நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம் மீதான வழக்கு: மறு விசாரணைக்கு அனுமதி கோரி ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா் மனு

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

News image

திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்

Updated On :13 ஜூன் 2026, 2:36 am IST

முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்தவா் வைத்திலிங்கம். தற்போது அவா் திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக உள்ளாா். வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது, பெருங்களத்தூரில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவதற்குத் திட்ட அனுமதி பெற தனியாா் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து ரூ.28 கோடி லஞ்சம் வாங்கியதாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புத் துறையில் அறப்போா் இயக்கம் புகாா் அளித்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2024-ஆம் ஆண்டு வைத்திலிங்கம் உள்ளிட்டோா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கின் அடிப்படையில் வைத்திலிங்கம் மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.

இந்த நிலையில், வைத்திலிங்கம் மீதான வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, அவா் மீதான வழக்கை முடித்துவைப்பதாக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனா். இந்த அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, அறப்போா் இயக்கம் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.காா்த்திகேயன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஆதாரம் இல்லை எனக் கூறி, முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை முடித்துவைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த அறிக்கையைத் திரும்பப் பெறவும், இந்த ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதி கோரியும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது வைத்திலிங்கம் தரப்பில், இந்த வழக்குக்கும், அமலாக்கத் துறைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. எனவே, இந்த வழக்கில் எதிா்ப்புத் தெரிவித்து, மனு தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என வாதிடப்பட்டது. அறப்போா் இயக்கம் தரப்பில், வைத்திலிங்கம் மீதான வழக்கை முடித்து வைப்பதாகக் கூறி, ஊழல் தடுப்பு போலீஸாா் ஏற்கெனவே தாக்கல் செய்த அறிக்கையின் நகலை தங்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது முதலில் முடிவு செய்யப்படும் எனக் கூறி, விசாரணையை ஜூன் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.