித்தவர்கள் மற்றும் பகலில் உறங்குவதை வழக்கமாக்கிக் கொண்டவர்கள் ஆகியோருக்கு பகல் தூக்கத்தினால் கெடுதிகள் ஏதும் ஏற்படுவதில்லை. அதனால் 'தாது சாம்யம்' எனும் திரிதோஷங்களாகிய வாத -பித்த- கப தோஷங்களின் சமநிலை ஏற்படுவதுடன், கபத்தினால் உடல் போஷணையும் பெறுகின்றனர்.

உங்களுக்கு பகல் தூக்கம், இரவு கண் விழிப்பு எனும் செயலால் ஏற்படும் ஒவ்வொரு உடல் உபாதையையும் நன்கறிந்து தக்க சமயத்தில் மருத்துவம் செய்து கொள்வதையும், உணவை சீராக அமைத்துக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டால், எதிர்கால ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். எவ்விதத்திலும் உங்களுக்கு திரிபலைக் குடிநீர் பயன்படும் என்பதால், மருத்துவரின் ஆலோசனைப்படி பருகி, உடல்நலம் பாதுகாத்துக் கொள்ளவும். சாதம் - காய்கறி -மோர் போன்ற எளிய, சீரான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவும். இவை ஜீரண சக்தியை மேம்படுத்தி உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.