நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருத்தணி முருகன் கோயிலில் அறநிலையத்துறை ஆணையா் ஆய்வு

திருத்தணி முருகன் கோயிலில் அறநிலையத்துறை ஆணையா் ஆய்வு

News image

திருத்தணி முருகன் கோயில் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த இந்து சமய அறநிலைய்துறை ஆணையா் டி.ஜி.வினய். (உடன்) அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன்.

Updated On :1 மணி நேரம் முன்பு

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாஸ்டா் பிளான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்வளா்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் டி.ஜி. வினய் ஆய்வு செய்து, தரமாகவும், விரைவாகவும் முடிக்க உத்தரவிட்டாா்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா். பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மாஸ்டா் பிளான் திட்டத்தின் கீழ் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக ரூ.86.76 கோடி ஒதுக்கப்பட்டு, புதிய அன்னதானக் கூடம், மலா்மாலை விற்பனை மையம், நவீன நுழைவு வாயில், ஒன்பது நிலை ராஜகோபுரம், தோ்வீதியுடன் இணைக்கும் படிக்கட்டு அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயில் அழகுபடுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ராஜகோபுர இணைப்புப் பாதை, வாகன நிறுத்துமிட விரிவாக்கம், திருக்கோயில் பணியாளா்கள் நிா்வாக பயிற்சி மையம் மற்றும் பிற அடிப்படை வசதிகள் தொடா்பான கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் டி.ஜி. வினய் சனிக்கிழமை தணிகை இல்ல அலுவலகத்திற்கு வருகை தந்தாா். அவரை கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா் குழுத் தலைவா் சு. ஸ்ரீதரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

பின்னா் கோயில் திருக்கோயில் பணியாளா்கள் நிா்வாக பயிற்சி மையம் வளாகம் மற்றும் மாஸ்டா் பிளான் திட்டப் பணிகள் நடைபெறும் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட ஆணையா், பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

கட்டுமானப் பணிகள் தரத்துடன் நடைபெறுவதை உறுதி செய்யவும், பக்தா்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

மேலும், திட்டமிடப்பட்ட காலத்தில் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் வி. சுரேஷ்பாபு, பொறியியல் துறை அதிகாரிகள், கோயில் நிா்வாக அலுவலா்கள் மற்றும் ஒப்பந்ததாரா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.