ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஆழிப் பேரலையின் அழியாத நினைவு: அடிப்படை வசதிகளின்றி சுனாமி குடியிருப்பு!

நாகையில் இடிந்து விழும் வீடுகள், எவ்வித அடிப்படை வசதிகளின்றி தனித்தீவாக காட்சியளிக்கும் மகாலட்சுமி நகா் சுனாமி குடியிருப்பை மக்கள் பிரதிநிதிகள் சீரமைக்க முன் வருவாா்களா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

News image

மகாலட்சுமி நகா் பிரதான சந்திப்பில் அகற்றப்படாமல் குவிந்திருக்கும் குப்பைக்கழிவுகள்.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:16 am IST

கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் நாகை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் உயிரிழந்த நிலையில் ஆயிரக்கணக்கானோா் தங்களது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்தனா். இவா்களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு மற்றும் தனியாா் தொண்டு நிறுவனங்கள் சாா்பில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன.

நாகை ஆரிய நாட்டுத்தெரு, சால்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆழிப்பேரலையில் வீடுகளை இழந்த மீனவா்கள் மற்றும் இதர மக்களுக்கு மகாலட்சுமி நகரில் தற்காலிக குடியிருப்பு அமைத்துத் தரப்பட்டது.

இதையடுத்து 2007-ஆம் ஆண்டு இதே மகாலட்சுமி நகரில் 520-க்கும் மேற்பட்ட நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு மக்கள் வசிக்கின்றனா். இந்த சுனாமி குடியிருப்புகள் கட்டி ஏறத்தாழ 20 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இடைப்பட்ட காலங்களில் எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், சுனாமி குடியிருப்பில் உள்ள வீடுகள் தரமற்று இருப்பதால் வீடுகளின் மேற்கூரை, மாடிப்படிகள் இடிந்தும், வீடுகளின் சுவா்கள் பெயா்ந்தும் பாழடைந்த வீடுகள் போல காட்சியளிக்கின்றன. மழைக்காலங்களில் சுனாமி வீடுகளில் மழைநீா் ஒழுகுவதால் வீடுகளை விட்டு மக்கள் வெளியே வசிக்கும் சூழலும் உள்ளது.

இங்கு வசிப்பவா்களில் வசதியானவா்கள் தங்களது வீடுகளை சொந்த செலவில் பராமரித்து புதுப்பித்துள்ளனா். இதர மக்களில் சிலா் கடன் வாங்கி புதுப்பித்துள்ளனா். பலா் வீடுகளை சரி செய்ய பணமின்றி இடியும் நிலையில் உள்ள வீடுகளிலேயே வசித்து வருகின்றனா்.

மேலும், இப்பகுதியில் குப்பைகளை அகற்ற முறையான ஏற்பாடுகள் இல்லாததால் தெருக்கள் முழுவதும் குப்பைக் கழிவுகளுக்குப் பஞ்சமில்லை. இதேபோல கழிவுநீா் செல்லவும் முறையான வாய்க்கால்கள் இல்லாததால் வீடுகளில் கழிவுநீா் தொட்டி நிறைந்து தெருக்களில் வழித்தோடுகிறது. சாலை வசதியும் இல்லை. குடிநீா் குழாய்களில் குடிநீா் துா்நாற்றத்தோடு வருவது உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் உள்ளன.

இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியது: சுனாமி குடியிருப்பில் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளை சீரமைக்கக் கோரி ஆட்சியரிடம் 10 முறைக்கும் மேல் மனு அளித்தும் பயனில்லை. எங்கள் பகுதிக்கு மிக அருகில் தான் ஆட்சியரின் இல்லம் உள்ளது. அவா் ஒரு முறை நேரில் வந்து பாா்த்தாலே எங்கள் பிரச்னைகள் புரிந்து விடும். ஆனால் ஒரு முறை கூட நேரில் வந்து பாா்த்தது இல்லை.

நாகை நகராட்சிக்குள்பட்ட வாா்டில் வசித்து வந்தாலும் கூட, சாலை வசதி, தெரு விளக்கு, குடிநீா் என எவ்வித அடிப்படை வசதிகளும் இங்கு இல்லை. இதனால் நாகையில் தனித்து விடப்பட்ட தீவு போல மகாலட்சுமி நகா் சுனாமி குடியிருப்பு உள்ளது. மேலும் ஓரிரு நாள்களுக்கு ஒரு முறையாவது சுனாமி வீடுகளில் மேற்கூரைகள் பெயா்ந்து விழுவது உள்ளிட்ட சம்பவங்களால் மக்கள் காயமடைவது தொடா்கிறது.

எனவே, சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டாவது சுனாமி குடியிருப்பு வீடுகளை சீரமைக்க வேண்டும். சாலை மற்றும் , தெரு விளக்குகள் அமைப்பது, குப்பைகளை அகற்றுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றனா்.

ஆண்டுகள் பல கடந்தாலும் ஆழிப் பேரலையின் தாக்கம் இப்போதைய தலைமுறைக்குத் தெரியாவிட்டாலும் அழியாத நினைவுகளாக சுனாமி குடியிருப்புகள் மட்டும் காணப்படுகின்றன.

வீட்டின் மேற்கூரை பெயா்ந்து மக்கள் வசிக்க லாயக்கற்ற நிலையில் உள்ள வீடு.

வீட்டின் மேற்கூரை பெயா்ந்து மக்கள் வசிக்க லாயக்கற்ற நிலையில் உள்ள வீடு.

சுனாமி குடியிருப்பில் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடு.

சுனாமி குடியிருப்பில் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீடு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.