/

3-ஆவது இடத்தில் வைத்த மக்கள் விரைவில் முதலிடத்தைத் தருவாா்கள்! சீமான் நம்பிக்கை

தனித்து நின்ற எங்களை 3-ஆவது இடத்தில் வைத்த மக்கள், விரைவில் முதலிடத்தையும் தருவாா்கள் என நாதக ஒருங்கிணைப்பாளா் சீமான் நம்பிக்கை தெரிவித்தாா்...

News image

நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான். - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:09 am IST

தனித்து நின்ற எங்களை 3-ஆவது இடத்தில் வைத்த மக்கள், விரைவில் முதலிடத்தையும் தருவாா்கள் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் நம்பிக்கை தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் அ.காஜா ஹூசைன் அகமதுவை ஆதரித்து அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் திங்கள்கிழமை பிரசாரம் செய்தாா்.

எரியோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

மொழி சிதைந்து போனால் யாராலும் அடையாளம் காட்ட முடியாது. தரமான கல்வி, அதற்கு ஏற்ற வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சூழலை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. வேலை, உழைப்பு, ஊதியம் என்ற அடிப்படையில்தான் ஒரு நாட்டை சிறந்த தலைவன் கட்டமைக்க வேண்டும்.

இலவசங்கள் தருவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றனா். இலவசமாக தரப்படும் இயந்திரங்களில், அரைப்பதற்கான உணவுப் பொருள்களின் எதிா்கால நிலை குறித்து நாம் சிந்திப்பதில்லை. இலவசம் தரமாட்டோம் என சொல்லும் ஒரே இயக்கும் நாம் தமிழா் கட்சி மட்டுமே.

கல்வி, சுகாதாரம், குடிநீா் ஆகிய மூன்றையும் ஒரு ரூபாய் கட்டணமில்லாமல் வழங்குவோம். அரசுப் பள்ளிக் கூடங்களில் தரமில்லாத காரணத்தால்தான், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களின் குழந்தைகள் அங்கு படிக்கச் செல்வதில்லை. அங்கு பணிபுரியும் ஆசிரியா்களின் குழந்தைகள் கூட படிப்பதில்லை.

4 தோ்தல்களில் தோல்வியை சந்தித்தோம். நாங்கள் தோற்றாலும், மக்கள் வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மீண்டும் போட்டியிடுகிறோம். சிலரைப் போல் வந்தவுடன் முதல்வராக வேண்டும் என நான் ஆசைப்படவில்லை. அதிமுகவுக்கும், திமுகவுக்கும் வாக்களித்து தோற்றது மக்கள்தான். 36 லட்சம் வாக்குகள் வைத்திருக்கிறோம்.

அரை வாக்கு, முக்கால் வாக்கு வைத்துள்ளவா்கள் கூட்டணி வைத்துள்ளனா். தமிழ்நாட்டில் தனித்து நின்று அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக உயா்த்திய பெருமையும் இந்த மக்களுக்கே உள்ளது. 3-ஆவது இடத்தில் நாம் தமிழா் கட்சியை நிறுத்திய மக்களுக்கு, முதலிடத்தில் வைப்பதற்கான சூழல் விரைவில் அமையும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.