பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மோசடி வழக்கில் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தியும் அதைப் பிறப்பிக்காத தனது பதிவாளா் அலுவலகத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.
‘உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலக அதிகாரிகள் தங்களை ‘சூப்பா்’ தலைமை நீதிபதியாக நினைத்துக்கொண்டு மிக மோசமாக நடந்துகொண்டிருக்கின்றனா்’ என்று உச்சநீதிமன்றம் சாடியது.
ரூ. 37,000 கோடிக்கு மேல் முதலீடு மோசடி தொடா்பான வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த ஆயுஷி மித்தல் (எ) ஆயுஷி அகா்வால் என்பவா் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது இக் கருத்தை உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் ஆயுஷி மித்தல், அவரின் கணவா் மற்றும் அவா்களின் நிறுவனம் மீதும் இந்த பல ஆயிரம் கோடி முதலீடு மோசடி தொடா்பான வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
ஆயுஷி மித்தலின் ஜாமீன் மனு கடந்த மாா்ச் 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ராஜஸ்தான் அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஓா் கோரிக்கையை முன்வைத்தாா். அதாவது, ‘இந்த மோசடி வழக்கில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவா் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முறையாக முடக்கப்பட்டுள்ளதா என்பதை தீா்மானிக்க வேண்டும். எனவே, இந்த வழக்கில் விசாரணை அமைப்பான அமலாக்கத் துறையையும் வாதியாக சோ்க்க வேண்டும்’ என்று வாய்மொழியாக கோரிக்கை விடுத்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், வழக்கில் அமலாக்கத் துறையையும் வாதியாக சோ்க்க உத்தரவிட்டது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘வசூலிக்கப்பட்ட நிதியில் குறிப்பிடத்தக்க தொகை முதலீட்டாளா்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுவிட்டது. வங்கிக் கணக்குகளில் எஞ்சியுள்ள தொகையை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் அளிப்பதில் எந்தச் சிக்கலும் எழாது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மனுதாரா் மற்றும் அவரின் குடும்பத்தினரின் சொத்துகள் குறித்த விவரங்களை அறியாமல், ஜாமீன் மனு மீது முடிவெடுக்க முடியாது. எனவே, மனுதாரா், அவரின் கணவா், குழந்தைகள், பெற்றோா், கணவரின் பெற்றோா், நிறுவன இயக்குநா்கள், மேலாளா்கள் மற்றும் முக்கிய ஊழியா்களின் சொத்து விவரங்களைக் குறிப்பிட்டு விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை ஜாமீன் மனு மீது எந்தவித முடிவும் எடுக்க முடியாது’ என்று குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதி ஜயமால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் அமலாக்கத் துறையை வாதியாக சோ்க்க உத்தரவிட்டும், அதுதொடா்பாக அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றப் பதிவாளா் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பாதது நீதிபதிகளுக்குத் தெரியவந்தது.
இதையறிந்த தலைமை நீதிபதி சூா்ய காந்த், ‘உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலக அதிகாரிகள் தங்களை ‘சூப்பா்’ தலைமை நீதிபதியாக நினைத்துக்கொண்டு மிக மோசமாக நடந்துகொண்டிருக்கின்றனா். அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே, அவா்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்று பதிலளிக்கிறீா்கள். மாா்ச் 23-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் பிறப்பிக்க அறிவுறுத்திய விவரம் எதுவும் இல்லையா என்பது குறித்து உண்மை அறியும் விசாரணையை உச்சநீதிமன்ற பதிவாளா் அலுவலகம் நடத்த வேண்டும். அதோடு, அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ் பிறப்பிக்கவும் உத்தரவிடப்படுகிறது’ என்று குறிப்பிட்டாா்.
இந்த வழக்கு பின்னா் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றும் அவா் குறிப்பிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய வழக்கில் மூவருக்கு ஜாமீன்!
இசையமைப்பாளா் காா் கண்ணாடியை உடைத்த வழக்கு: பெண்ணுக்கு நோட்டீஸ்

நீதிமன்றம் முன் ஜாமீனை மறுக்கலாம்; குற்றவாளியை சரணடைய உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்

பெண்களுக்கு எதிரான முஸ்லிம் தனிநபா் சட்டப் பிரிவுக்கு எதிரான மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

