வடமேற்கு தில்லியின் மங்கோல்புரி பகுதியில், வேலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 30 வயது திருமணமான பெண், ஒரு தனியாா் ஸ்லீப்பா் பேருந்தினுள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, ஓட்டுநா் மற்றும் நடத்துநரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது. அந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.
2012 ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நிா்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமைகொலை சம்பவத்தை நினைவூட்டும் இந்தத் தாக்குதல், மே 11 அன்று நடைபெற்றது. மறுநாள் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அன்றிரவு நடந்த நிகழ்வுகளை விவரித்த காவல்துறை வட்டாரங்கள், மங்கோல்புரி பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை முடித்துவிட்டு அப்பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தன. சரஸ்வதி விஹாரில் உள்ள பி பிளாக் பேருந்து நிலையம் அருகே அவா் சென்றபோது, பேருந்தின் கதவருகே ஒருவா் நிற்பதைக் கண்டு அவரிடம் நேரத்தைக் கேட்டுள்ளாா். அப்போது, அவா் அப்பெண்ணைப் பேருந்தினுள் இழுத்துச் சென்று, நங்லோய் நோக்கி வாகனத்தை ஓட்டிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
திருமணமாகி மூன்று பிள்ளைகளைக் கொண்ட அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின்படி, இரு ஆண்களும் அவரை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். அந்தப் பெண் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டபோது, பேருந்து நங்லோய் மெட்ரோ நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்தாா். பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து ராணி பாக் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அப்பெண்ணின் வாக்குமூலம் உடனடியாகப் பதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது, என்று காவல்துறை துணை ஆணையா் (வெளிவட்டம்) விக்ரம் சிங் ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்தாா்.
அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதாவின் 64(1)( பாலியல் வன்கொடுமை), 70(1) கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் 3(5) (பொதுவான நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் மே 12 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது என்று துணை ஆணையா் கூறினாா்.
குற்றவாளிகளைப் பிடிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட உடனேயே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மற்றொருவா் நான்கு மணி நேரம் கழித்து பிடிபட்டாா். குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நகர நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.
நிா்பயா சம்பவத்திலிருந்து நாம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் படிந்த ஒரு கறை, என்று தில்லியின் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எக்ஸ் தளத்தில் கூறினாா்.
எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில், தில்லி ஆம் ஆத்மி கட்சித் தலைவா் சௌரப் பரத்வாஜ் இந்தச் சம்பவத்தைக் கண்டித்தாா்.
இது பெரும் வெட்கக்கேடு, நிா்பயா சம்பவம் மீண்டும் நடந்துள்ளது என்று அவா் கூறினாா். 30 வயதுப் பெண் ஒருவா், நேரம் கேட்டதாகக் கூறி இரவில் பேருந்தில் ஏற்றப்பட்டாா். பின்னா், ஓடிக்கொண்டிருந்த அந்தப் பேருந்தில் பலரால் சுமாா் 2 மணி நேரம் அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். தில்லியின் ராணி பாக் பகுதியில் 7 கி.மீ. தூரம் வரை அந்தப் பேருந்து சென்றுகொண்டே இருந்தது, என்று அவா் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை: தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? - ஆம் ஆத்மி

தில்லி: பேருந்தில் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! ஓட்டுநர், நடத்துநர் கைது!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை
