அண்மைக்காலமாக அரசுப் பணிக்கான போட்டித் தேர்வெழுதும் ஆர்வம் பட்டப்படிப்பு பயின்றவர்களிடையே அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் இந்த வகையான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள அதிகமானோர் வரலாறு உள்ளிட்ட சில பாடங்களைத் தேர்வு செய்தனர்.
காலப்போக்கில் போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் அமைப்பில் மாற்றம் கொண்டுவரப்பட்டதால் தேர்வெழுதத் தகுதியாகக் கருதப்படும் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு பயின்றால் போதுமானது என்ற எண்ணத்துக்கு மாறத் தொடங்கினர்.
ஒருதரப்பினர் குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகள் மட்டுமே சிறந்தது என்றும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்லது என்றும் கருதுகின்றனர். இதனால், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அத்தகைய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை குறிப்பாக மாணவிகளின் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதற்கு மாணவ, மாணவிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்பது ஒருபுறமிருந்தாலும், அருகிலுள்ள கல்லூரியில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்தால் போதும் என்ற எண்ணம் மற்றொருபுறம் இருந்து வருகிறது.
இன்றளவும் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் குறிப்பிட்ட சில பாடங்கள் குறித்து மட்டுமே அறிந்தவர்களாக இன்றைய மாணவர்கள் உள்ளனர்.
இதனால், வழக்கமான பாடப் பிரிவுகளைத் தவிர சில பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளன.
குடிமைப் பணித் தேர்வில் இந்திய அளவில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெறும் பட்டதாரிகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டோர் மானுடவியல், உளவியல், சமூகவியல், அரசியல் அறிவியல் போன்ற பாடங்களை விருப்பப் பாடமாக தேர்வு செய்வதன்மூலம் இதை அறிந்து கொள்ளலாம்.
இந்த பாடப் பிரிவுகள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற உதவுவது மட்டுமின்றி சமூகம், மாணவர்கள் எனப் பல்வேறு தரப்பினருக்கும் பலனளிப்பதாக இருக்கும். ஆனால், மாணவ, மாணவிகளிடையே இந்த வகையான பாடப் பிரிவுகள் குறித்த விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இந்த வகையான பாடப் பிரிவுகள் பெருநகரங்களில் உள்ள கல்லூரிகளில் மட்டுமே பயிற்றுவிக்கப்படுகின்றன.
இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் (ஐஐடி) பயின்ற பொறியியல் பட்டதாரிகள் பெரும்பாலும் இவற்றுள் ஏதேனும் ஒரு பாடத்தையே விருப்பப் பாடமாக தேர்வு செய்கின்றனர். இவற்றுள் மானுடவியல் என்பது பெரும்பாலானோரால் தேர்வு செய்யப்படும் பாடப்பிரிவாக உள்ளது.
அதுபோன்று இன்றைய சூழலில் உளவியல் பாடப் பிரிவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவாகும். உலக அளவில் மனநலன் தொடர்பான பிரச்னைகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 120 கோடி எனவும், இது கடந்த 1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு மடங்காகும் எனவும் மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1990-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதற்றம் 158 சதவீதமும், மன அழுத்தம் 131 சதவீதமும் அதிகரித்துள்ளதாகவும், 15 வயது முதல் 19 வயதுள்ள இளைஞர்கள்தான் மனநலன் பாதிப்பு போன்ற பிரச்னைகளில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக, இளைய தலைமுறையினர் குறிப்பாக மாணவர்கள் தொடர்பான பிரச்னைகள், சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு உளவியல் சார்ந்த கல்விதான் தீர்வாக அமையும் எனவும், பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் உளவியலை சேர்க்க வேண்டும் எனவும் பலதரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். அதன்பொருட்டு பள்ளி, கல்லூரிகளில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
2020 முதல் 2030 வரையான காலத்தில் உளவியல் வல்லுநர்களின் தேவை 14 சதவீதம் அதிகரிக்கும் என்று தொழிலாளர் புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது. நம் நாட்டு மக்கள்தொகையின் அடிப்படையில் வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான உளவியல் வல்லுநர்கள் தேவைப்படுவர் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெருநகரங்கள் மற்றும் அதிகப்படியானோர் தேர்வு செய்யும் கல்லூரிகளில் உளவியல் பாடப்பிரிவைத் தொடங்குவதுடன், இதுதொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்பு முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் வரையில் போட்டியிடுவதற்கான தகுதிகளாகக் கருதப்படும் வயது வரம்பு முதல் வைப்புத் தொகை வரை அறிந்திருக்க வேண்டும். மேலும் இவர்களது கடமைகள், அதிகாரம், தேர்வு செய்யப்படும் முறை, பதவிக்காலம் போன்றவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகையில் அரசியல் அறிவியல் பாடப் பிரிவு வழிகாட்டியாக அமையக்கூடும்.
மனித நடத்தை மற்றும் உறவுகள் குறித்த அறிவியல்பூர்வமான ஆய்வைக் குறிக்கும் சமூகவியல் உளவியலுடன் ஒப்பிடப்படுகிறது. இந்த சமூகம் எவ்வாறு இயங்குகிறது? என்பதை ஆராய்வதன் மூலம் பிரச்னைகளை எவ்வாறு சரிசெய்வது?, சமூக மாற்றத்தை எவ்வாறு ஊக்குவிப்பது? என்பது குறித்த ஆழமான புரிதலை நாம் பெற முடியும். புதிய கொள்கைகளை உருவாக்கும்போதும், சட்டங்கள் இயற்றும் போதும் சமூகவியலாளர்களின் தேவை அவசியமாகிறது.
எனவே, மேல்நிலைக் கல்வி பயிலும்போது இந்தப் பாடப் பிரிவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பழைய மற்றும் புதிய கல்லூரிகளில் இதுபோன்ற பாடப் பிரிவுகளைத் தொடங்குவது சிறந்ததாக அமையக்கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரிகளில் சேர மாணவா்கள் ஆா்வம்: வணிகவியல், கணினி அறிவியல் பாடங்களுக்கு கடும் போட்டி

அரசு கலை, அறிவியல் கல்லூரி படிப்புகளில் கலைப் பிரிவில் ஆா்வம் செலுத்தும் மாணவா்கள்!

சென்னை ஐஐடி-யில் தொழில் துறை திறன்களை வளா்க்கும் படிப்புகள் அறிமுகம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

