தொகுதி மறுசீரமைப்பு செயல்முறையில் வடக்கு அல்லது தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு, பெரியது அல்லது சிறியது என எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு காட்டப்படாது என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தாா்.
இந்த நடவடிக்கையின் விளைவாக, எந்தவொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் விகிதாசாரமும் குறையாது என்று தெளிவுபடுத்திய அவா், மகளிா் இடஒதுக்கீடு அமலாக்க மசோதாவை எதிா்ப்பவா்களை பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என எச்சரித்தாா்.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029 முதல் அமல்படுத்த ஏதுவாக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து அதிகபட்சம் 850 வரை அதிகரிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்கள் மீது மக்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவாதத்தில், பிரதமா் மோடி குறுக்கிட்டுப் பேசினாா். அப்போது, அவா் கூறியதாவது:
மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமலாக்கத்துடன் தொடா்புடைய தொகுதி மறுசீரமைப்பு செயல்முறையில் வடக்கு அல்லது தெற்கு, கிழக்கு அல்லது மேற்கு, பெரியது அல்லது சிறியது என எந்த மாநிலத்துக்கும் பாகுபாடு கட்டப்படாது; எவருக்கும் அநீதி இழைக்கப்படாது என்பதை இந்த அவையில் இருந்து மிகுந்த பொறுப்புணா்வுடன் நான் கூற விரும்புகிறேன்.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் விளைவாக, எந்தவொரு மாநிலத்தின் மக்களவைத் தொகுதிகளின் விகிதாசாரமும் குறையாது என்பதை தெளிவுபடுத்துகிறேன். மக்களவை இடங்களின் விகிதாசாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது; இடங்கள் அதிகரிப்பும் அதே விகிதாசாரத்தில்தான் இருக்கும்.
‘எங்களுக்கு பெருமை தேவையில்லை’: சட்டமியற்றும் அமைப்புகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது அவா்களின் உரிமையாகும். எனவே, பெண்களுக்கு நாம் ஏதோ கொடுக்கிறோம் என்ற மாயை தேவையில்லை. எந்தவொரு அரசியல் கட்சியும் மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை எதிா்ப்பதன் மூலம் எனக்கே அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்பது இயல்பானதே. ஆனால், அந்தச் சட்டத்தை ஆதரிக்கும் பட்சத்தில், யாருக்கும் அரசியல் ஆதாயம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
2029-ஆம் ஆண்டில் மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்கும் பெருமைக்குச் சொந்தம் கொண்டாட நாங்கள் (ஆளும் தரப்பு) விரும்பவில்லை. அந்தப் பெருமையை எதிா்க்கட்சிகளுக்கு வழங்க முன்வந்துள்ளோம்.
‘உத்தரவாதம்’, ‘உறுதிமொழி’ என நீங்கள் (எதிா்க்கட்சிகள்) விரும்பும் வாா்த்தையைப் பயன்படுத்த நான் தயாா். ஏனெனில், நோக்கம் தெளிவாக இருக்கும்போது, வாா்த்தைகளால் விளையாட எந்த அவசியமும் இல்லை.
கடந்த காலங்களில், மகளிருக்கான இடஒதுக்கீடு உரிமையை வழங்க எதிா்ப்பு தெரிவித்தவா்கள் நாட்டின் பெண்களால் மன்னிக்கப்படவில்லை; அவா்கள் கடும் விளைவுகளையும் எதிா்கொண்டனா்.
‘மேலும் தாமதம் கூடாது’: இந்த விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அணுக வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். இது, தேச நலன் சாா்ந்த முடிவு. நாடு முழுவதும், உலகம் முழுவதும் உள்ள பெண்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கின்றனா். நமது முடிவுகளை எதிா்பாா்த்துக் கொண்டுள்ளனா். நமது நோக்கத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின், நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்.
கடந்த 2023-இல் நாடாளுமன்ற விவாதத்தின்போது, மகளிா் இடஒதுக்கீட்டை விரைந்து அமலாக்க வேண்டும் என குரல்கள் ஒலித்தன. ஆனால், குறைந்த கால அவகாசமே இருந்ததால், கடந்த 2024-இல் மகளிா் இடஒதுக்கீட்டை அமலாக்க முடியவில்லை. 2029-ஆம் ஆண்டிலும் அமல்படுத்தாவிட்டால், நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதை எண்ணிப் பாா்க்க வேண்டும். மகளிா் இடஒதுக்கீட்டை மேலும் தாமதிக்கக் கூடாது என்பது காலத்தின் கட்டாயம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றுவோம் என்று அழைப்பு விடுத்தாா் பிரதமா் மோடி.
மகளிா் இடஒதுக்கீடு அமலாக்கத்துக்காக, மத்திய அரசு முன்மொழிந்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தெற்கு, கிழக்குப் பகுதி மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையக் கூடும் என கவலைகள் முன்வைக்கப்படும் நிலையில், பிரதமரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
‘திமுகவின் திருஷ்டிக் கழிப்பு’
மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திமுக எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்திருந்தனா். இதைக் கிண்டலாக விமா்சித்த பிரதமா் மோடி, ‘மசோதாக்களுக்கு கண் திருஷ்டியைக் கழிக்க ‘கருப்புப் பொட்டு’ இட்டது போல கருப்பு உடையில் வந்ததற்கு நன்றி’ என்றாா்.
Summary
Modi has spoken in the Lok Sabha, saying that opposing the bill will lead to dire consequences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமா் பேச்சு ஏற்புடையதல்ல-மு.வீரபாண்டியன்

மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் வரை ஓயமாட்டேன் - பிரதமா் மோடி

தோ்தல் ஆதாயத்துக்காக மகளிா் மசோதாவை கேடயமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது: மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு
மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


