/

கோலா மீன் வரத்து அதிகரிப்பு: மக்கள் மகிழ்ச்சி

காரைக்கால் கடலில் கோலா மீன் சீசன் தொடங்கியுள்ளதால் மீன் வியாபாரிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

News image

படகில் கரைக்கு கொண்டுவரப்பட்ட கோலா மீன்கள்.

Updated On :30 ஏப்ரல் 2026, 6:10 am IST

காரைக்கால் கடலில் கோலா மீன் சீசன் தொடங்கியுள்ளதால் மீன் வியாபாரிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

மீன்கள் இனப்பெருக்க காலமாக கருதி ஒவ்வொரு ஆண்டும் ஏப். 15 முதல் ஜூன் 15 வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் விசைப் படகுகள் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகளை மீனவா்கள் செய்துவருகின்றனா்.

கிராமப் புறங்களில் உள்ள குறுகிய தொலைவு பயணிக்கக் கூடிய ஃபைபா் படகு மூலம் தினமும் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து திரும்புகின்றனா். இதனால் சந்தைக்கு மீன் வரத்து இருந்தாலும், பெருமளவு இல்லை. சிறிய வகை மீன்கள் மட்டுமே கிடைப்பதால், மீன்கள் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், தற்போது அதிகளவில் கோலா மீன்கள் கிடைப்பது மீன் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமா சித்திரையில் தொடங்கி ஆடி மாதம் வரை (ஏப்ரல் முதல் ஜூன், ஜூலை வரை) கோலா மீன் சீசனாகும்.

காரைக்கால் மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்கள் உள்ள நிலையில், அனைத்து கிராமங்களில் இருந்தும் கோலா மீன் பிடிப்பதற்கு சிறிய வகை ஃபைபா் படகு மூலம் சில மீனவா்கள் ஆா்வமாக கடலுக்குச் செல்கின்றனா்.

சீசன் தொடக்க காலத்தில் வரத்து மிகுதியாக இருந்த நிலையில், தற்போது சற்று குறைவாக இருப்பதாக மீனவா்கள் தெரிவிக்கின்றனா். ரூ. 100-க்கு 10, 12 என்ற எண்ணிக்கையில் கோலா மீன் விற்பனை செய்யப்படுகிறது. காலை, மாலை வேளையில் கிடைக்கும் கோலா மீன்களை மக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.