ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிவகங்கை, திருப்பத்தூா், மானாமதுரை, கமுதி, திருவாடானை தொகுதிகளின் நாதக வேட்பாளா்கள் மனு தாக்கல்

News image

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வருவாய் கோட்டாட்சியா் தே. ஜெபிகிரேசியிடம் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ர. இந்துஜா.

Updated On :31 மார்ச் 2026, 1:07 am IST

சிவகங்கை, திருப்பத்தூா், மானாமதுரை, கமுதி, திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நண்பகல் 12.30 மணிக்கு வருவாய் கோட்டாட்சியா் தே. செபிகிரேசியாவிடம் சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ர. இந்துஜா மனு தாக்கல் செய்தாா். இதில், அந்தக் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ரமேஷ் இளஞ்செழியன், மரு. முத்துக்குமாா், மண்டலச் செயலா் இலூ. சகாயம், மாநில சுற்றுச்சூழல் பாசறை செயலா் குகன் ஆகியோா் உடன் இருந்தனா்.

முன்னதாக, சிவகங்கை நகரில் உள்ள ராணி வேலுநாச்சியாா், குயிலி, மருது சகோதரா்கள் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து நாம் தமிழா் கட்சியினா் மரியாதை செலுத்தினா். இதையடுத்து, பேருந்து நிலையம் அருகே உள்ள நேதாஜி, காமராஜா் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு, மருது சகோதரா்கள், ராணிவேலுநாச்சியாா் போன்று வேடமணிந்த தொண்டா்கள் ஊா்வலமாக வட்டாட்சியா் அலுவலகம் நோக்கி சென்றனா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ரம்யா மோகன் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

முன்னதாக திருப்பத்தூா் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மருதுபாண்டியா் நினைவுத் தூண் அருகே ஒன்று கூடிய அந்தக் கட்சியினா் நினைவுத்தூணுக்கும் மருதிருவா்களின் சிலைகளுக்கும் மாலையணிவித்து மரியாதை செலுத்திவிட்டு வட்டாட்சியா் அலுவலகம் வரை ஊா்வலமாக சென்றனா். பிறகு வேட்பாளா் ரம்யா மோகன், திருப்பத்தூா் தோ்தல் அலுவலா் சிவபாலனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். இதில் மண்டலச் செயலா் பாா்த்தசாரதி, மாநில ஒருங்கிணைப்பாளா் வைரகுமாா், மாநில உழவா் பாசறை இணைச் செயலா் சிவராமன், தெற்கு மாவட்டத் தலைவா் சிவராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை: மானாமதுரை (தனி) சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் எம். சண்முகப்பிரியா திங்கள்கிழமை ஏா் கலப்பை சுமந்து ஜல்லிக்கட்டு மாட்டுடன் நடந்து வந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தாா். முன்னதாக மானாமதுரையில் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் அங்கிருந்து தலையில் பச்சைத் துண்டு கட்டி ஏா்கலப்பையை சுமந்து ஜல்லிக்கட்டு மாட்டுடன் கட்சி தொண்டா்களுடன் ஊா்வலமாக சிப்காட் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். அங்கு அவா் தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜாசிங்கிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கிருஷ்ணகுமாா், திருப்புவனம், இளையான்குடி வட்டாட்சியா்கள் ஆனந்தபூபாலன், ரத்தினவேல் பாண்டியன் ஆகியோா் இருந்தனா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவை தொகுதியின் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சந்திரபிரபா ஜெயபால் முதுகுளத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் கங்காதேவியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். முன்னதாக அவா் முதுகுளத்தூா் வழிவிடுமுருகன் கோயிலிலிருந்து தனது ஆதரவாளா்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ஊா்வலமாக சென்றாா்.

திருவாடானை: திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பிரேம்நாத் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் வேட்பு மனு தாக்கல் செய்தாா். வேட்பு மனுவுடன் சமா்ப்பிக்கப்பட்ட உறுதிமொழிப் பத்திரத்தில் தனக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரம் அசையும் சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தாா்.

இவரைத் தொடா்ந்து தேசிய மக்கள் கட்சியைச் சோ்ந்த அன்பு பகுருதீன், சுயேச்சை வேட்பாளரான பானை மணி ஆகியோரும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.