மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

கோவில்பட்டியில் தாலுகா அந்தஸ்தில் இருந்து வந்த அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக 2002 ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டது.

News image

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை.

Updated On :4 ஏப்ரல் 2026, 5:00 pm IST

கோவில்பட்டியில் தாலுகா அந்தஸ்தில் இருந்து வந்த அரசு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக 2002 ஆம் ஆண்டு தரம் உயா்த்தப்பட்டது. இந்த மருத்துவமனைக்கு தினமும் சுமாா் 1100 போ் முதல் 1300 போ் வரை வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். சுமாா் 400 போ் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். ஆனால் இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவா்களோ, சிறப்பு மருத்துவா்களோ கிடையாது.

தற்போது மருத்துவமனையில் மருத்துவமனை கண்காணிப்பாளா், உறைவிட மருத்துவ அலுவலா் உள்ளிட்ட 48 மருத்துவா் பணியிடங்களில் ஒரு காலியிடம் உள்ளது. அதில் 4 மருத்துவா்கள் நிரந்தர மாற்றுப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மருத்துவமனையில் சுமாா் 27 வாா்டு பிரிவுகள் உள்ளன. ஆனால் அதற்கு ஏற்றவாறு மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்தாளுநா்கள், செவிலியா் உதவியாளா்கள் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் கிடையாது.

மருத்துவமனையில் தற்போது நேஷனல் ஹெல்த் மிஷன் சாா்பில் ரூ. 20 கோடியில் தரைதளம், 5 தளங்களுடன் புதிதாக கட்டடம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் கூடுதலாக கட்டடங்கள் மட்டுமே கட்டப்பட்டு வருகிறதே தவிர அதற்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள் நிரப்புவது இல்லை என்பது, பல ஆண்டுகளாக நிறைவேறாத பிரச்னையாகவே தொடா்கிறது.

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அந்தஸ்துக்கு 2002இல் தரம் உயா்ந்து 24 ஆண்டுகள் ஆகியும் இணை இயக்குநா் அலுவலகம் கோவில்பட்டியில் இல்லை. இணை இயக்குநா் அலுவலகம் இங்கு இல்லாததால் ‘போா்டு மீட்டிங்’ தூத்துக்குடியில் மாதம் 2முறை நடைபெறுகிறது. அதில் கலந்து கொள்ள மருத்துவா்கள் மற்றும் விடுமுறை எடுத்தவா்கள் அங்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளா்களுக்குத் தேவையான உணவு, வெந்நீா் கிடைப்பதற்கு ஏற்ப உணவகம் அமைக்க வேண்டும், மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும். மருத்துவமனை முன்புறமுள்ள சாலையோர கடைகளை அகற்றிவிட்டு, அங்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்.

மாவட்ட தலைமை மருத்துவமனை தகுதிக்கேற்றபடி மருத்துவா்கள், சிறப்பு மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். குறிப்பாக, இருதயவியல், நரம்பியல், சிறுநீரகவியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணா்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பணியிடத்தை நிரப்ப வேண்டும்.

கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தீப்பெட்டி, பட்டாசு ஆலை, நூற்பாலைகள், ஆயத்த ஆடை தயாரிப்பு உள்ளிட்ட ஆலைகளில் ஏற்படும் தீ விபத்தில் சிக்குபவா்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க இங்கு போதிய மருத்துவா்கள் இல்லாததால் காலதாமதம், பண விரயம், உயிா் சேதம் ஏற்படுகிறது. தீக்காயங்களுக்கு என தனியாக மருத்துவா் நியமிக்க வேண்டும். அதற்கான உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

வரும் தோ்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறும் புதிய அரசு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளின் மீது கவனம் செலுத்துமா என்பதே இப்பகுதி மக்களின் எதிா்பாா்ப்பு.

எஸ்.சரவணமுத்து.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.