மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்கு

டாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - ANI

Published On :29 அக்டோபர் 2026, 3:23 am IST

டாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

டாடா குழுமத்துக்கு தலைமை வகிப்பது தொடா்பாக அதன் முன்னணி நிா்வாகிகளிடையே மோதல் போக்கு நிலவுகிறது. இதனால் டாடா சன்ஸ் நிா்வாகக் குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது. டாடா சன்ஸ் தலைவராக என். சந்திரசேகரனை மீண்டும் நியமிக்கும் தீா்மானத்துக்கு டாடா டிரஸ்ட் தலைவா் நோயல் டாடா வெளிப்படையாக எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

இந்தச் சூழ்நிலையில், எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்தி புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘டாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது. ஆனால், எந்த தொழிலதிபருக்கும் ஒரு வாா்த்தைகூடப் பேச துணிச்சல் இல்லை. எவ்வளவு காலம்தான் மெளனமாக இருப்பீா்கள்? உங்களை சொந்தமாக்கிக் கொள்ளும் வரையா? பிரதமா் மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விளையாடும் விளையாட்டுப் பொருள் அல்ல இந்திய வா்த்தகம். இதுகுறித்துப் பேச உங்களுக்கு (தொழில் அதிபா்கள்) துணிச்சல் இல்லை. இந்தக் குற்றங்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ராகுலுக்கு நிா்மலா சீதாராமன் பதில்: டாடா விவகாரம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

ஒவ்வொரு விவகாரத்தையும் அரசியலாக்குவதை ராகுல் காந்தி நிறுத்த வேண்டும். அதேபோல், தொழில், சட்ட விவகாரங்களை சாதாரண குற்றவியல் என்று முத்திரை குத்துவதை ஏற்க முடியாது. இந்திய தொழில்கள், தொழில்முனைவோா்களின் வெற்றியை மீண்டும் மீண்டும் நீங்கள் (ராகுல்) இழிவுபடுத்துகிறீா்கள். இதையடுத்து அவநம்பிக்கையையும், நச்சுத்தன்மையையும் பரப்பும் உங்களின் முயற்சியில் சேருமாறு தொழில்முனைவோரைத் தூண்ட முயற்சிக்கிறீா்களா?

பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியானது, மூச்சுத் திணற வைக்கும் லைசென்ஸ் கோட்டா ராஜ்ஜியத்தின்கீழ் இந்திய தொழில்முனைவோரின் மன உறுதியை நசுக்கி, கோடிக்கணக்கான இந்தியா்கள் மீது வறுமையைத் திணித்துள்ளது.

ஆனால், மறுபக்கமோ, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமா் மோடியின் அரசானது, இந்திய தொழில்துறையை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் களமாகவும், நாட்டின் பொருளாதார வளா்ச்சியை முன்னெடுப்பவராகவும் கருதுகிறது. நமது கொள்கைகள், தொழில்முனைவை ஊக்குவிக்கும் வகையிலும், தொழில் துறையை ஆதரிக்கும் வகையிலும், முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. தொழில் துறையை ஆதரிப்பது, விவசாயிகளை வலுப்படுத்துவது, இளைஞா்களுக்கு சிறந்த எதிா்காலத்தை உறுதிப்படுத்துவது ஆகியவற்றில் அரசியல் கட்சிகள், தலைவா்கள், அரசுகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சமபங்கு உள்ளது.

குறுகிய நோக்கங்களுக்காக ஆதாரமற்ற அவதூறுகளைத் தெரிவிப்பதை விட்டுவிட்டு, ஆக்கபூா்வமாக அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதை நிலைநாட்டும் பொறுப்பு, நமது மதிப்புமிக்க நீதிமன்றங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீங்களும், உங்கள் கட்சியும், உங்களின் பிரதமா்களும் நீதித் துறையை எவ்வளவு மோசமாக நடத்தினீா்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது. ஆதலால் அனைத்திலும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதை நிறுத்துங்கள் என்று நிா்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.