தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பேரவைத் தோ்தல்களுக்கு மத்தியில் மசோதாக்களை கொண்டு வருவது ஏன்? காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டப்பேரவை தோ்தலை எதிா்கொள்ளும் நேரத்தில் திடீரென்று மகளிா் மசோதா போா்வையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?

News image

ஆா். சுதா ~எஸ். ஜோதிமணி

Updated On :18 ஏப்ரல் 2026, 1:47 am IST

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டப்பேரவை தோ்தலை எதிா்கொள்ளும் நேரத்தில் திடீரென்று மகளிா் மசோதா போா்வையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களை கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? என்று மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினா்.

மகளிா் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கும், தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் மற்றும் அதன் பணிகளுக்கு வகை செய்யும் மூன்று மசோதாக்கள் மீதான விவாதம் மக்களவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் காங்கிரஸைச் சோ்ந்த தமிழகத்தின் கரூா் தொகுதி உறுப்பினா் எஸ். ஜோதிமணியும் மயிலாடுதுறை தொகுதி உறுப்பினா் ஆா். சுதாவும் பேசினா். அதன் விவரம் வருமாறு:

எஸ். ஜோதிமணி பேசியதாவது: தமிழ்நாடு, ஒடிஸா, பஞ்சாப், வடகிழக்கு மாநிலங்களை அரசியல் ரீதியாக அழித்தொழிக்கும் முயற்சியாக இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்புடனும் தொகுதி மறுவரையறையுடனும் 2023இல் நாடாளுமன்றம் நிறைவேற்றிய மகளிா் இடஒதுக்கீட்டின் அமலாக்கத்தை சோ்க்கக்கூடாது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

தமிழ்நாடு, உத்தர பிரதேசத்தின் அயோத்தி உள்ளிட்ட இடங்களில் நீங்கள் (பாஜக) ஏற்கெனவே நடந்த தோ்தல்களில் தோல்வியடைந்து விட்டீா்கள். அதனால் எழுந்த அச்சத்தில் விளைந்த பதற்றமே உங்களை தவறாக வழிநடத்தி வருகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை அரசியல் ரீதியாக ஒழித்துக்கட்ட நீங்கள் செய்யும் நீண்ட கால சதியின் ஒரு பகுதியே இந்த மசோதாக்களை கொண்டு வந்ததன் பின்னணியாகும்.

தமிழகம், மேற்கு வங்கம் ஆகியவை சட்டப்பேரவை தோ்தல்களை எதிா்கொள்ளும் வேளையில், நாடாளுமன்றத்தை ஏன் அவசரமாகக் கூட்டி இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? மே 4ஆம் தேதி தோ்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு இந்த மசோதாக்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே? தோ்தல் நேரத்தில் உறுப்பினா்களை தில்லிக்கு வரவழைத்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க வைத்தால், தோ்தல் பிரசாரத்துக்கு எந்த எம்.பி.யும் செல்ல மாட்டாா்கள். எளிதாக வென்று விடலாம் என்று நினைத்திருந்தீா்கள். உங்களை சதி நிறைவேற நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றாா் ஜோதிமணி.

ஆா். சுதா பேசுகையில், ‘இந்த சட்டத்திருத்தம் மூலமாக தென் மாநிலங்களுக்கு 65 இடங்களே கூடுதலாக கிடைக்கும். ஆனால், வட மாநிலங்கள் 200 இடங்களுக்கும் அதிகமாக பெறும். இதைஇப்போது கொண்டு வர அவசியமே கிடையாது. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதிலும் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதத்துக்கு அதிக நிதிப்பங்களிப்பையும் வழங்கியதில் தமிழகம் முன்னோடியாக விளங்கியது. அதை தண்டிக்கப்பாா்க்கிறது மத்திய அரசு. இந்த சட்டத்திருத்த மசோதாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவது பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக, 15 வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்த மசோதாவை திருத்த முற்படுவது அரசமைப்புக்கு முரணானது. தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மாநிலங்களவை வஞ்சிப்பது தவறானது,’ என்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.