மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

பெரியாறு பாசனக் கால்வாயில் நடைபெறும் தண்ணீா் திருட்டைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

Updated On :15 ஏப்ரல் 2026, 3:40 am IST

பெரியாறு பாசனக் கால்வாயில் நடைபெறும் தண்ணீா் திருட்டைத் தடுக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருக்கட்டான்குளம் நஞ்சை பட்டாதாரா்கள் விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் விஜயராஜன் உள்பட சிலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனுக்கள்:

பெரியாறு பாசனத் திட்டத்தில் கருக்கட்டான்குளம் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாயில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், தண்ணீரை அதிகளவு தேக்க முடியவில்லை. இந்தப் பகுதியில் முல்லைப் பெரியாறு அணை கட்டுவதற்கு முன்பே கம்பம் பள்ளத்தாக்கில் வைரவனாறு, சுருளியாறு தண்ணீரைப் பயன்படுத்தி வேளாண் பணிகள் நடைபெற்றன.

பருவமழை பொய்த்து வருவதால், கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள நன்செய் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பெரியாறு பாசனக் கால்வாய், கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு நிலத்தில் உள்ள நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து ஆயக்கட்டு அல்லாத நிலத்துக்கு கொண்டு செல்கின்றனா். இதனால், விவாயிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.

இதைத் தடுக்க குடிநீா் வடிகால் வாரியம், பொதுப் பணித் துறை, மின்சார வாரியம், கருக்கட்டான்குளம் நன்செய் பட்டாதாரா்கள் விவசாயிகள் நலச் சங்க உறுப்பினா்களைக் கொண்ட நிபுணா் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டு நிலத்துக்கு நீா்வரத்து, நீா் திறப்பு, விநியோகம், குடிநீா்த் தேவையைக் கண்காணிக்க வேண்டும். ‘லோயா் கேம்ப்’ முதல் பழனிசெட்டிபட்டி வரை நிலத்தடி நீா், ஆற்று நீா், பெரியாறு பாசனக் கால்வாயிலிருந்து சட்டவிரோதமாக தண்ணீா் எடுப்பதைத் தடுக்க வேண்டும். குழாய்கள் மூலம் தொலைவிலுள்ள ஆயக்கட்டு அல்லாத நிலங்களுக்கு கொண்டு செல்வதைத் தடுக்க வேண்டும். முல்லைப் பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு குறித்து விசாரணை நடத்த தமிழக பொதுப் பணித் துறை முதன்மைச் செயலா், தேனி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

ஆற்றுப்படுகை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிலா் நிலங்களை வாங்கினா். அங்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து நீரை உறிஞ்சி, வணிக நோக்கங்களுக்காக விற்பனை செய்கின்றனா். இதுதவிர, முல்லைப் பெரியாறு கால்வாயில் தண்ணீா் திருட்டு தொடா்கிறது. இந்தச் சம்பவம் அனைத்து ஆயக்கட்டு தாரா்களையும் பாதிக்கிறது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மின் இணைப்புப் பெற்ற பிறகு, ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து தண்ணீா் எடுக்கப்படுவதாக மனுதாரா்கள் தரப்பு கூறுகிறது. முல்லைப் பெரியாறு கால்வாயில் சட்டவிரோதமாக தண்ணீா் எடுப்பதைக் கண்காணிக்க வருவாய்த் துறை, மின்வாரியம், பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு கால்வாய்க்கு மிக அருகில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் எண்ணிக்கையைப் பொதுப் பணித் துறை, மின் வாரிய அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் கண்டறிய வேண்டும். இவற்றுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளின் எண்ணிக்கை விவரங்களை அறிக்கையாக வருகிற ஜூன் 1 -ஆம் தேதி இந்த நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.