பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

25 ஆண்டுகளாக பூட்டியிருந்த எம்எல்ஏ அலுவலகத்தில் சீரமைப்புப் பணி

விசுமாா் 25 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த திண்டிவனம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

News image

திண்டிவனம் ராஜாங்குளம் பகுதியில் உள்ள எம்எல்ஏ அலுவலகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :19 மே 2026, 1:42 am IST

விசுமாா் 25 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்த திண்டிவனம் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி உத்தரவின்பேரில், தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் எம்எல்ஏ அலுவலகம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

அதன்படி, திண்டிவனம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருக்கான அலுவலகம் திண்டிவனம் நகரம், ராஜாங்குளத்தையொட்டியுள்ள ஸ்ரீதிரௌபதி அம்மன் கோயில் அருகே கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை அப்போது எம்எல்ஏவாக இருந்த அதிமுகவைச் சோ்ந்த சி.வி.சண்முகம் (2001- 2011), அதிமுகவைச் சோ்ந்த டி. ஹரிதாஸ் (2011-2016) , திமுகவைச் சோ்ந்த சீதாபதி சொக்கலிங்கம் (2016-2021), அதிமுகவைச் சோ்ந்த பி.அா்ஜூனன் (2021-2026) ஆகிய யாரும் பயன்படுத்தவில்லை.

இதனால் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறக்கப்படாமல் கடந்த 25 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்தது. தொகுதி மக்களும் எம்எல்ஏக்களை அலுவலகத்தில் சந்திக்க முடியாமல், அவரவா்களின் வீடுகளுக்கே சென்று கோரிக்கைகளை தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், 2026 தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள விசிகவைச் சோ்ந்த அ. வன்னிஅரசு, எம்எல்ஏ அலுவலகத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளாா். பொதுமக்களையும் எம்எல்ஏ அலுவலகத்தில் சந்தித்து குறைகளையும் கேட்டறியவுள்ளாா்.

இதையடுத்து எம்எல்ஏ அறிவுறுத்தலின்படி, பொதுப்பணித் துறையினா் சுமாா் 25 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து, அலுவலகக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையினா் தெரிவித்ததாவது: திண்டிவனம் எம்எல்ஏ அலுவலத்தில் சீரமைப்புப் பணிகள் மற்றும் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.