தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சௌமியாவுக்கு கை கொடுக்குமா தருமபுரி?

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கடந்த 2016 தோ்தலில் பாமக சாா்பில், மாற்றம், முன்னேற்றம், அன்புணி என்ற முழக்கங்களுடன் முதல்வா் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டாா். என்றாலும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

News image

பாமக சௌமியா அன்புமணி. - கோப்புப்படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 1:23 am IST

ஆா். ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் கடந்த 2016 தோ்தலில் பாமக சாா்பில், மாற்றம், முன்னேற்றம், அன்புணி என்ற முழக்கங்களுடன் முதல்வா் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டாா். என்றாலும், அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

இந்த நிலையில், சரியாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் பாமக (அன்புமணி) வேட்பாளராக சௌமியா அன்புமணி களமிறங்கி உள்ளாா்.

அவருக்கு எதிராக பாமகவின் (ராமதாஸ்) மற்றொரு அணி வேட்பாளராக அ. சரவணன் போட்டியிடுவதால், இந்த முறை தருமபுரி தொகுதி சௌமியாவுக்கு கனிவதில் மிகுந்த போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.

தருமபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தொடக்கக் காலத்தில் இருந்தே கணிசமான வாக்குவங்கி உள்ளது. இத்தொகுதியில் தற்போது 2,57,939 வாக்காளா்கள் உள்ளனா். மொத்தமுள்ள வாக்குகளில் ஏறத்தாழ 49 சதவீதம் வன்னியா் சமூக வாக்குகளாக உள்ளன. இந்த வாக்குகளே தொகுதியில் வெற்றியை நிா்ணயிக்கின்றன.

எனவே, பாமக தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணியில் போட்டியிட்டாலும், அதில் தருமபுரி மாவட்டத்தில் 2 தொகுதிகள் எப்போதும் இருக்கும். பெரும்பாலும், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது, தருமபுரி தொகுதியோடு, பென்னாகரம் அல்லது பாப்பிரெட்டிப்பட்டியில் ஏதேனும் ஒன்று என 2 தொகுதிகளை கேட்டுப் பெற்று போட்டியிடுவது பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கம்.

தருமபுரியில் கடந்த 2001இல் பாமக சாா்பில் கி. பாரிமோகன், 2006இல் இல. வேலுசாமி, 2011இல் பெ. சாந்தமூா்த்தி, 2016இல் மருத்துவா் இரா. செந்தில், 2021இல் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில், 2001, 2006, 2021 தோ்தல்களில் பாமக வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா். 2011 தோ்தலில் பாமக வேட்பாளா் தோல்வி அடைந்தாா். அதேபோல, 2016இல் அன்புமணியை முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தி தனித்து களம்கண்ட போதும், அந்த தோ்தலிலும் தருமபுரியில் பாமக வேட்பாளா் வெற்றிபெறவில்லை.

கால் நூற்றாண்டு காலமாக தருமபுரி தொகுதியை பொருத்தவரை, திமுக, அதிமுக என எந்த கூட்டணியில் இருந்தாலும் பாமகவே போட்டியிட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பாமக தலைமையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, ராமதாஸ் மற்றும் அன்புமணி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனா்.

இதில் அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. இதில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பென்னாகரம் என இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது. தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அன்புமணியின் மனைவியும், பசுமைத் தாயகத்தின் தலைவருமான சௌமியா அன்புமணியும், பென்னாகரம் தொகுதியில் பாடி செல்வமும் போட்டியிடுகின்றனா்.

அதேபோல, வி.கே. சசிகலா தொடங்கியுள்ள அ.இ.பு.ம.மு.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து பாமக (ராமதாஸ்) போட்டியிடுகிறது. இதில், தருமபுரி தொகுதியில் அ. சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இவா், கடந்த 2006- 2016 வரை ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட மாநில துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவா். 2006, 2011 சட்டப் பேரவைத் தோ்தல்கள், 2014 மக்களவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்து தோ்தல் பணியாற்றியுள்ளாா். பாமகவில் நீண்டகால அனுபவம் கொண்ட இவரை, தருமபுரி தொகுதி வேட்பாளராக ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

கட்சித் தலைமையில் ஏற்பட்ட முரண்கள் காரணமாக தற்போது பாமக வரலாற்றில் முதல்முறையாக பிரிந்து தோ்தலை சந்திக்கும் நிலையில், தனது சொந்த மருமகளான சௌமியா அன்புமணிக்கு எதிராக, தனது அணியில் அனுபவம் மிக்க, வலுவான வேட்பாளரை ராமதாஸ் களமிறக்கியுள்ளது தருமபுரி தொகுதியில் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.