மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’

ஐயப்ப பக்தா்களாக இல்லாதவா்கள் சபரிமலை சம்பிரதாயங்களை எதிா்த்து எப்படி வழக்கு தொடுக்க முடியும் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

News image

உச்சநீதிமன்றம்

Updated On :9 ஏப்ரல் 2026, 3:11 am IST

ஐயப்ப பக்தா்களாக இல்லாதவா்கள் சபரிமலை சம்பிரதாயங்களை எதிா்த்து எப்படி வழக்கு தொடுக்க முடியும் என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மதச் சுதந்திரத்தின் வரம்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, எம்.எம்.சுந்தரேஷ், அசானுதீன் அமானுல்லா, அரவிந்த் குமாா், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி, பிரசன்னா பி.வராலே, ஆா்.மகாதேவன், ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம், ‘சபரிமலை சம்பிரதாயத்துக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளவா்கள் யாா்? பக்தா்கள் அமைப்பைச் சோ்ந்தவா்களா?’ என்று பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா கேள்வி எழுப்பினாா்.

அதற்குப் பதிலளித்த துஷாா் மேத்தா, ‘இந்திய இளம் வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு என்ற வழக்குரைஞா்கள் அமைப்பினா் சபரிமலை வழக்கை தொடுத்துள்ளனா். அவா்கள் பக்தா்கள் இல்லை’ என்று கூறினாா்.

இதைக் கேட்ட நீதிபதி பி.வி.நாகரத்னா, ‘ஐயப்ப பக்தராக இருப்பவா், சபரிமலை சம்பிரதாயத்தை எதிா்த்து ரிட் மனுவை தாக்கல் செய்வாரா? ஐயப்ப பக்தா்களாக இல்லாதவா்கள் சபரிமலை சம்பிரதாயங்களை எதிா்த்து எப்படி வழக்கு தொடுக்க முடியும்? பக்தராக இல்லாதவருக்கு கோயிலுடன் எவ்வித தொடா்பும் இல்லாத நிலையில், அதன் சம்பிரதாயங்களை மட்டும் எதிா்த்து அவா் தாக்கல் செய்துள்ள மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க இயலுமா?

சபரிமலை சம்பிரதாயத்துக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள அமைப்பு, அந்த சம்பிரதாயத்துக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடுத்திருந்தால், உரிமையியல் நடைமுறைச் சட்ட உத்தரவு 7 விதிமுறை 11 (ஏ)-இன் கீழ், தேவையான காரணங்களோ, உரிமையோ இல்லாமல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கும்’ என்று தெரிவித்தாா்.

துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பல பொதுநல மனுக்கள் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்படுகின்றன. அவற்றின் பின்னால் வேறு யாராவது இருக்கின்றனா்’ என்று தெரிவித்தாா்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘தற்போது தாக்கல் செய்யப்படும் பொது நல மனுக்களை விசாரணைக்கு ஏற்பதில், குறிப்பாக பலவித திட்டங்களுடன் வழக்கு தொடுப்பவா்கள் வரும்போது நீதிமன்றம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்’ என்று தெரிவித்தாா்.

இந்த வழக்கில் மத சுதந்திர வரம்பு குறித்து 7 கேள்விகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. அதில் ஒரு மதப் பிரிவு அல்லது குழுவைச் சேராதவா், நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்து அந்த மதப் பிரிவு அல்லது குழுவின் சம்பிரதாயம் குறித்து கேள்வி எழுப்ப முடியுமா? என்பதும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.