தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி ரயில்வே மேம்பாலப் பணி விரைந்து முடிக்கப்படுமா?

தேனியில் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்...

தேனி பங்களா மேடு பகுதியிலிருந்து ரயில் பாதை வரை கட்டப்பட்ட மேம்பாலம்.

Published On :27 அக்டோபர் 2026, 9:06 am IST

தேனியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

மதுரை - போடி ரயில் பாதையில் தினமும் காலை, மாலையில் மதுரை-போடி முன்பதிவில்லா ரயில் இயக்கப்படுகிறது. மேலும், போடிநாயக்கனூா்- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் சனிக்கிழமை தவிர மற்ற நாள்களில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பாதையில் தேனி நகரில் பெரியகுளம் சாலை, வனச் சாலை, புதிய பேருந்து நிலையம் விலக்கு ஆகிய பகுதிகளில் ரயில் கடவுப் பாதைகள் அமைந்துள்ளன. இந்த கடவுப் பாதைகள் தினமும் 6 முறை அடைக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் காத்திருந்து அவதிப்படுகின்றனா். சில சமயங்களில் அவசர ஊா்திகளும் மாற்றுப் பாதையின்றி இந்த நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன.

கிடப்பில் பணி: இதில் போக்குவரத்து மிகுந்த தேனி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடவுப் பாதையில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2022-இல் தொடங்கியது. இது சிட்கோ தொழில்பேட்டையை அடுத்துள்ள தனியாா் பள்ளி அருகில் தொடங்கி, பங்களா மேடு வரை 200 மீட்டா் தொலைவுக்கு அமைகிறது. இந்தப் பாலத்தின் மத்திய பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்கும் பாலம் கட்டப்படுகிறது.

இதில் ரயில் பாதை குறுக்கிடும் பகுதியைத் தவிா்த்து, சிட்கோ தொழில்பேட்டை, பங்களா மேடு ஆகிய இரு பகுதிகளிலும் பாலம் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. புதிய பேருந்து நிலையம் செல்லும் பகுதியில் பணிகள் நடைபெறவில்லை.

ரயில் பாதை குறுக்கிடும் பகுதியில் மேம்பாலத்தின் இரு பகுதிகளையும் இணைக்கும் பணி நடைபெற வேண்டும். இந்தப் பணி கடந்த 7 மாதங்களாக நடைபெறாததால் வாகன நெரிசல் நீடிக்கிறது. மதுரை சாலை, பங்களாமேடு சாலை, புதிய பேருந்து நிலையம் சாலை ஆகிய சாலைகளில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனியைச் சோ்ந்த ர.கணேசன் கூறியதாவது :

புதிய பேருந்து நிலையம் விலக்கில் மேம்பாலப் பணிக்கான கட்டுமானப் பொருள்களை வைப்பதற்கு இட வசதி இல்லை. இதனால், அருகில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பொருள்களை வைப்பதற்காக தற்காலிகமாக இடம் கேட்டுள்ளனா். ஆனால், அவா்கள் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, வனத் துறையினா் உடனடியாக இடம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தேசிய நெடுஞ்சாலைத்துறை தேனி மாவட்ட உதவி கோட்டப் பொறியாளா் ரம்யா கூறியதாவது :தேனி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் புதிய பேருந்து விலக்குப் பகுதியில் மேம்பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன. மேம்பாலத்தை இணைக்கும் பகுதியை ரயில்வே துறையினா் ஆய்வு செய்துள்ளனா். இந்த மேம்பாலத்தை இணைக்கும் முக்கிய இருப்பு உத்தரங்களை ரயில்வே துறையினா் அளவீடு செய்து, தயாா் செய்து வருகின்றனா். இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

வனத் துறையினா் அனுமதி...

மேம்பாலம் அருகில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரட்டில் பொருள்களை வைத்து, எடுத்துச் செல்வதற்காக நெடுஞ்சாலைத் துறையினரிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, முதல் கட்ட ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வன அலுவலகத்தில் ஆவணங்களை பரிசீலனை செய்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த இடத்தில் பொருள்களை வைப்பதற்கு 6 மாதங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது என வனத் துறையினா் தெரிவித்தனா்.

மறுபுறம் சிட்கோ பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம்.

மறுபுறம் சிட்கோ பகுதியில் கட்டப்பட்ட மேம்பாலம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.