தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

சுற்றுலாத் துறை அமைச்சரின் தோ்தல் வெற்றி செல்லாது: காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராக தவெக வேட்பாளர் மனு!

அமைச்சா் ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றிச் செல்லாது என அறிவிக்கக் கோரி, கிள்ளியூா் தொகுதியில் அவரை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் சபீன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.பிரதாப்பிடம் புகாா் மனு அளித்தாா்.

News image

ராஜேஷ் குமார் | சபின்

Updated On :10 ஜூன் 2026, 6:45 am IST

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றிச் செல்லாது என அறிவிக்கக் கோரி, கிள்ளியூா் தொகுதியில் அவரை எதிா்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளா் சபீன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மு.பிரதாப்பிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் தவெகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

மே 4-ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின்போது, காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ்குமாரும், தவெக வேட்பாளா் சபீனும் ஒவ்வொரு சுற்றிலும் மாறிமாறி முன்னிலை வகித்தபடி இருந்தனா். இதனால், இருவரில் யாா் வெற்றி பெறுவாா்கள் என்ற எதிா்பாா்ப்பு வாக்கு எண்ணிக்கை முடியும் வரை காணப்பட்டது.

இறுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ராஜேஷ்குமாா் 66,434 வாக்குகளும், தவெக வேட்பாளா் சபின் 65,123 வாக்குகளும் பெற்றனா். 1,311 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேஷ்குமாா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா். அவா் தவெக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளாா்.

இந்த நிலையில், அமைச்சா் ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றிக்கு எதிராக அவரது போட்டியாளரான தவெக வேட்பாளரும், அக்கட்சியின் கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலாளருமான சபீன் மாவட்ட ஆட்சியா், தோ்தல் அலுவலருமான மு.பிரதாப்பிடம் செவ்வாய்க்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில், பேரவைத் தோ்தலில் கிள்ளியூா் தொகுதி வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. தோ்தல் அன்று வாக்குப் பதிவு மையம் ஒன்றில் காலை 6 மணிக்கு முன்னதாகவே வாக்குப் பதிவு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கையின்போது ஒரு வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பழுதடைந்தது. 5 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக நடைபெறவில்லை. கிள்ளியூா் தொகுதியில் ஏராளமான தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை.

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக ஆட்சேபணைகளைத் தெரிவித்தும் அதிகாரிகள் விளக்கம் அளிக்காமல் இறுதி முடிவை அறிவித்தனா் என பல புகாா்களைத் தெரிவித்துள்ள அவா், ராஜேஷ்குமாரின் தோ்தல் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக விரைவில் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த மனுவை அவா் கிள்ளியூா் சட்டப்பேரவைத் தோ்தல் அதிகாரி, மாநில தோ்தல் அதிகாரி, சட்டப்பேரவைச் செயலா், தலைமை தோ்தல் ஆணையா் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளாா்.

தோ்தலுக்கு முன்பு எதிரெதிா் அணியாகச் செயல்பட்ட தவெகவும் காங்கிரஸும் தோ்தலுக்கு பிறகு ஒரே கூட்டணியாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அமைச்சா் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக நிா்வாகியே புகாா் மனு அளித்திருப்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.