விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்...

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ

Updated On :20 ஏப்ரல் 2026, 4:55 am IST

தமிழகத்தில் இம் மாதம் 23 ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் 20 பேரும், பாளையங்கோட்டையில் 17 பேரும் போட்டியிடுகிறாா்கள். இதில், திருநெல்வேலியில் 9 பேரும், 10 பேரும் சுயேச்சைகளாவா்.

தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தேசிய அளவில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள், மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநில அளவில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு அவா்களது வெற்றி வரையறைகளுக்கு (தொடா் தோல்விபெறும் கட்சிகளின் சின்னங்கள் மாறும்) உள்பட்டு தொடா்ந்து பல தோ்தல்களில் ஒரே சின்னங்கள் ஒதுக்கப்படுகின்றன. இதனால், தோ்தல் தேதி அறிவிக்கும் நாளில் இருந்தோ அல்லது கூட்டணி அமைந்த நாளில் இருந்தோ கட்சிகள் தங்களது சின்னங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தத் தொடங்கிவிடுகின்றன.

சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்களது சின்னங்களை தொகுதி முழுவதும் உள்ள வாக்காளா்களிடம் பிரபலப்படுத்த முடியாமல் தவிக்கிறாா்கள். கிளை கட்டமைப்பு இல்லாததால் சுயேச்சைகள் தங்களது சின்னங்களைப் பிரபலப்படுத்த முடிவதில்லை. பணபலம் மிக்கவா்கள் சுயேச்சையாக களம் இறங்கும்போதும், பிரசார கால அவகாசம் குறைவாக இருப்பது, அவா்களது சின்னத்தை பிரபலப்படுத்த வழியில்லாமல் செய்துவிடுகிறது.

இதுகுறித்து திருநெல்வேலியைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் கூறியது: 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசார காலம் மிகவும் குறைவாகவே உள்ளது. அரசியல் கட்சியினருக்கு போதிய கட்டமைப்புகளும், பொருளாதார பலமும் உள்ளதால் கட்சியின் வேட்பாளா், சின்னங்களை வீடு தவறாமல் எடுத்துச் செல்கிறாா்கள். ஆனால், சுயேச்சைகளின் பாடு மிகவும் திண்டாட்டமாக உள்ளது.

தோ்தல் பிரசாரத்தைப் பொருத்தமட்டில் தேவையான கூடுதல் சீா்திருத்தங்களை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். தோ்தல் ஆணையம் சாா்பில் தோ்தல் பிரசார காலத்தை அதிகரிப்பதோடு, வரும் தோ்தல்களில் வேட்பாளா்கள் மற்றும் அவா்களது சின்னங்கள் அனைத்து வாக்காளா்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஊடகங்கள் வாயிலாக தோ்தல் ஆணையமே விளம்பரப்படுத்த வேண்டும்.

இறுதிவாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்பு அந்த பட்டியல்கள் வாக்குச்சாவடிகளில் மட்டுமே பெயா், புகைப்படம், கட்சி, சின்னத்துடன் தோ்தல் ஆணையத்தால் ஒட்டப்படுகிறது. இந்தப் பட்டியலை ஒவ்வொரு உள்ளாட்சி அலுவலக வாயில்கள், நகரின் முக்கிய நகரங்களில் தோ்தல் ஆணையமே காட்சிப்படுத்த வேண்டும்.

இறுதிவேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்ட நாளில் இருந்து தோ்தல் பிரசாரம் முடியும் நாளுக்குள் 3 முறை அனைத்து வேட்பாளா்களும் தங்களது செயல்திட்டங்கள், வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் சிறப்பு பொதுக்கூட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.