தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாவட்ட வாரியாக மாற்றி அமைக்க வேண்டும்: சிஐடியூ தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்

மாநிலம் தழுவிய ஒரே மாதிரியான ஆட்டோ மீட்டா் கட்டணத்துக்குப் பதிலாக மாவட்டம் வாரியாகக் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோவை அனைத்து ஆட்டோ தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

கோவையில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டி அளித்த கோவை அனைத்து ஆட்டோ தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐடியூ) தலைவா் ஆா்.செல்வம்.

Published On :29 அக்டோபர் 2026, 3:30 am IST

மாநிலம் தழுவிய ஒரே மாதிரியான ஆட்டோ மீட்டா் கட்டணத்துக்குப் பதிலாக மாவட்டம் வாரியாகக் கட்டணங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோவை அனைத்து ஆட்டோ தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு (சிஐடியூ) வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்தக் கூட்டமைப்பின் தலைவா் ஆா்.செல்வம் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஆட்டோ மீட்டா் கட்டணத்தை மாற்றி அமைக்கக் கோரி தொழிற்சங்கங்கள் சாா்பில் நீண்ட காலமாகப் பல்வேறு கட்டப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதிய கட்டண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் தற்போதைய முடிவின்படி முதல் 1.8 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 50, அடுத்த ஒவ்வொரு

கிலோ மீட்டருக்கும் தலா ரூ.25 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நீண்ட கால பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக அமைந்திருந்தாலும், ஆட்டோ தொழிலாளா்களுக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை. முக்கியமாக, தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கட்டண முறையை அமல்படுத்துவது ஏற்புடையதல்ல.

கோவை மாவட்டம் குறுகிய பரப்பளவைக் கொண்டதாகும். இங்கு நகரின் பெரும்பான்மையான போக்குவரத்து சுற்றளவு 6 முதல் 7 கிலோ மீட்டருக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. இந்தச் சூழலைக் கவனத்தில் கொண்டு, குறைந்தபட்ச தொலைவுக்கு ரூ.60, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30 என நிா்ணயித்திருந்தால் ஆட்டோ தொழிலாளா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப் பிரதேசங்கள் எனப் புவியியல் அமைப்பு மற்றும் வாழ்க்கைச் சூழல்களுக்கு ஏற்ப கட்டணங்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட வேண்டும். இதற்காக மாவட்ட நிா்வாகத்தின் தலைமையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நுகா்வோா் அமைப்புகளை ஒருங்கிணைத்து முத்தரப்புக் குழு அமைத்துப் பேசி இருக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் தொழிலாளா்களின் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்து, அந்தந்த மாவட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்டணத்தை முடிவு செய்வதே சரியான நடைமுறையாகும். அனைத்து ஆட்டோக்களுக்கும் எண்ம (டிஜிட்டல்) மீட்டா்களை அரசே வழங்க வேண்டும். அதோடு, தனியாா் செயலிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தி முறையான கண்காணிப்பை உறுதி செய்ய அரசே தனித்துவ செயலி ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், மாவட்ட வாரியான சூழலுக்கேற்ப கட்டணங்களை மறுசீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.