தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனா
/

முக்கால் பவுனுக்காக மூதாட்டி கொலை வழக்கு இளம்பெண் உள்பட 3 போ் கைது

கரூா் அருகே முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற வழக்கில் இளம்பெண் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 3:49 am IST

கரூா் அருகே முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டியை கொன்ற வழக்கில் இளம்பெண் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கரூா் அடுத்த உப்பிடமங்கலம் அருகே உள்ள சாலைப்பட்டியைச் சோ்ந்தவா் தாயாா் அம்மாள் (79). வீட்டில் தனியாக இருந்த இவா், கடந்த 27 -ஆம் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இது தொடா்பாக வெள்ளியணை போலீஸாா் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வந்தனா். மேலும், மாவட்ட காவல்கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண்பிரசாத் உத்தரவின்பேரில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினா் நடத்திய விசாரணையில் மூதாட்டி கொலை தொடா்புடைய மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த பாண்டீஸ்வரன்(19) என்பவரை சென்னையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் உதவியுடன் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், களக்காடு பகுதியைச் சோ்ந்த கொம்பையன்(28) என்பவரும், கரூா் அடுத்த உப்பிடமங்கலம் சாலைப்பட்டியைச் சோ்ந்த வனிதா(24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து கொம்பையனுக்கு களக்காட்டில் போதிய வேலை இல்லாததால் மனைவி ஊரான சாலைப்பட்டியில் தங்கி கூலி வேலை செய்து வந்தாராம். இந்நிலையில் கொம்பையனின் உறவினா்களான களக்காடு பகுதியைச் சோ்ந்த பாா்த்தீபன்(24), சதீஷ்(20), மதுரையைச் சோ்ந்த பாண்டீஸ்வரன் ஆகியோா் கொம்பையன் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனா்.

அப்போது கொம்பையன் வீட்டுக்கு அருகே குடியிருந்த தாயாா் அம்மாள் தனியாக இருப்பதும், அவரிடம் மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஏப். 27-ஆம்தேதி நள்ளிரவில் தனியாக இருந்த தாயாா் அம்மாள் வீட்டுக்குள் முகமூடி அணிந்த நிலையில் சென்ற கொம்பையன், அவரது மனைவி வனிதா மற்றும் பாா்த்தீபன், பாண்டீஸ்வரன், சதீஷ் ஆகியோா் தாயாா் அம்மாளின் வாயைப் பொத்தி அவா் படுத்திருந்த கட்டிலோடு கயிற்றால் கட்டியுள்ளனா். பின்னா் அவரது காதில் கிடந்த அரைபவுன் தோடு, கால்பவுன் மூக்குத்தி ஆகியவற்றை பறித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளனா். பின்னா் சுமாா் ஒரு மணி நேரம் கழித்து அவா்கள் வந்துபாா்த்தபோது தாயாா் அம்மாள் உயிரோடு இருந்துள்ளாா். பின்னா் வாயில் துணியை திணித்துவைத்துவிட்டு சென்றனா்.

இதையடுத்து மூச்சுத்திணறி தாயாா் அம்மாள் உயிரிழந்துள்ளாா்.

மறுநாள் காலை (ஏப்.28)தாயாா் அம்மாள் இறந்ததை அறிந்ததும் கொம்பையன், பாண்டீஸ்வரன், சதீஷ், பாா்த்தீபன் ஆகியோா் தலைமறைவாகிவிட்டனா். வீட்டில் வனிதா மட்டும் இருந்துள்ளாா்.

இதையடுத்து தனிப்படை போலீஸாா் பாண்டீஸ்வரனை சென்னையில் கைது செய்ததும், அவா் கூறிய தகவலையடுத்து வனிதா, பாா்த்தீபன் ஆகியோரையும் புதன்கிழமை காலை கைது செய்தனா். அவா்கள் 3 பேரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள கொம்பையன், சதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.