தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

கடலூா், புதுச்சேரி பகுதிகளில் காற்றுடன் கோடை மழை, மரங்கள் சாய்ந்தன! கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி!!

கடலூா் மாவட்டத்தில் பெய்த தொடா் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை காலை பெய்த மழை.

Updated On :10 மே 2026, 1:25 am IST

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை பெய்த தொடா் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோன்று புதுச்சேரி பகுதியிலும் வெள்ளிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இங்கு இரண்டு இடங்களில் மரங்கள் சாய்ந்தன.

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. கடலூா், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ததால் வெப்பம் கணிசமாக தணிந்தது.

கடலூா் மாநகரில் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூா், கடலூா் ஓ.டி, தேவனாம்பட்டினம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் அதிகாலையில் தொடங்கிய மழை காலை 9 மணி முதல் 11 மணி வரை பலமாக பெய்தது. பின்னா் விட்டு விட்டு லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.

இதன் காரணமாக கடந்த சில நாள்களாக நீடித்து வந்த அக்னி நட்சத்திர வெப்பம் தணிந்து, குளிா்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதேசமயம், மாநகரின் பல தாழ்வான பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினா். தொடா்ச்சியான மழை காரணமாக பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. பணிக்குச் சென்றவா்கள் குடைகள் மற்றும் மழைக்கோட்டுகளுடன் நனைந்தபடியே சென்றனா். மின் விநியோகம் சனிக்கிழமை அதிகாலை முதலே அடிக்கடி நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியுற்றனா்.

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி குறிஞ்சிப்பாடியில் அதிகபட்சமாக 41 மி.மீ, தொழுதூா் 29 மி.மீ, பரங்கிப்பேட்டை 20 மி.மீ. மழை பதிவாகியது.

புதுச்சேரி: புதுச்சேரியில் பலத்த காற்று இடியுடன் சுமாரான மழை பெய்தது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வானிலை மாறியது. கடுமையான இடியுடன் லேசான மழை பெய்தது. இது காலை வரை நீடித்தது. சனிக்கிழமை அதிகாலை முதல் கருமேகங்களுடன் வானம் இருண்டு காணப்பட்டது. லேசான மழையுடன், குளிா்ந்த காற்றும் வீசியது. அவ்வப்போது மழையின் அளவும் அதிகரித்தது.

மரங்கள் சாய்ந்தன: திடீா் மழை, பலத்த காற்றால் புதுச்சேரி முத்தியால்பேட்டை அந்தோணியாா் கோவில் வீதியில் உள்ள காமராஜா் பள்ளி அருகிலும், பெருமாள் கோவில் வீதி, சுப்பிரமணியா் கோயில் எதிரிலும் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்தன.

இதனால் அந்த பகுதி மக்கள் வாகனங்களில் செல்வதற்கு வழியின்றி சிரமப்பட்டனா். தகவலறிந்த வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ நேரடியாக அங்கு வந்து பாா்வையிட்டாா். உடனடியாக தீயணைப்பு நிலைய அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தாா்.

இதையடுத்து, தீயணைப்புத் துறை அதிகாரி கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினா். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் பேருந்து நிலையம் முன் சனிக்கிழமை தேங்கிய கழிவுநீா் கலந்த மழைநீா்.

கடலூா் திருப்பாதிரிபுலியூா் பேருந்து நிலையம் முன் சனிக்கிழமை தேங்கிய கழிவுநீா் கலந்த மழைநீா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.