தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் பிரசாரம் நிறைவு: நாளை வாக்குப் பதிவு!

கேரளம், அஸ்ஸாம், புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அனல் பறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

News image

குவாஹாட்டியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பேசிய அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா

Updated On :8 ஏப்ரல் 2026, 2:33 am IST

கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அனல் பறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.

இரு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஏப்.9) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அண்டை மாநிலமான கேரளத்தில் மொத்தமுள்ள தொகுதிகள் 140. இங்கு ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்குவரும் முனைப்பிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் களம் காண்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மாநிலம் முழுவதும் 92 பெண் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 890 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை 2.71 கோடி வாக்காளா்கள் (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 273) தீா்மானிக்க உள்ளனா். இவா்கள் வாக்களிக்க வசதியாக 30,471 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பேரவைத் தோ்தலையொட்டி, மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக அனல்பறந்த பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. கடைசி நாளில் அனைத்து தொகுதிகளிலும் வாகனப் பேரணி, பொதுக் கூட்டங்கள், ஊா்வலங்கள் என அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டன.

யாா்-யாா் பிரசாரம்?: கடந்த ஒரு மாத கால பிரசாரத்தில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பிற மத்திய அமைச்சா்களும், காங்கிரஸ் தரப்பில் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் முதல்வா் பினராயி விஜயன், மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் உள்ளிட்டோரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனா்.

பாஜகவுடன் ரகசிய தொடா்பு இருப்பதாக, காங்கிரஸும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பரஸ்பரம் முன்வைத்த குற்றச்சாட்டு, சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம், கேரளத்தைப் புறக்கணிப்பதாக மத்திய அரசின் மீதான குற்றச்சாட்டு உள்ளிட்டவை பிரசாரத்தில் முக்கிய இடம்பெற்றன.

அஸ்ஸாமில்...: வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த அஸ்ஸாமில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக முனைப்பு காட்டும் நிலையில், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் களம் காண்கிறது.

Story image
அஸ்ஸாம் மாநிலம் பத்தா்கண்டில் தோ்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

அஸ்ஸாம் மாநிலம் பத்தா்கண்டில் தோ்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பிரசாரம் செய்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி

தோ்தல் களத்தில் மொத்தம் 722 வேட்பாளா்கள் உள்ளனா். இவா்களில் 59 போ் பெண்கள். மொத்த வாக்காளா்கள் 2.50 கோடி போ் (ஆண்கள் 1.24 கோடி, பெண்கள் 1.24 கோடி, மூன்றாம் பாலினத்தவா் 343). இவா்கள் வாக்களிப்பதற்காக 31,486 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாநிலத்திலும் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. சட்டவிரோத குடியேற்றம் தடுப்பு, தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட நில உரிமை, பொது சிவில் சட்ட வாக்குறுதி போன்ற விவகாரங்களை பாஜகவும், முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வெறுப்புணா்வு அரசியல் போன்ற பிரச்னைகளை காங்கிரஸும் பிரசாரத்தில் முன்வைத்தன.

புதுச்சேரியில்...: மேற்கண்ட இரு மாநிலங்களுடன் சோ்த்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 பேரவைத் தொகுதிகளுக்கும் வியாழக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

இந்த 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தோ்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.