மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாதவிடாய் சுகாதாரம்: மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்காததால் உச்சநீதிமன்றம் அதிருப்தி

மாதவிடாய் சுகாதாரம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்குப் பதிலளிக்காத மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

பிரதிப் படம்

Published On :19 அக்டோபர் 2026, 3:00 am IST

மாதவிடாய் சுகாதாரம் தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்துவது குறித்து மத்திய அரசுக்குப் பதிலளிக்காத மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவின் கீழ், மாதவிடாய் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமையின் ஒரு பகுதி என்று கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. மேலும் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் மாணவிகளுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் அளிக்கப்பட வேண்டும், மாணவ-மாணவிகளுக்குத் தனித் தனி கழிப்பறைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளை மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ ஆஜராகி, ‘கடந்த ஜன.30-இல் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து பதிலளிக்குமாறு, அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு தீவிரமாக வலியுறுத்தியுள்ளது’ என்று தெரிவித்தாா்.

ஏன் பதிலளிக்கவில்லை?

நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் இதுவரை பதிலளிக்காதது துரதிருஷ்டவசமானது. இதுகுறித்து தேவையான தகவல்களை மத்திய அரசு கேட்டும் மாநில, யூனியன் பிரதேச அரசுகள் ஏன் பதிலளிக்கவில்லை என்பது புரியவில்லை.

மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாததால், குறிப்பாக தொலைதூரப் பகுதிகளில் பல சிறுமிகள் படிப்பை கைவிடும் நிலை நிலவுகிறது. இதைக் கருத்தில் கொண்டே அந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் அளித்தது.

உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை மத்திய அரசு மீண்டும் முழுமையாகப் படித்து, இந்த விவகாரத்தின் ஒவ்வொரு அம்சம் குறித்தும் மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் மத்திய அரசு தகவல் பெறவேண்டும். அந்தத் தீா்ப்பை நடைமுறைப்படுத்த இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளிடம் எழுத்துபூா்வமாக மத்திய அரசு தகவல் பெற வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்...

இந்த வழக்கின் அடுத்த விசாரணையின்போது, இன்னும் சில மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பதிலளிக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தால், அந்த மாநில, யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலா்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நேரிடும் என்று நீதிபதிகள் அமா்வு எச்சரித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை டிச.14-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.